உயிர் குடிக்கும் கக்குவான் இருமல்: பல நாடுகளில் வேகமாக பரவுகிறது
கக்குவான் இருமல் என்றழைக்கப்படும் தொடர் இருமல், குழந்தைகளை பெரும்பாலும் தாக்குகிறது. இதை 'பெர்டுசிஸ்' என்று அழைக்கின்றனர்
அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும், கக்குவான் இருமல் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. மேலும் சீனா, பிலிப்பைன்ஸ், செக் குடியரசு, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது.
துவக்கத்தில் சாதாரண ஜலதோஷம் போலத்தான் ஆரம்பிக்கும். மூக்கடைப்பு, லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும்.
இந்த நேரத்தில் தொற்று பரவலை கண்டறிவது கடினம். ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அறிகுறிகள் தீவிரமடையும்.
இது 10 வாரங்கள் வரை நீடிக்கும். இரவு நேரங்களில் மட்டும் துாங்க முடியாத அளவு இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மூச்சுக் குழாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருமல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருமல் துவங்குவதற்கு முன், நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், 'ஆன்டிபயாடிக்' வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நோயிற்கு 7 வயது வரையானவர்களுக்கும், 7 வயதுக்கு மேற்பட்டோருக்கும் என தனித்தனியாக தடுப்பூசிகள் உள்ளன.