உலகமயமாக்கல் எனும் பெரும்கனவால் புலம் பெயர் மக்கள் நிறைந்திருக்கும் இந்த உலகில் சொந்த ஊர் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்பது என்பது அரிது. அடுத்த தலைமுறைக்கு அது ஒரு தேவதைக் கதையாய் ஆகிவிடக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு.
ஆனால் ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் தமிழ்ச்சங்கம் சார்பில் ஏப்ரல் 22 சனிக்கிழமை அன்று ஹாம்பர்க் மாநகரில், போர்ன்ஹெய்டே மக்கள் உள்ளரங்கில் ,300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் கொண்டாடப்பட்ட தமிழ்ப்புத்தாண்டு 2023 விழாவானது அத்தகைய சாத்தியக்கூறுகளை எல்லாம் அடித்து நொறுக்குவதாய் அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.
கண்கவர் வேட்டி ,பட்டுப் பாவாடை சட்டை சரசரக்க சிறுவர் சிறுமியரும். பாரம்பரிய ஆடைகளில் ஆண்களும் பெண்களும் சுற்றி வந்த அரங்கும் ,மலர்த் தோரணங்களாலும், பனையோலை தொங்கல்களாலும் அலங்கரித்திருந்த மேடையும் , தமிழகக் கிராமம் ஒன்றை நம்முன் பெயர்த்து வைத்ததுபோல் அமைந்திருந்தது.
தமிழ்ப்பண் இசைக்க ,சிறப்பு விருந்தினர்கள் ஹனோவர் நகர்மன்ற உறுப்பினர் முனைவர் பாலசுப்ரமணியன் ரமணி , ஹாம்புர்க் பல்கலைக்கழக இந்திய மற்றும் திபெத்திய கலை மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் Eva Wilden அவரது துணைவர் தமிழ் ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர் முனைவர் Jean-Luc Chevillard , இந்திய இணை தூதரக கவுன்சில் ஜெனரல் குல்ஷன் டிங்ரா, மோனிகா டிங்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்ற , விழாவானது மாலை 2.15 மணிக்கு இனிதே துவங்கியது .
ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாதமி சார்பில் வெளியிடப்போகும் தமிலெக்ஸ் எனும் தமிழ் மொழிக்கான பேரகராதி குறித்த தகவல் முனைவர் Eva Wilden அவர்களால் பகிரப்பட்டது.சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்து மற்றும் கருத்துமிகு உரைகளுக்குப்பின் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளானது பார்வையாளர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது. குழந்தைகள் ,பெரியோர் பங்குபெற்ற கண்கவர் ஆடல், பாடல், இசை, பேச்சு, மாறுவேடம் என ஒருபுறமும் தமிழர் பண்பாடு சார் விளையாட்டுகளான 'குலை குலையாய் முந்திரிக்காய் ,உள்ளே வெளியே ,ஒரு குடம் தண்ணி ஊத்தி ' மேலும் சிறப்புமிகு வில்லுப்பாட்டு என மறுபுறமும் கூட்டத்தை தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டன குழந்தைகள்.
குழந்தைகளின் இந்த அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தைப் பாராட்டி, அவை மேலும் பெருகும் வகையில் விழாவில் பங்குகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் "தமிழர் பண்பாடும் பாரம்பரிய விளையாட்டுகளும் " எனும் புத்தகமும் "எலியின் பாஸ்வேர்டு "எனும் புத்தகமும் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது .
நாட்டுப்பண் ஒலிக்க இரவு 8 மணியளவில் நிறைவுபெற்ற விழாவிற்குப்பின் சுவையான,நிறைவான இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அடுத்த விழாவில் ஹாம்பர்க் நகர்வாழ் தமிழ் சொந்தங்கள் மீண்டும் சந்திப்போம் என்ற மகிழ்வுடன் இரவு 10 மணியளவில் கூட்டம் மெல்ல கலையத்துவங்கியது.
விருந்தினர் வரவேற்பு: சுதாகர் செல்வராஜ்; வரவேற்புரை: ஜெயக்குமார் சுகுமாரன்; நன்றியுரை: பிரதீப் கிருஷ்ணன்; நிழற்படம்: அருண் பிரகாஷ், ராஜா கார்த்திகேயன் மற்றும் சங்கர நாராயணன்.
- தினமலர் வாசகர் ஜெயக்குமார்
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.