குழந்தைகளுக்கு ஏன் நீரிழப்பு விரைவாக ஏற்படுகிறது?
வயிற்றுப்போக்கு, அடிக்கடி வாந்தி, அதிக காய்ச்சல், சோர்வு காரணமாக போதுமான அளவு திரவ உணவுகளை சாப்பிடாத போது பொதுவாக குழந்தைகளுக்கு அதிக நீரிழப்பு ஏற்படும்.
குறிப்பாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, உடலுக்குள் செல்லும் நீரின் அளவை விட அதிகமாகி, நீரிழப்பு ஏற்படுகிறது.
பச்சிளங்குழந்தைகள், கைக் குழந்கைதகளின் உடலில், பொதுவாக நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
உடலில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறும் போது, தாங்களாகவே ஈடு செய்ய முடியாது. கவனிக்காமல் விட்டால், ஒரு சில மணி நேர வயிற்றுப்போக்கே கூட, ஆபத்தான நீரிழப்பை ஏற்படுத்தலாம்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, குடலில் உள்ள கிருமிகள், குடலின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கின்றன.
இதனால், உடலிலிருந்து தண்ணீர், சோடியம், குளோரைடு போன்ற முக்கிய உப்புச் சத்துக்கள் அதிக அளவில் வெளியேறுகின்றன. இந்த இழப்பை ஓ.ஆர்.எஸ்., ஈடுசெய்யும்.
இதில், சரியான அளவில் கலந்துள்ள சோடியம் குளோரைடு, குளூக்கோஸ், பொட்டாசியம் குளோரைடு மற்றும் டிரைசோடியம் சிட்ரேட் ஆகியவை, குடலில் நீர் விரைவாக உறிஞ்ச உதவுகிறது.
வயிற்றுப்போக்கு என்பது குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்னை. வயிற்றுப்போக்கு ஆரம்பித்த உடனேயே அறிகுறிகளை அறிந்து, ஓ.ஆர்.எஸ்., கரைசலை உடனடியாக கொடுக்க வேண்டும்.