செய்திகள்

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன்

ஜூலை 02,2020 

மனித இனம் தன் வரலாற்றில் இதுவரை கண்டிராத வைரசின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கிறது. உலகமே கொடிய சூழலில் அகப்பட்டு கொண்டுள்ளபோது மும்பை நகரம் மட்டும் விதிவிலக்கா என்ன? மும்பை மட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்தின் பல இடங்களிலும் முறைசாரா தொழிலாளர்களும், மும்பையிலேயே தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்கள் படும் வேதனை கண்டு பலரும் செய்வதறியாது கையறு நிலையில் புலம்பித்தவிக்க உங்கள் துயர் துடைக்க நானிருக்கிறேன் என ஒருஜோடி கைகள் நீண்டன. அந்தக் கைகளுக்குரியவர் வேறுயாருமல்ல மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். நம் தமிழகத்தைச் சார்ந்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தவர். சேரன்மாதேவியில் துணை ஆட்சியராக தனது அரசுப் பணியை துவங்கியவர். முதல்வர் நிவாரண நிதி மத்திய, மாநில அரசுகள் கொரோனா தீ நுண்மத்தை எதிர்த்து போராடி வருகிறது. இப்போராடத்தில் மகாராஷ்டிரா தொழில் வளர்சிக் குழுமமும், தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்களும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு முழுவீச்சில் துணை நின்றன. மகாராஷ்டிரா மாநில அரசுக்கு, மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தொழிற்பேட்டை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்று 90 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார். மட்டுமின்றி, மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பிலும் 11 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அரசுக்கு வருவாயை அதிகரிக்க எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மூலம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 


பசிப்பிணி போக்கும் அறத்தொண்டு. கொரானாவின் பெருந்தொற்றின் தீ விளைவால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொரோனா தீ நுண்மத்தை எதிர்த்து தனது போராட்டத்தை துவங்கினார் முனைவர். பொன்.அன்பழகன் ஐ.ஏ.எஸ். பல்வேறு களப்பணிகள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டார். எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்கள் மூலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உணவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறார். 


மக்கள்படும் இன்னல்களை நேரடியாக கண்டு, 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் பெருங்கருணையை தன்னுள்ளே கொண்டு இன்னலுறும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்தார். இந்நெருக்கடியான சூழ்நிலையில் எம்.ஐ.டி.சியை சார்ந்துள்ள நிறுவனங்களின் அதிபர்கள் ஒத்துழைப்புடன் பசிப்பிணியாற்றும் பெரும்பணி யினை செய்ய முன்வந்தார். 


பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது குறித்து பல்வேறு தொழிற்பேட்டை நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முதற்கட்டமாக சற்றொப்ப 1,87,50,000. 00 ரூபாய் மதிப்புள்ள 3 லட்சம் கிலோ உணவுப் பொருட்கள் வழங்குவதென்ற பெரும்பணியினை மேற்கொண்டார். இதனால் சற்றொப்ப 18,750 குடும்பங்கள் பயனடைந்தன. எம்.ஐ.டி.சியின் அரசு அதிகாரிகள், தொழிற்பேட்டை நிறுவனங்கள், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மூலமாக மகாராஷ்டிராவின் ஹிங்கோலி, அக்கோலா, சத்தாரா, சோலாப்பூர், கோலாப்பூர், புனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செய்து முடித்தார். 


கடந்த இரண்டரை மாதங்களாக மும்பையில் தாராவி, மாகிம்‌, மட்டுங்கா, ஒர்லி, மார்க்கண்டேஷ்வர்‌ நகர்‌, ஆனந்த்‌ நகர்‌, ரேரோடு, சிவ்ரி, அந்தேரி, கோரேகாவ்‌, மலாடு, வில்லேபார்லே, கல்யாண்‌, தானே, காந்திவலி, அம்பர்நாத்‌, குண்டோலி, சீத்தாகேம்ப்‌, நாலா சோப்பாரா, தலோஜா எம்.ஐ.டி.சி, துர்பே நாக்கா உள்ளிட்ட பகுதிகளில்‌ வாழும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.  இதற்கிடையே புனே, மாலேகாவ்,அவுரங்காபாத்‌ போன்ற மாவட்டங்களில்‌ கொரோனா பெருந்தொற்று பரவியது. இதனால்‌, அங்கு வாழும்‌ மக்கள்‌ உணவின்றி தவிப்பதை அறிந்து அம்மக்களுக்கும்‌ எம்.ஐ.டி.சி அதிகாரிகள்‌ மூலமாக உணவு பொருட்களை கொண்டு சேர்த்தார்‌. 


மும்பையில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே ஆகப்பெரிய குடிசை பகுதி தாராவி. மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் போதிய அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவரும் பகுதிகளில் தாராவி முதல் இடத்தில் இருக்கிறது. இதனால் மக்கள் உயிர் அச்சத்துடனேயே தங்கள் வாழ்நாளை கடத்த வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டதால் உணவின்றி குடிசைகளுக்குள் முடங்கிப்போயினர். தாராவி வாழ் மக்களின் பெருந்துயரத்தைக் கண்ணுற்ற முனைவர் பொன்.அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்கள் அம்மக்களின் பசிப்பிணி போக்க மாந்த நேயத்துடன் இரண்டாம் கட்டமாக உணவுப் பொருட்களை வழங்கவதென்றும் முடிவுசெய்தார். 


மே 25 ஆம் தேதி மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் அவர்களும், மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ் மற்றும் எம்.ஐ.டி.சியைச் சார்ந்த அதிகாரிகளும் இரண்டாம் கட்ட உணவு வழங்கும் பெரும்பணியினை தொடங்கி வைத்தார்கள். முதலில் தாராவியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக 1,25,00,000.00 ரூபாய் மதிப்புள்ள 2,00,000 கிலோ உணவு பொருட்களை எம்.ஐ.டிசி தொழிற்பேட்டை சார்ந்த நிறுவனங்கள் மூலமாக அனுப்பி வைத்தார். 


இந்த உதவியினால் சுமார் 12,500 குடும்பங்கள் பயன்பெற்றன. தாரவிப் பகுதி மட்டுமின்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மற்ற பகுதிகளிலும் உதவும் வண்ணம் மேலும் 85,00,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை 10,000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மாகிம்‌, மட்டுங்கா, ஒர்லி, மார்க்கண்டேஷ்வர்‌ நகர்‌, ஆனந்த்‌ நகர்‌, ரேரோடு, சிவ்ரி, அந்தேரி, கோரேகாவ்‌, மலாடு, கல்யாண்‌, தானே, காந்திவலி, அம்பர்நாத்‌, குண்டோலி, மால்வாணி, சீத்தாகேம்ப்‌, நல்ல சோப்ரா, தலோஜா எம்.ஜ.டி.சி, துர்பே நாக்கா, கார்கர், செம்பூர், வில்லே பார்லே, ஜெரிமெரி ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.


முறைசாரா தொழிளார்களுக்கான சிறப்பான பணிகள் மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தைச் சார்ந்த முறைசாரா தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் பணிசெய்து வந்தனர். பொதுமுடக்கத்தால் வேலை இழந்ததுடன் தாயகம் திரும்பவும் வழியின்றி தவித்து வந்தனர். அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். 'சாங்கிலி” மாவட்டத்திற்கு விற்பனை பிரதிநிதிகளாக வந்திருந்த தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தத்தளித்தனர். அந்த இளைஞர்கள் குறித்து மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் பி. அன்பழகன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு தெரியவந்தவுடன், அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடனும், இளைஞர்களுடனும், சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி நிலவரங்களை கேட்டறிந்தார். பேருந்து மூலம் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு இருப்பதை அறிந்து, பேருந்து போக்குவரத்துக்கான முழு செலவையும் எம்.ஐ.டி சியை சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஏற்றுகொள்ள வழிவகை செய்தார். 


இதனையடுத்து, சாங்கிலியில் சிக்கி தவித்த 480 தமிழ் விற்பனை பிரதிநிதிகளுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு 18 பேருந்துகளில் சேலம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு தேவையான உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்த மாவட்ட எம்.ஐ.டி.சியை சார்ந்த தொழிற்பேட்டை நிறுவனங்களும், அதிகாரிகள் செய்து கொடுத்தனர். அவர்கள் அனைவரும் மே 9 ஆம் தேதி சேலத்திற்கு சென்றடைந்தனர். போக்குவரத்து செலவுக்கான ரூ. 18 லட்சத்தை எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மூலமாக அரசு போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தினார். அவர்களில் யாரும் தொற்றால் பாதிக்கப்பட வில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. 


மே 18 ஆம் தேதி புனேயிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் மாகாராஷ்டிராவில் உள்ள ராய்காட், புனே, நாசிக், ரத்னகிரி, சோலாப்பூர், கோலாப்பூர், நாண்டெட் ஆகிய 7 மாவட்டங்களில் சிக்கித்தவித்த 1400க்கும் மேற்பட்ட தமிழ்மக்களை பேருந்துகள் மூலமாக புனேவுக்கு அழைத்து வந்து சிறப்பு இரயில் மூலம் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பயணத்தில் உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக சுமார் ரூ. 35 லட்சம் செலவானது. அந்த தொகை முழுவதையும் எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்டது . 


மே 28 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட ரயிலில் 1400க்கும் அதிகமானோர் பயணித்தனர். அவர்களுக்கும் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் தேவையான பழங்கள், உணவு பொட்டலங்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். கொரோனா பெருந்தொற்றிகெதிரான நேரடியான களயுத்தம்: உணவுப் பொருட்கள் வழங்குதல், முறைசாரா தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் என்பதோடு நின்றுவிடாமல் கொரோனா தீ நுண்மத்திற்கு எதிரான நேரடியான கள யுத்தத்திலும் இறங்கியுள்ளார். 


அரசுக்கு எம்.ஐ.டிசி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மூலம் 50,000 பிபிஇ கிட்ஸ், 8.5 லட்சம் முகக்கவசங்கள், 140 வெண்டிலேட்டர்கள் வழங்கினார். மேலும் 15 வெண்டிலேட்டர்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அவுரங்காபாத் எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டைக்குள் 250 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ஜூன் மாத 21 ஆம் நாள் இச் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர் அனுமதிக்குப்பின் கிருமி ஆராய்ச்சி மையம் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் நுட்ப இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வைரோலோஜி ஆய்வு மையம் அமைப்பதற்காக பி.எம்.ஐ.சி ஆடியோசிட்டி அல்லது இண்டஸ்ட்ரியல் டவுண்ஷிப் லிமிடெட் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதி மூலம் வழங்கப்பட உள்ளதாக கூறினார். 


'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” பசி, பிணி, பகை இல்லாத நாடே சிறந்த நாடு என்கிறார் வள்ளுவர். அதிலும் எதிரி நாடுகளின் பகையை கூட மூன்றாவது இடத்தில் வைக்கும் வள்ளுவர் பசியை முதலாவதாகவும், பிணியை இரண்டாவதாகவும் குறிப்பிட்டு சொல்கிறார் என்றால் பசியும், பிணியும் பிற நாடுகளின் பகையை விட கொடியது என்பதால் தான். வள்ளுவனின் வாய்மொழிக்கொப்ப கொரோனா என்னும் பெருந்தொற்றல் விளைந்த பசி, பிணி, மனித குலத்திற்கெதிரான தீ பகை இம் மூன்றையும் விரட்ட யுத்த களத்தில் களமாடி வருகிறார் 


முனைவர் பொன்.அன்பழகன் ஐ.ஏ.எஸ். உறுபசி, ஓவாப்பிணி, தீ பகை இல்லாத மாநிலமாக மகாராடிராவை உருவாக்க அரும்பணியாற்றி வரும் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தான் உண்மையிலேயே மும்பையின் 'நாயக்”. அவர் தமிழர் என்பதில் நமக்கும் கூடுதல் பெருமை
- தினமலர் வாசகர் ரவி ராமன்


Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us