ஜெயராமன் எழுதிய தனது சரிதம் 'முட்பாதையில் ரோஜா தோட்டம்' புத்தக வெளியீட்டு விழா கிழக்கு டில்லியில் நடைபெற்றது. மங்களகரமான குத்து விளக்கேற்றி இறைவணக்கம் ராதா சங்கர் பாட இனிதே துவங்கியது.தாய் தமிழ் நாட்டை விட்டு தலைநகர் குடியேறிய பல தமிழர்கள் தங்கள் தடங்களை பல்வேறு துறைகளில் பதித்துள்ளார்கள்.பல உயரங்களை எட்டி பிடித்துள்ளார்கள்.அப்படியாக நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஜெயராமன் தனது உழைப்பால் முன்னேறி ஒரு பெரிய தனியார் தொழில் குழுமத்தின் ஆலோசகராக கடந்த 52 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார்.
நடக்கும் தற்போதைய சூழலில் நேரத்தை பயன்படுத்தி தனது வாழ்க்கை பயணத்தை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார்.இதில் தனது பள்ளிபருவம், தாய் மறைவில் பாட்டியிடம் வளர்ந்தது, அப்போதைய கடினமான சூழ்நிலை, வேலை பார்த்து தனது கல்லூரி படிப்பை தொடர்ந்த காலகட்டம், என்ற இடங்களில் நமது நெஞ்சை உருக்கும் விதமாக எண்ண அலைகள் மோதுகின்றன.
அடுத்து நாக்பூரில் பணி, திருமணம் என அவர் ஏணிப்படியில் ஏறிய நிகழ்வுகள் இன்றைய தலைமுறைக்கு நல்ல உதாரணம். அதிலும் தனது பணியை மிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு செல்ல அதுவே அவரது துருப்பு சீட்டாக அவரை உயர்த்தியுள்ளது.தொழில் தலைமை அவரை தனது முக்கிய வட்டத்தில் இருத்தி அவரது ஆலோசனைகளை அமல்படுத்த , எல்லோரும் பயன் பெற்றனர்.
தான் பெற்ற செல்வத்தை அனுபவத்தை மற்றவர்களுக்கு அளிக்கவேண்டும் என்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு பல தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் நற்பணி ஆற்றி வருகிறார். வருடாந்தர கண் முகாம், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், விதவைகள் மறுவாழ்வு மையங்கள் என அவர் பங்கு பெறாத அமைப்புக்கள் இல்லை என்று சொல்லலாம்.குறிப்பாக கடந்த பல வருடங்களாக சமூக திருமணங்கள் ஏற்பாடு செய்து வருகிறார்.இதுவரை சுமார் 350 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அந்த புதுமண தம்பதிகள் வாழ்க்கையை தொடங்க அவசியமான பொருட்களை சீதனமாக கொடுத்து வருகிறார்.
வாழ்வில் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு வந்தபோதும் தன் சுகம் என்று தனிவாழ்க்கையை வாழாமல் மற்றவர்களுக்கு உதவியும் முன்மாதிரியாக வாழ்ந்துவரும் ஜெயராமன்– சீதாலெட்சுமி தம்பதியை வாழ்த்துவோம்.
இவரது சுயவரலாறு புத்தகம் சமீபத்தில் டில்லியில் சிறிய விழாவில் வெளியீடு செய்யப்பட்டது. விழாவிற்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் எடிட்டர் ஆர் சுகுமார் தலைமை தாங்கினார். சிங்கானியா குழுமத்தின் துணை சேர்மன் வினிதா, கிழக்கு டில்லி முனிசிபல் கவுன்சிலர் அபர்ணா கோயல், கிழக்கு டில்லி மகா சங்கம் தலைவர் சுரேஷ் பிண்டல் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.முந்தைய லயன் மாவட்ட கவர்னர் ராஜீவ் அகர்வால் வாழ்த்தி பேசி லயன் உயரிய விருதான லீடர்ஷிப் மெடலை வழங்கினார்கள்.
அவருடன் பணியாற்றிய 88 வயது ஓ.பி.சர்மா மேடை வந்து வாழ்த்தினார்கள். ஏற்புரையில் தனது வாழ்நாளில் சந்தித்த முக்கிய நபர்கள் சம்பவங்கள் பற்றி விளக்கமாக ஜெயராமன் பேசினார்.விழா நடப்புகளை மீனா வெங்கி வழிநடத்த, நன்றியுரை மருமகன் ஸ்ரீ காந்த் வழங்க இனிதே நிறைவுற்றது. தற்போதைய சூழலில் குறைந்த அளவு நண்பர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க விழா நடைபெற்றது.
– நமது செய்தியாளர் மீனா வெங்கி
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.