திருச்சூர் ஸ்ரீ தியாக பிரம்ம சங்கீத சபா T.V.சேஷாத்திரி நினைவு சங்கீத உற்சவத்தை நான்கு நாள் விழாவாக சங்கத்தின் 62 வது நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த வைபவம் திருச்சூர் சின்மயா வளாகத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக சென்னை சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் குழுவினரின் இசை கச்சேரியுடன் தொடங்கியது. சிவஸ்ரீ தியாகராசரின் எந்தரோ மகானுபாவில் எல்லா மகான்களுக்கும் வந்தனம் தெரிவித்துக் கொண்டு கம்பீரமாக ஹரிகாம்போதியில் ' 'வினவே ஓ மனசா' வில் பொருள் பொதிந்த வரிகளில் மனதை தொட்டார் தியாகராச சங்கீத சபாவிற்கு முதல் இரண்டு கீர்த்தனைகளை அர்பணிப்பு செய்து கொண்டு அடுத்தாற்போல் ஹரிகேசநல்லூர் வரிகளில் மரகத வல்லியை, மாணிக்க வீணா தாரிணியை ' மீன லோசனியில்' தோடியில் இழைய இழைய வர்ணித்துக் கொண்டு மீண்டும் தேவியிடம் சரண்.
மலையத்துவஜன் மகளே, தேவர்களும் பூஜிக்கும் சாரதே அசுரன் ஜம்பனை வென்ற இந்திரனும் பூஜிக்கும் லெட்சுமியே என பலவாறாக திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தீட்சிதரின் த்வஜாவந்தியில் நெஞ்சம் மகிழ பாடினார். ஜம்பாரி சம்வாதிதே.. இடத்தில் ஸ்ரீதத் மிருதங்கம் தூக்கி கொடுத்தது மிக அருமை. அன்னையை கூவி அழைக்க சியாமா சாஸ்திரியின்' மாயம்மா நின்னே பிலசிதே' இரட்டைகளை சவுக்கத்தில் சுகமான சங்கீதம். அதில் முதல் சரணத்தில் ஸ்திரமதி நம்மிதி நம்மிதி 3 விதமாக பிரித்து பாடி இழைய இழைய அனுபவிக்க வைத்தார்.
அன்றைய முக்கிய கீர்த்தனை தீட்சிதரின் நவாபரண கமலாம்பாள். அனுபல்லவி 'கமலாபுர சதனாம் மிருது கதனாம் கமனீய ரதனாம் கமல வதனாம்'இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு.. தொடர்ந்து ஸ்வரமும் மிக அழகாக பாடினார்.அதற்கேற்றார் போல் ஸ்ரீதத் மிருதங்கம் ஸ்ரீஜித் கடமும் போட்டிபோட்டுக்கொண்டு கல்யாணியை அனுபவிக்க வைத்தார்கள்.
நேயர்விருப்பமாக பாபநாசம் சிவன் வரிகளில் நம்பிக்கெட்டவர் எவரைய்யா, ஊத்துக்காடின் கண்ணன் வருகின்ற நேரம் சபையை கலகலக்க வைத்தது. தொடர்ந்து ஸ்வாதியின் பேகாக்கில் சாரமைய்ய மாட்டலந்து சாலு சாலுரா.. தெலுங்கில் அட்சர சுத்தமாக கேட்க கிடைத்தது. அருமையான அஷ்டபதி மகாபெரியவரின் மைத்திரீம் பஜத, துக்காராம் அபங் என் ஜனரஞ்சகமான சங்கீதம் . பாண்டுரங்கனை சபையோர் ஆரவாரமாக கொண்டாடியது காணவேண்டிய காட்சி.அன்றைய தினம் வயலின் பாலசுப்பிரமணியம். மிருதங்கம் ஸ்ரீதத் ,கடம் ஸ்ரீ ஜித் இணைந்து இனிமையான இசைவிருந்தளித்தார்கள்.இறுதியில் வீணை வித்துவான் அனந்த பத்மநாபன் கலைஞர்களை வாழ்த்தி பேசினார்கள்.
- திருச்சூரிலிருந்து தினமலர் டில்லிசெய்தியாளர் மீனா வெங்கி
ஸ்ரீ காருண்ய மகாகணபதி திருக்கோவிலில் ஏகாதேசி பஜனை ...
தில்லி காஞ்சி கலாசார மையத்தில் தியாகராசர் ஆராதனை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.