கருப்பையை நீக்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
கருப்பை தொடர்பான பிரச்னைகளால், 30- 40 வயதுடைய பெண்களுக்கு, 'ஹிஸ்ட்ரெக்டமி' எனப்படும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்வது பொதுவான நடைமுறை.
அறுவை சிகிச்சைக்கு பின், சில வாரங்கள் வயிறு, இடுப்பு பகுதியில் லேசான வலி, வயிறு உப்புசம், சோர்வு, லேசான ரத்தப்போக்கு உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்படலாம்.
வெளிப்புறத்தில் காயம் ஆறியது போல் தோன்றினாலும், உடலுக்குள் குணமடைய சிறிது காலம் ஆகலாம்.
எனவே, முழுமையாக நலம் பெற்று விட்டதாக டாக்டர் சொல்லும் வரை, கனமான பொருட்களை துாக்குவது, உடலை வருத்தி வேலை செய்வது, தாம்பத்திய உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கருப்பையை நீக்கம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, ரத்த இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இரும்பு சத்து அளவை சரிபார்க்க வேண்டியதும் அவசியம்.
சில சமயங்களில், கருப்பையை நீக்குவதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், குறிப்பிட்ட வயதிற்கு முன்பே, மாதவிடாய் நிறுத்தத்திற்கு வழி செய்யும்.
அறுவை சிகிச்சைக்குப் பின், கருக்குழாயில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவதால், பிறப்புறுப்பு வறட்சி, தாம்பத்திய உறவின் போது வலி ஏற்படலாம்.
குடல், சிறுநீர்ப் பாதையின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.சில பெண்கள், இடுப்பு பகுதியில் கனம், அழுத்தத்தை உணர்வர்.
நல்ல ஓய்வு, தேவையான புரதம், நார்ச்சத்து அடங்கிய சத்தான உணவு, நீர்ச்சத்து குறையாமல் இருப்பது, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும்.