ஆரோக்கியம் தரும் பழங்கள்... ஆய்வுகள் கூறுவதென்ன?

பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் சில சத்துகளைத் தனியாகப் பிரித்து அவற்றை மருந்தாகப் பயன்படுத்த முடியும். இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடகின்றன.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் நடந்த ஆய்வில் பலவிதமான நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நார்ச்சத்து பழங்கள், காய்கறிகளின் செல் சுவர்களில் நிறைந்துள்ளன. பப்பாளிப்பழம், தாட் பூட் எனப்படுகின்ற பேஷன் பழம், ஆரஞ்சு ஆகியவற்றில் இச்சத்து அதிகமாகவுள்ளது.

பப்பாளிப்பழம் பழுப்பதற்கு முன் இந்த நார்ச்சத்து அதிகளவில் இருக்கும். பழுத்துவிட்டால் இதனுடைய தன்மை மாறிவிடும்.

எனவே பப்பாளியை விடுத்து ஆரஞ்சு, பேஷன் பழங்களை ஆய்வு செய்ததில், அவற்றின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும் இடையேயுள்ள வெள்ளைப் பகுதியில் பெக்டின் நிறைந்துள்ளது.

எதிர்காலத்தில் குடல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆரஞ்சு போன்ற பழங்களில் சாறு எடுக்கும்போது சதைப்பகுதி வீணாகத் துாக்கி எறியப்படுகிறது. இதிலிருந்து பெக்டின் நிறைந்த வெள்ளைப் பகுதியை தனியாகப் பிரித்து மாவு போல் செய்யலாம்.

எனவே மருந்தாக மட்டுமின்றி, தற்போது புழக்கத்திலுள்ள புரோட்டின் பவுடர் போல் இந்த பெக்டின் மாவைப் பயன்படுத்த முடியும்.