உப்புக்கும், நீரிழிவுக்கும் என்ன தொடர்பு?
அதிகப்படியான உப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால், அதிக உப்பு சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா? உப்பு நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை நேரடியாக அதிகரிக்குமா? என பலருக்கும் சந்தேகம் எழுகிறது.
உப்பு நேரடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது கிடையாது. ஆனால், அதிக உப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்டதாகவும், அதிக கலோரிகள் கொண்டதாகவும் உள்ளன.
உதாரணமாக, உருளைக்கிழங்கு சிப்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பாஸ்ட் புட், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றில்...
ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் மற்றும் அதிகப்படியான கலோரி நிறைந்துள்ளன. இவை உடல் எடையை அதிகரித்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கின்றன.
உடல் பருமன் என்பது டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான மிக முக்கியமான ஆபத்துக் காரணிகளில் ஒன்றாகும்.
இதுதவிர, அதிக உப்பு நிறைந்த உணவுகள் மக்களுக்கு அதிக தாகத்தை ஏற்படுத்துகின்றன.
அப்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, சிலர் குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் அல்லது பிற இனிப்பு பானங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தொடர்ந்து சர்க்கரை பானங்களை அருந்துவது, ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்; உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்; காலப்போக்கில் டைப் 2 நீரிழிவு பாதிப்பை அதிகரிக்கும்.
எனவே, சர்க்கரை பானங்களுக்கு பதிலாக, தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதற்கான உகந்த வழியாகும்.