நாய்க்கடியால் 6.50 லட்சம் பேர் பாதிப்பு; ரேபிஸ் நோயால் 33 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில், 2025ம் ஆண்டில் நாய்க்கடியால் 6.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர், 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தமிழக கால்நடை துறை தகவலின்படி, மாநிலம் முழுதும், 25 லட்சம் தெரு நாய்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
இதனால், நகர பகுதிகளை காட்டிலும், கிராமப்புறங்களில் நாய்க்கடி பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம்.
நாய்க்கடியால் கடந்தாண்டு, 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 43 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர்.
அதேநேரம், கடந்தாண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு ரேபிஸ் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும், பாதிப்பு 6.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக 1.70 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
நாய் கடித்த அன்றே தடுப்பூசி போடும் போது, அவர்களுக்கு ஒரு அட்டை வழங்கப்படும்.
அடுத்த மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 21வது நாள் என நான்கு தவணைகளாக, அந்த அட்டையை காண்பித்து எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போட முடியும்.
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தவுடன் முறையான தவணைகளில் தடுப்பூசி போட்டு கொண்டால், ரேபிஸ் நோய் வராமல் தடுக்க முடியும்.