புகை பழக்கத்தை விட முடியாமல் தவிப்பவரா நீங்கள்? - இது உங்களுக்காக..!

புகை பிடிப்பது தனி நபர்களை மட்டுமல்ல சுற்றியுள்ள நபர்களையும் பாதிக்கும். நீண்ட கால புகைபிடித்தல் பல வகையான புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

புகையிலை பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 லட்சம் மக்கள் இறப்பதாக ஐ.நா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்திருந்தும், பலரும் அதனை விடத் தயங்குவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

நுரையீரலை பாதுகாக்க புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டியது முக்கியம். ஒருசில பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

இறைச்சி உள்ளிட்ட சில உணவுகள் புகைப்பதை மேலும் தூண்டுகின்றன. இரவில் பாலாடைக்கட்டி, பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு விட்டு புகைக்கும் போது, சிகரெட் மீது வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சில குளிர்பானங்கள், காபி மற்றும் தேநீர் உங்களை சிகரெட்டை நோக்கி தள்ளுவதால், அவற்றையும் தவிர்க்கலாம்.

ஒவ்வொரு முறையும் சிகரெட் குறித்த நினைவு வரும் போதும் அதனை 5 நிமிடம், பிறகு 10 நிமிடம் என தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள்.

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு வாய் புற்றுநோயின் அபாயம் 38 சதவீதம் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிகரெட்டில் உள்ள நிகோடின் தொடர்ந்து புகைப்பதற்கு தூண்டுகிறது. இதனை தவிர்க்க உங்களுக்கு பிடித்த இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.