வண்ணமயமான நிறங்களில் மிளிரும் அழகிய நீர்நிலைகள் இவை!

புவியியல் மாற்றம், தாதுப் பொருட்களின் சேர்க்கை, நுண்ணுயிர் செயற்பாடுகள் இணைந்து உலகில் சில ஏரி, நதிகளை, இயற்கை வண்ணமய ஓவியங்களாக மாற்றியுள்ளன.

அறிவியல் காரணங்களால் உருவான அந்த அதிசயங்கள் குறித்து பார்ப்போம்...

தென் அமெரிக்க நாடான, பொலிவியாவின், தென்மேற்கு பகுதியில், ஆண்டிஸ் மலைத் தொடர் அருகேயுள்ள, லகுனா கொலராடா ஏரி, சிவப்பு நிறத் தோற்றத்தால் பிரபலமானது.

கடல் மட்டத்திலிருந்து 4,278 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீரில் வளரும் பாசிகள், தாதுப் பொருட்களின் தாக்கத்தால், இந்த ஏரி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹில்லியர் ஏரி நீர், தனித்துவமான இளஞ்சிவப்பு நிறத்தால், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது, 37 ஏக்கர் பரப்புடையது. அதிக உப்புத்தன்மை மற்றும் சில நுண்ணுயிர்களின் செயலால் இளஞ்சிவப்பு நிறம் உருவாவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில் பாயும் கானோ கிறிஸ்டல்ஸ் நதி, ஐந்து வண்ண நதி என அழைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட சில மாதங்களில், நீருக்கடியில் வளரும் தாவர இனங்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு நிறங்களை உருவாக்குவதால், வானவில் போலத் தோற்றமளிக்கும்.

தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் முக்கிய கிளை ஆறு, ரியோ நீக்ரோ. இதன் நீர் கருப்பு நிறமாக உள்ளது. நீரில் கரைந்துள்ள கரிமப் பொருட்களின் காரணமாக, இந்நிறம் உருவாகிறது.

ஜப்பான், ஜாவோ மலைப்பகுதியிலுள்ள ஒகாமா க்ரேட்டர் ஏரி, எரிமலை வெடிப்பால் உருவானது. நீரிலுள்ள தாதுப் பொருட்கள், ஒளி மாற்றங்கள் காரணமாக, நிறம் மாறிக் கொண்டே இருக்கும்.