செய்திகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

மே 26,2021 

 அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல இறை ஆற்றலான, பரிபூரண பரஞ்சோதியின் நல்லருளால், உலக உயிர்கள் அனைத்தும் எல்லா நலங்களும் , எல்லா வளங்களும் பெற்று, என்றும் நிறைவுடன் மகிழ்வுடன் நிறைவாழ்வு வாழ பரிபூரண நல்லாசிகள். சந்தோஷம்! சந்தோஷம்! சந்தோஷம்! ஒவ்வொருமாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம், அல்லது திதியை தேர்ந்தெடுத்து வழிபடுவது தமிழர் மரபு. நட்சத்திர அடிப்படையில், நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுது, அச்சமில்லாத வாழ்கை நமக்கு அமையும் என்பது முன்னோர்கள் கூற்று.

அந்த விதத்தில் விசாக நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். விசாகம் குருவிற்கும் உகந்ததாகும். விசாக நட்சத்திரம், ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும்.வைகாசி விசாகம் முருகப்பெருமானின் அவதாரத் திருநாள் ஆகும். இதனால் முருகப்பெருமானும், ஆறு முகங்களோடு திகழுபவர் என்பது ஐதீகம். இந்நாள் ஜோதி நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

உயிர்களுக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டு, சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி , தம் திருவிளையாடலால் குழந்தையாய் மலர்ந்தது. உலக உயிர்கள் அனைத்தும்(மனிதகுலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள்) எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே வைகாசி விசாகத்தின் சிறப்பாகும்.

தீமைகளை அழித்து, நன்மைகளைக் காப்பதற்காகவே, ஏற்பட்டது முருகப்பெருமானின் அவதாரமாகும். வைகாசி விசாகம் ஞானம் விளைவிக்கும் திருநாளாகவும், உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் திருநாளாகவும் அமைகிறது.

'வி' என்றால் பட்சி(மயில்), “சாகன்” என்றால் “சஞ்சரிப்பவன்“. மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் விசாகன் என்றும் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார். முருகப் பெருமானுடைய வாகனமாக சூரபத்மன் வீற்றிருக்கிறான். இதனால் பகைவனுக்கும் அருள்பாலித்து, அரவணைக்கும் கருணைக் கடவுளாக முருகப்பெருமான் விளங்குகிறார்.

“சுக்குக்கு மிஞ்சிய கஷாயம் இல்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.”

முதலும் முடிவும் இல்லாத, கூரிய வேலை ஏந்திய முருகப்பெருமான், எல்லா உயிர்களுக்கும் ஞானத்தை வழங்கி அருள்பாலிக்கிறார். பிறப்பும், இறப்பும் இல்லாதவர் சிவபெருமான். அப்படி பிறப்பும், இறப்பும் இல்லாதவர் முழுமுதற்கடவுளாகிய முருகப் பெருமான். அதேபோல நினைப்பும்மறப்பும் இல்லாத இறைவனான சிவபெருமானைப் போலவே, முழுமுதற்கடவுளாகிய முருகப் பெருமான் விளங்குகிறார்.

இறைவனை நினைக்கும்போதும், துதிக்கும்போதும், வழிபடும்பொழுதும் உள்ளம் உருகவேண்டும்.இறைவா! நீயே சரணாகதி!எனது உடல் உள்ளம் உயிர் இம்மூன்றையும் உன் திருவடியில் தத்தம் செய்கிறேன். எனது வினைகளை நீக்கி, எனக்கு அருள்புரிவாயாக என்று இறைவனை சரணடைய வேண்டும்.ஏனென்றால் “உள்ளத்தினுள் உயிர்கள் உறைகின்றது. உயிருக்குள்இறைவன் உறைகின்றான்.”

இறைவனின் திருவடியை அடைய, திருவருளைப் பெற, முதலில் உள்ளம் உருகவேண்டும். பிறகு உயிர் உருகவேண்டும். உருகிய உயிரில் இறைவன் இரண்டறக்கலந்து அருள்பாலிக்கிறான்.

இத்தனை விழாக்களும், நிகழ்வுகளும்,ஒவ்வொரு உயிரும் தன்னைத்தான் உணர்ந்து, தன் பிறவியின் பெரும்நோக்கை முடிக்கவே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அதை உணராமல், புறத்தில் மட்டுமே விழாக்களை நாம் கொண்டாடி வருகின்றோம். தற்போதாவது விழாக்கள் உணர்த்தும் உண்மைகளை உணர்ந்து, வாழ்வில் நாமும் சந்தோஷம் பெற்று, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ, வழி வகைசெய்வோம்.

“முருகு“ என்றால் அழகு என்று பொருள். மெல்லின இடையின வல்லின மெய் எழுத்துக்களுடன், “உ“ என்னும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடன் சேர்த்து, முருகு(ம்+ உ, ர்+உ,க்+உ) என்றதால் இம்மூன்றும் இச்சா ஷக்தி, க்ரியா ஷக்தி, ஞான ஷக்தி என்று மூன்றையும் குறிக்கும். தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட தமிழ் கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகின்றார்.

“முத்தமிழால் வெய்தாரையும் வாழவைப்பான் முருகன்”, என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார். “யாமிருக்க பயமேன்“, என்பது முருகப்பெருமானின் அருள்வாக்கு. ஏனையோரைக் காக்கும் கடவுளாக, அருள்பாவித்துக் கொண்டிருப்பவர் முருகப் பெருமான். இன்றைய சூழலில் மக்கள், எல்லாம் வல்ல இறைவனின் மீது, நம்பிக்கைக் கொள்ளவேண்டும், இறைபக்தியும், இறையச்சமும் கொள்ளவேண்டிய தருணம் இது.

நமது கலாச்சாரம், பண்பாடு இவற்றின் படி வாழவேண்டியநேரம் இது. நமது பண்பாட்டை முன்னெடுக்கும்காலமிது. நம் முன்னோர் காட்டிய வழியில், நமது கலாச்சாரத்துடன் வாழ வேண்டிய தருணம் இது.இது நம்மை மட்டும் அல்லாமல், குடும்பத்தினரையும், உறவினர்களையும், நண்பர்களையும். சக மக்களையும் காக்கவேண்டிய தருணம் இது.

பாட்டி வைத்தியம் என்று கூறப்படும், நமது முன்னோர்களின், பெரியோர்களின் வழிகாட்டுதலின்படி, முறையான யோகப் பயிற்சி, முறையான உணவுகள், முறையான ஒய்வு, இவையே இன்று உலகம்முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதுவே இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான அத்தியாவசியமான ஒன்று.

அவ்வகையில்  கீழ்கண்டவற்றை,

நல்ல உணவு 

நல்ல உடற்பயிற்சி 

நல்ல செயல்பாடுகள்

நல்ல வழிபாடு தியானம்

நாம் கடைபிடித்தோம் என்றால், முறையான, நெறியான, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வோம். சமூகத்தையும், தேசத்தையும், பாதுகாப்போம். நேர்மறை எண்ணங்களைக் கொள்வோம். தன்னம்பிக்கையுடன் இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்வோம். நலத்துடன் வளத்துடன் மகிழ்வுடன் வாழ்வோம்.

சிறப்புமிக்க விசாகப் பௌர்ணமி, புத்த பௌர்ணமி என்றும் கொண்டாடப்படுகிறது. புத்தர் பெருமான் அவதரித்தது, ஞானம் பெற்றது, பர-நிர்வாணம் அடைந்தது எல்லாம் வைகாசி விசாகத்தில்தான் நடைபெற்றது.

வைணவ பக்தி மார்கத்தைப்பின்பற்றி, நெறி தவறாமல் வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், வைகாசி விசாகத்தன்றே பிறந்தார்கள். வடலூரில் இராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையை நிறுவியதும், வைகாசி விசாகத்தன்றுதான்.

வைகாசி விசாகத்தன்று பிறந்தவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

பலவித சிறப்புமிக்க விசாகப் பௌர்ணமி உணர்த்தும் உண்மையை, உங்களுள் நீங்கள்உணர்ந்து, விசாகப் பௌர்ணமிக்குண்டான அனைத்து பலன்களையும் நீங்கள் பெற பரிபூரண நல்லாசிகள்!

அன்னை பூமி நீடுழி வாழ்க!

சந்தோஷம்!
- தினமலர் வாசகர் சொற்சித்தர்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி ...

நொய்டாவில் மகா பெரியவா 28 ஆவது ஆராதனை மகோத்சவம்

நொய்டாவில் மகா பெரியவா 28 ஆவது ஆராதனை மகோத்சவம்...

நொய்டாவில் ஸ்ரீ ஐயப்ப பூஜை கொண்டாட்டம்

நொய்டாவில் ஸ்ரீ ஐயப்ப பூஜை கொண்டாட்டம்...

டில்லியில் 1008 பேருக்கு அன்னதானம்

டில்லியில் 1008 பேருக்கு அன்னதானம்...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us