ராஜஸ்தானை வெல்லுமா சென்னை * இன்று மீண்டும் மோதல்

பிரிமியர் தொடரில் இன்று சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை வென்று, ராஜஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை அணி 7 போட்டியில் 5ல் வென்று 10 புள்ளி பெற்றுள்ளது. கடைசியாக மோதிய மூன்று போட்டியிலும் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது.

பேட்டிங்கில் துவக்க ஜோடி ருதுராஜ் (270 ரன்), கான்வே (314), கோல்கட்டாவுக்கு எதிராக 29 பந்தில் 71 ரன் குவித்த ரகானே (209), ஷிவம் துபே (184) என பலரும் பெரும்பாலும் அணிக்கு கைகொடுக்கின்றனர்.

சென்னை அணியின் பந்துவீச்சில் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் துஷார் தேஷ் பாண்டே (12 விக்.,), ஆகாஷ் சிங் (5), பதிரானா (4) என பலர் உள்ளனர். சுழலில் ஜடேஜா இதுவரை 10 விக்கெட் சாய்த்தது நம்பிக்கை தருகிறது.

இத்தொடரில் இரு அணிகள் கடைசியாக மோதிய போட்டியில் சென்னை அணி 3 ரன்னில் போராடி வீழ்ந்தது. இன்று இதற்கு பதிலடி தர முயற்சிக்கலாம்.

சென்னை, ராஜஸ்தான் அணிகள் இதுவரை 28 போட்டியில் மோதின. இதில் சென்னை 15, ராஜஸ்தான் 13ல் வென்றன. ஆனால் கடைசியாக மோதிய 6 போட்டிகளில் சென்னை 5ல் தோற்றுள்ளது பலவீனம்.