பலன் அளிக்காத ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஆபத்து!

ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்துவதால், உலகளவில் 'ஆன்டிபயாடிக் எதிர்ப்பு' என்ற மிகப்பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

இதன் தாக்கத்தை சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் அதிகம் காணமுடிகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

70 சதவீத காய்ச்சல், தலைவலி, சளி, தொண்டை வலி போன்றவை வைரஸ் தொற்றால் வருகிறது. இதற்கு ஆன்டிபயாடிக் தேவையில்லை.

தேவையில்லாத இடங்களிலும் இம்மருந்து எடுத்துக்கொள்வதால், கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி தேவைப்படும் போது, மருந்துகள் பலன் அளிப்பதில்லை.

டைபாய்டு காய்ச்சலுக்கு முன்பு கொடுத்த மருந்துகள், தற்போது வேலை செய்யாமல் டோஸ் அதிகமுள்ள அடுத்தநிலை மருந்து, நாடு முழுவதும் வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டில் அடுத்த நிலை மருந்தும் பயன் அளிப்பதில்லை. இந்நிலை தொடர்ந்தால் மிகப்பெரும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாக பயன்படுத்தும் போது, உடலிலுள்ள தீய பாக்டீரியாக்கள் அந்த மருந்துகளுக்குத் தப்பி பிழைக்க பழகிக்கொள்கின்றன.

காலப்போக்கில், இந்த பாக்டீரியாக்கள் மருந்துகளாலேயே அழிக்க முடியாத அளவில் உருமாறுகின்றன என கூறப்படுகிறது.

சாதாரண அறுவை சிகிச்சைகள், பிரசவம் மற்றும் புற்றுநோய் சிகிச்சையின் போது ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்துவது, மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக மாறுகிறது.

காய்ச்சல் வந்தாலே ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பது தவறானது. டாக்டர்களும் சரியாக தெரிந்துகொள்ளாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுப்பதும் தவறு.