பொதுவான முதலுதவி தவறுகளும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும்

முதலுதவி செய்யும் போது தெரியாமல் செய்யும் சில தவறுகள், காயமடைந்த நபரின் நிலையை மேலும் மோசமாக்கலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

விபத்தில் காயமடைந்தவர்கள் குப்புற அல்லது ஒருபக்கமாக கிடந்தால், அவர்களை நேராக படுக்க வைப்பதாக கருதி சிலர் அவசரத்தில் கழுத்து நரம்புகளை அழுத்தி விடுவர்.

இதனால், கழுத்தில் இருந்து கை, கால்களுக்கு செல்லும் நரம்புகள் பாதித்து, செயலிழக்கலாம்.

ரத்தம் வெளியேறிக் கொண்டே இருந்தால் சிலர் மஞ்சள்துாள், மண் வைப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இது தவறு. ஒரு துணியை அவ்விடத்தில் வைத்து 30 நிமிடம் வரை அழுத்திபிடித்தால் போதும்.

சிலர் குழந்தைகள் மண்ணெண்ணெய் குடித்துவிட்டால், கை விட்டு வாந்தி எடுக்க வைக்கின்றனர். அப்படி செய்தால், திரவம் நுரையீரலுக்குள் செல்லலாம்.

ஆசிட், பெட்ரோல், டீசல் போன்றவை குடித்தால், வாந்தி எடுக்க வைக்கக் கூடாது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும்.

விஷப்பூச்சிகள் கடித்தால், அவ்விடத்தை அசைக்காமல், உடலுக்கு இயக்கத்தை கொடுக்காமல், மருத்துவமனைக்கு வர வேண்டும்.

சிலர் சைக்கிள் மிதிப்பது, ஓடுவது, நடப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவர். இதனால் விஷம் உடல் முழுக்க பரவலாம்.

குழந்தைகளின் மூக்கு, காதுக்குள் ஏதாவது பொருள் சென்றால், உடனே தலைகீழாக தொங்கவிட்டு முதுகை தட்டுவர். அப்பொருள் தொண்டையில் இருந்தால் மட்டுமே வெளியேறும்.

தவறாக சிகிச்சை அளித்தால் மூச்சுக்குழாய்க்குள் சென்று சுயநினைவு இழக்கலாம். வேகமாக தட்டுவதால் எலும்பு முறிவு ஏற்படலாம்.

எதையும் செய்யாமல், உடனே ஆம்புலன்சுக்கு அழைத்து மருத்துவமனையில் அனுமதிப்பதே சிறந்தது.