5 தலைமுறை கண்ட தெலுங்கு சினிமாவின் பன்முக கலைஞர் கிருஷ்ணாவின் வாழ்க்கை பயணம்
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கிருஷ்ணா(79) உடல்நல பிரச்னையால் காலமானார்.
ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள புர்ரிபாலம் என்ற ஊரில் கட்டமனேனி ராகவய்யா சௌத்ரி - நாகரத்னம்மா தம்பதியரின் மகனாக 1943ல் மே 31ம் தேதி பிறந்தார்.
இவரது இயற்பெயர் கட்டமனேனி சிவராம கிருஷ்ணமூர்த்தி. சினிமாவிற்காக கிருஷ்ணாவாக மாறினார்.
1961ம் ஆண்டு வெளிவந்த "குலகோத்ரலு" என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடமேற்று நடித்ததன் மூலம் ஒரு நடிகராக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் கிருஷ்ணா.
சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர் 1965ல் வெளிவந்த "தேனே மனசுலு" என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகன் அந்தஸத்தை பெற்றார்.
"தேவுடு சேஸின மனசுலு", "ராம் ராபர்ட் ரஹீம்" என நாயகனாக இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இவரை ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது.
1964லிருந்து 1995வரை உள்ள இந்த காலகட்டங்களில் 300 படங்களை கடந்து தெலுங்கு சினிமா ரசிகர்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு உச்ச நட்சத்திரமாகவும் உயர்ந்து காணப்பட்டார்.
1967 ஆம் ஆண்டு வெளிவந்த "சாக்ஷி" என்ற திரைப்படத்தில் நடிகையும், இவரது மனைவியுமான நடிகை விஜயநிர்மலாவுடன் முதன் முதலாக இணைந்து நடித்தார். 48 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர்.
5 தலைமுறை நடிகராக அறியப்படும் இந்த வெள்ளித்திரை நாயகன் தனது இந்த நீண்ட நெடிய திரைப்பயணத்தில் 350க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.