ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு Dinamalar
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு
Advertisement
 
 

பதிவு செய்த நாள்

13 மார்
2017
23:45

ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் திருப்பணியின் போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓய்சாள அரசன் வீரநரசிம்மனின், புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவின் அமைப்பாளர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது:

சந்திரசூடேஸ்வரர் கோவிலில், திருப்பணி நடந்து வருகிறது. அங்கு, புதிய கல்வெட்டு கிடைத்தது பற்றி, செயல் அலுவலர் ராஜரத்தினம் தகவல் கொடுத்தார். நானும், பிரியன், வீரமுத்து, ராசு, மணி ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள், அக்கல்வெட்டை ஆய்வு செய்தோம். கி.பி., 10ம் நுாற்றாண்டில் செவிடபாடி என்றும், 13ம் நுாற்றாண்டில், முரசு நாடு என்றும் அழைக்கப்பட்ட ஊரே, 16ம் நுாற்றாண்டில், ஓசூர் என, மாறியுள்ளது. ஓசூரின், தேர்ப்பேட்டையில் சந்திர சூடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, 26 தமிழ் கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறை, 1974ல், ஆவணப்படுத்தி உள்ளது. கங்கர்கள், நுளபர்கள், சோழர்கள், ஓய்சாளர்கள், விஜயநகர பேரரசர்களின் காலத்தில், இக்கோவில் வளர்ச்சி பெற்றுள்ளது. சந்திரசூடேஸ்வரர், செவிடை நாயனார் என்ற பெயரில், இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இக்கோவிலுக்கு, கொடுக்கப்பட்ட கொடைகள் பற்றிய செய்திகள், ஓசூர் மலையில் உள்ள பெருமாள் கோவில், பாகலுார், மேல்சூடாபுரம் சிவன் கோவில் கல்வெட்டுகளில் உள்ளன. பழமையான இக்கோவிலில், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகளும், கங்கர் கலை சான்றுகளாக, சப்த மாதர்கள், சூரியன், அர்த்த மண்டப துாண்களும் உள்ளன. இங்கு, பல மன்னர்களின் கல்வெட்டுகள் இருந்தாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஓய்சாள மன்னனின் முதல் கல்வெட்டு என்பதால், முக்கியத்துவம் பெறுகிறது. கல்வெட்டில் உள்ள, 17 வரிகளில், முதல் வரி, படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது.

'செல்லா நின்ற என துவங்கி, துபிரிதிவிராஜம் பன்னி' என, முடிகிறது. அதன்படி, வீர நரசிம்மன் கோவிலின் வளர்ச்சிக்காகவோ, திருவிழாவுக்கோ தானம் கொடுத்த செய்தி உள்ளது. அதில், 'ஆடி மாதம் 10ம் தேதி' என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X