மேகங்கள் விளையாடும் கொழுக்குமலைக்கு போகலாமா?

பச்சைப்பசேலென்ற மரங்கள் படைசூழ, நீண்ட நெடிய உயரத்தில் குளு குளு காற்று முகத்தில் உரச, தவழ்ந்து செல்லும் வெண்மேகங்களை ரசிக்க, யாருக்குத்தான் மனம் வராது?

இப்படி இந்தியாவில் எங்கு சென்றாலும், ஒரு நாள் 'டிரிப்'பாக ரசிக்க ஆங்காங்கே ஏராளமான இடங்கள் உள்ளன. இதில் ஒன்றுதான் தமிழகத்தில் உள்ள கொழுக்குமலை.

உலகிலேயே உயரமான இடத்தில் தேயிலை விளையும் பகுதி எனத் தேடினால், முதலில் நம் கண்ணில் படுவது கொழுக்குமலைதான்.

தேனி மாவட்டத்தில் ஆனைமுடி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பிரமாண்டமான இயற்கைச் சுற்றுலாத் தலமான கொழுக்குமலை. கடல் மட்டத்தில் இருந்து 7130 அடி உயரத்தில் உள்ளது.

தேனியில் இருந்து போடிமெட்டு அடுத்துள்ள கொழுக்குமலைக்கு செல்லும் போது, வழியிலுள்ள சூரியநெல்லி கிராமம் நுழைவு வாயிலாக உள்ளது; மூணாறு வழித்தடத்திலும் செல்லலாம்.

அங்கிருந்து 12 கி,மீ., தூரத்தில் உள்ள கொழுக்குமலைக்கு ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும். செல்லும் வழி முழுவதும் அழகிய தேயிலைத்தோட்டங்கள் உற்சாகமாக வரவேற்கும்.

மலை முகட்டில் தேயிலைத் தோட்டங்களின் நடுவில் நடந்து செல்லும்போது, மேகக்கூட்டங்கள் மறைந்து, மறைந்து விளையாடும் அழகை ரசிக்கலாம்.

சூரியநெல்லியில் இருந்து செல்லும் பகுதி கேரளாவுக்கு உட்பட்ட நிலையில், கொழுக்குமலை தமிழகத்தின் ஒரு பகுதி; வனத்துறையின் அனுமதி பெறுவது முக்கியமானதாகும்.

மேகக்கூட்டங்களுக்கு நடுவில் சூரியன் உதயமாவது கண் கொள்ளாத காட்சியாகும். அழகாக இருப்பது மட்டுமின்றி ஆபத்துக்கும் வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும்.

வேகமாக வீசும் குளிர்காற்றை ரசித்துக்கொண்டே சிறிது தூரம் நடந்தால், சூரிய உதயத்தை காணுமிடத்துக்கு செல்லலாம். மலை முகட்டின் மீது ஏறி நின்றவாறு இளஞ்சிவப்பாக ஒளி வீசும் சூரியனை ரசிப்பது பரவசமான ஒன்றாகும்.

அருகில் குரங்கணி, டாப் ஸ்டேஷன் உட்பட பல்வேறு வியூ பாயிண்ட்களில் இயற்கை அழகை ரசித்து மகிழலாம்.