நீரிழிவால் பாதித்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுதும் இன்சுலின் ஊசி அவசியமா?

இன்றைய வாழ்க்கை சூழலில் 5 வயது குழந்தைகளையும் டைப் 1 நீரிழிவு பாதிக்கிறது. ஒரு சிலருக்கு இன்சுலின் ஊசி போடுவது அவசியம் என டாக்டர்கள் அறிவுருத்துவர்.

டைப் 1 நீரிழிவில், கணையம் சில காரணங்களால் இன்சுலின் சுரப்பதை முழுவதுமாக நிறுத்தி விடுகிறது.

நம் நாட்டில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு இந்நோய் உள்ளது.

இன்சுலின் சுரப்பு முற்றிலும் இல்லாததால் மாத்திரை, மூலிகை கசாயம், உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றால் குணமாக்க முடியாது. எனவே, வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி அவசியம்.

இன்சுலினை நிறுத்தினால் ரத்த சர்க்கரை அதிகரித்து, கீட்டோ அசிடோசிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.

உடல் எடை குறைதல், அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி மயக்கம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

சரியான இன்சுலின் அளவு, உணவுத்திட்டம், உடற்பயிற்சி, ரத்த சர்க்கரை அளவு கண்காணிப்பு ஆகியவற்றால் கல்வி, விளையாட்டு, வளர்ச்சியில் பிற குழந்தைகளை போல ஆரோக்கியமாக வாழ முடியும்.

காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த நேரங்களில் உடனடியாக டாக்டரை அணுகுவது அவசியம்.