ஊட்டி, கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்

மலைபிரதேசங்களுக்கான ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடந்தாண்டு மே, 7ம் தேதி முதல் இ - பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், ஐகோர்ட்டின் உத்தரவுப்படி ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணியரின் வாகனங்களுக்கு மட்டுமே இ- பாஸ் வழங்கப்பட்டு, அனுமதிக்கப்படுகிறது.

ஊட்டிக்கு வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்கள், இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

அதேபோல் கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 வாகனங்கள், இறுதி நாட்களில் 6000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மருத்துவ சேவை, அரசு பஸ்கள், உள்ளூர் பதிவெண் கொண்ட மற்றும் சரக்கு வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப்பயணிகள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், 'கியூ.ஆர்.,' கோடு முறையிலும் சோதனைச் சாவடிகளில், 'ஸ்கேன்' செய்யலாம்.