இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 1993-ஆம் ஆண்டு புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக்கழகத்தில் சந்தித்து 1997-இல்பொறியியல் பட்டப்படிப்பைப் படித்து முடித்தோம். எங்களில் சிலர் வட அமெரிக்காவில்உள்ள கனடா மற்றும் மெக்சிகோவிலும்,பலர் அமெரிக்காவிலும் வசிக்கின்றோம். நாங்கள் அனைவரும் எப்போதாவது ஒருவரையொருவர் சந்தித்தாலும், கடந்த 25 ஆண்டுகளில் நாங்கள் ஒரு குழுவாகஅனைவரும்இணைந்து சந்தித்ததில்லை.
சம்சுதீன்,ராமகிருஷ்ணன்,நஹீத்,ஜெயக்குமார், ரகுராமன்மற்றும்ராஜ்குமார் ஆகியோரின் முயற்சியால் நாங்கள் அனைவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் சந்திக்க ஒப்புக்கொண்டோம். நாங்கள் வட அமெரிக்காவில் அனைத்து திசைகளிலும் பரவி வாழ்வதால் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவுசெய்து மே-2023-இல் சந்திக்க உறுதி பூண்டோம். டல்லாஸ் அமெரிக்காவில்வேகமாக வளர்ச்சி அடையும் ஒரு நகரமாகும்.
வெளி நாடுகளில் வேலைக்கு வந்த போது சம்பளத்தை தாண்டி மற்றவர்களை விடத் திறமைசாலிகள் என்று பெருமிதம் கொண்டோம். இந்த மூன்று தசாப்த இடைவெளி இல்லாவிட்டால் இந்த மறுசந்திப்பு அர்த்தமுள்ள வாழ்க்கைப் பாடங்களை எங்களுக்கு அளித்திருக்காது. எங்கள் முதல் இந்திய கடவுச்சீட்டை நாங்கள் பெற்ற போது மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். பின்னர் அதை வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக ஒப்படைத்தோம்.
அமெரிக்காவில் கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கையில், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய வாழ்க்கை, குழந்தைகள், கலாச்சாரம், நண்பர்கள் முதலியன. புத்தகங்களைப் படிப்பதன் மூலம் எளிதில் புரிந்துகொள்ள முடியாத பல அனுபவங்களை இந்த வாழ்க்கைப் பயணம் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. வெவ்வேறு இனங்கள் மேலும் வெவ்வேறு நாட்டு மக்களுடன் வாழ நாங்கள் பழகிக்கொண்டோம்.
எங்கள் வேலை மற்றும் மேலதிக படிப்பை நாங்கள் அதிகமாக விரும்பினாலும் இத்தருணத்தில், அதற்கு உச்சவரம்பு இல்லை என்று நாங்கள் உணர்கின்றோம். இப்போது 'நமக்காக நம் வாழ்க்கையை வாழ்வோம், எல்லாவற்றிலிருந்தும் சற்று ஓய்வு எடுத்து அடுத்த தலைமுறைக்காக என்ன செய்ய வேண்டும்” என்ற எண்ணம் மேலோங்கி எழுந்துள்ளது.
நாங்கள் ஒரு பெயருக்காகச் சந்திக்கவில்லை. இச்சந்திப்பில் அனைவரும் மிகவும் வெளிப்படையாகவும்உண்மையான அன்புடனும் நம்பிக்கையுடனும்நேரத்தை செலவிட்டோம். அனைவரும் அனைத்து வேலைகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆரவராத்தோடு பங்குபெற்றோம்.ஒருவர் அதற்கும் மேலேசென்று இன்ஸ்டாகிராம் ரீல்களுக்காக நடனம் அமைத்துஅனைவரையும் ஆடவைத்தார்.
மற்றொருவருவரின்கேக்நம் தாய்நாட்டின் பேக்கரி சுவையை நினைவூட்டியது. இச் சந்திப்பிலிருந்து நல்ல பல கருத்துக்களை எடுத்துச்செல்வதற்கான அர்த்தமுள்ள உரையாடலை ராமகிருஷ்ணன் தொடங்கினார். அது இந்த மறுசந்திப்பின் மற்றொரு பரிமாணத்தை எட்டியது. இப்போது எங்கள் குழந்தைகளுக்குத் தெரியும், முப்பது வருடங்கள் கழித்து நாங்கள் அனைவரும் ஒரே ரிசார்ட்டில் மூன்று நாட்கள் தங்கினோமென்று. அது எங்கள் நீண்ட வருட நட்புறவையும் நம்பிக்கையையும் குழந்தைகளுக்கு மறைமுகமாகவே எடுத்துச் சொல்வதாக உணர்ந்தோம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்வியறிவு தொழில் வளர்ச்சிக்கும் பணம் சம்பாதிக்கவும் உதவாதென்பதால்கற்ற கல்வியைச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தும் திறத்தை குழந்தைகளிடம் எவ்வாறு வளர்ப்பது என்று விவாதித்தோம். அமெரிக்காவில் உள்ள செல்லப் பிராணிகளிடம் மக்கள் காட்டும் அன்பை நாம் பெரும்பாலும் நம் நாட்டில் பார்க்க முடியாது என்றும், உடற்பயிற்சிகள், குழந்தைகளின் தன் திறன் ஊக்குவித்தல், ஓட்டம், ஜாகிங், சைக்கிள் ஓட்டுவது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, மாவட்ட நூலகங்களில் புத்தகக்கிளப்களில் பங்கேற்பது, உணவு பாதுகாப்பு, தோட்டம், போட்டோக்ரபி, வீடியோ, குறும்படம் இயக்குதல் மற்றும் சுற்றுலாப் பயணம் ஆகியவை மேலும் விவாதிக்கப்பட்ட பல நல்ல விஷயங்கள்ஆகும்.
இந்த ரீயூனியனின் பெரும்பாலான கலந்துரையாடல் சிறப்பம்சங்கள், நண்பர்களின் இன்றைய எண்ண ஓட்டங்கள், வேலை அனுபவங்கள் மற்றும் மாணவர் வாழ்க்கையிலிருந்து புலம்பெயர்ந்த வாழ்க்கை முறைக்கு நாங்கள் மாறியது ஆகியவற்றைப் படம்பிடித்து இந்த ரீயூனியனில் பங்கேற்ற பின் நான் எழுதிய ஒரு தமிழ்க் கவிதை இங்கே.
காசு பணம் சேர்க்க மட்டுமின்றி நாம்
கற்ற கல்வி திறமை எனத் தான்
கருதி கடல்கள் பல பறந்த நாம்
கால் நூற்றாண்டு காலம் கழித்தபின்
வந்துழைத்தே நம் நாட்டுக் கடவுச்சீட்டை
வரமெனக் கருதியதைத் தான் துறந்தே
வசித்த வேறு கடவுச்சீட்டை
வரவு என வரவேற்றுப் பெற்று
புதுவழி புது வாழ்வென பலபல
புரிதல் உணர்ந்து பல பனுவல்
புதுமனை புதுக் கலாச்சாரம்
புத்துயிர் நண்பர்களெனக் கழித்து
யாதும் எவரும் எம்மவர்கள் என
யாத்திரை பல களித்தே
யாத்திசை பிறந்து வளர்ந்தே
யாவரும் இசைந்தே ஆயத்தம் ஆகி
காலம் பல மாறி கடந்து
கடமை எல்லை இல்லை என உணர்ந்து
கடந்த காலக் காட்சிகள் மீண்டும்
காண ஏற்பாட்டாளர்முயற்சியின் மேலாய்
வெறும் பேச்சு வெற்றுச் செயல்
வெளித்தோற்றம் என இல்லா
வெளிப்படையாய் பழகி
வெற்றிக் களிப்பில் வந்தவர் திகைத்தோர்
அல்லப் பாலின பேதம் என்றுரைக்கப் பெண்டிர்
அனைவர் மனதை வென்று ஆடவரை
அரவணைத்து ஆடவைத்தஒரு நடனமங்கை
அன்னை அன்புசுவை இனியப்பம்
வந்தோம் சென்றோம் மறந்தோம் இல்லை
வந்தோர் மறந்தோர் மன அழுத்தம்
வசந்தம் பிறந்ததென எண்ணி
வரவேற்போம் பல முறை மீண்டும் கூட
எடுத்துச் செல்ல என்ன இங்கே
என்றே கூடி வினவக் கதைத்துக் கண்டோம்
எமது பிள்ளைகள் கண்டார் இப்படியோர்
எம் நட்பு எப்படியெனவேறென்ன வேண்டும் மேலே
கடந்த காலக் குற்றம் பல களிப்பாய்
கண்டோம் கலந்துரையாடினோம்
கற்றோர் பலர் பெற்றார் வெற்றி
கல்வியோடு வேண்டும் இங்கு சமயோதித புத்தி
உயிர் ஒன்றேதான் யாவருக்கும்
உடற்பயிற்சி வேண்டும் தினந்தோறும்
உண்மை உணர்ந்தோம் இம்முறை கூடி
உணர்வோடு சந்திப்போம் இதுபோல் பல!
எங்களின்முப்பது வருட புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் மாணவ நட்பு வட அமெரிக்காவில் தொடர்வது போல இந்த தலைமுறைமாணவர்களும்மனித நேயம்பாராட்டிஅவர்களது நட்பைத் தொடரவேண்டுகிறோம்.
- தினமலர் வாசகர் முருகவேலு வைத்தியநாதன் PTU (PEC 1993-97) முன்னாள் மாணவர்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.