2024ம் ஆண்டு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சில பிரபலங்கள் போட்டியிட்டனர். அவர்களில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.

கங்கனா ரணாவத் : ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருடைய சொந்த ஊரான ஹிமாச்சல் பிரதேசம், மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று எம்.பி. ஆகி உள்ளார்.

ஹேமமாலினி : ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகை. ஏற்கெனவே பாஜக எம்.பி ஆக இருந்தவர். அவரது முந்தைய தொகுதியான உத்தரபிரதேச மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சத்ருகன் சின்ஹா : ஹிந்தித் திரையுலகத்தின் மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மேற்கு வங்களாம் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகி உள்ளார்.

அருண்கோவில் : டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராமாயண்' தொடரில் ராமர் ஆக நடித்த அருண் கோவில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மனோஜ் திவாரி : போஜ்புரி நடிகரான மனோஜ் திவாரி, வடகிழக்கு டில்லி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ரவி கிஷன்: சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய 'லாபட்டா லேடீஸ்' ஹிந்திப் பட நடிகரான ரவி கிஷன் பாஜக சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆகி உள்ளார்.

சுரேஷ் கோபி: மலையாள நடிகரான சுரேஷ் கோபி, கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அக்கட்சிக்கு முதன் முதலில் ஒரு எம்.பி. சீட்டை தனது வெற்றி மூலம் பெற்றுத் தந்துள்ளார்.

விஜய் வசந்த்: தமிழகத்தைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நடிகர் விஜய் வசந்த் மீண்டும் வெற்றி பெற்று எம்.பி. ஆகி உள்ளார்.