இன்று உலக குடை தினம்!
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ம் தேதி, உலக குடை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்கர்கள், அந்த நாளை குடையுடன் வலம் வந்து கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
வெயில், மழைக் காலத்தில் பாதுகாப்புக்கு உதவுகிறது குடை. இதை ஆங்கிலத்தில், 'அம்பர்லா' என்பர். இது லத்தீன் மொழி சொல்லான, 'அம்ப்ரா' என்பதில் உருவானது. இதற்கு, நிழல் என்று பொருள்.
பண்டை காலத்திலே, தமிழரும், சீனரும் குடையை பயன்படுத்திய வரலாற்று சான்றுகள் உள்ளன.
வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து தான், குடையின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. மன்னர்கள், உயர் வகுப்பினர் மட்டுமே பயன்படுத்தினர்.
இதை, வியாபார சரக்காக மாற்றியவர் ஆங்கிலேயர் ஜோனாஸ் ஹான்வே. கி.பி., 1750ல் குடையை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
உலகின் முதல் குடை விற்கும் கடையை துவக்கியது ஜேம்ஸ் ஸ்மித் அன்ட் சன்ஸ் என்ற நிறுவனம். ஐரோப்பிய நாடான, இங்கிலாந்து, லண்டன் நகரில், கி.பி., 1830ல் துவங்கப்பட்டது.
குடையில் இரும்பு கம்பி பொருத்தும் தற்போதைய வடிவத்தை கண்டறிந்தவர் சாமுவேல் போக்ஸ். தொடர்ந்து, குடை தயாரிப்பு தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளது.