காந்தியும் அண்ணா ஹசாரேவும்- ஜெயமோகன்
Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

02 ஜூலை
2013
07:55
பதிவு செய்த நாள்
ஜூலை 01,2013 10:01

பல வருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்துக்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர், அந்த கிராமநிர்மாணத் திட்டங்களிலிருந்து இயல்பாக கிராம ஊழல்களை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு வந்தார். இயல்பாகவே அந்தப் போராட்டம் மகாராஷ்டிர அரசியலில் இருந்த ஊழல்களுக்கு எதிரான போராட்டமாக மாறி, இன்று இந்திய அளவிலான போராட்டமாக மலர்ந்திருக்கிறது.

இயல்புகள்:எல்லாவகையிலும் இது ஒரு காந்தியப் போராட்டம் என்பதற்கு அது வந்திருக்கும் வழியே சான்றாகும். காந்தியப் போராட்டத்தின் இயல்புகள் என ஆறு விஷயங்களைச் சொல்லலாம்.
1. அது கோட்பாடுகளிருந்தும் சித்தாந்தங்களிலிருந்தும் பிறக்காது. நடைமுறையிலிருந்தே பிறந்து வரும். காந்தி அவரது கண்ணெதிரே கண்ட தென்னாப்பிரிக்க நிறவெறிக் கொள்கைக்கு எதிராக நடைமுறையில் இயல்பாகச் செய்து பார்த்த போராட்டங்களிலிருந்து மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்துதான் சத்தியாக்கிரகப் போராட்டத்தை உருவாக்கினார். எந்த நூல்களிலும் இருந்தல்ல.
அண்ணா ஹசாரேயின் போர், ராலேகான் சித்தியில் கிராம நிர்மாணச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது அவர் எதிர்கொள்ள நேர்ந்த அதிகார வர்க்க ஊழல் என்ற சமகால யதார்த்தத்தை எதிர்கொண்டதிலிருந்து ஆரம்பிக்கிறது. புத்தகங்களிலிருந்து அல்ல.

2. அது எப்போதும் மேலிருந்து கீழே செலுத்தப்படாது. கீழிருந்து, கிராமத்தில் வாழும் எளிய மக்களின் அன்றாட யதார்த்தங்களிலிருந்துதான் ஆரம்பிக்கும். அங்கிருந்துதான் வளர்ந்து தேசிய அளவுக்குச் செல்லும். இந்தியாவில் காந்தியப் போராட்டம் சம்பாரன் என்ற சிறு ஊரின் அவுரி விவசாயிகளின் கூலிப் போராட்டத்திலிருந்துதான் தொடங்கியது.
ராலேகான் சித்தி என்ற மகாராஷ்டிர கிராமத்திலிருந்துதான் அண்ணா ஹசாரேயின் போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. தில்லியில் இருந்து அல்ல.

படிப்படியாக:3. காந்தியப்போராட்டம் எப்போதுமே உடனடியாகச் சாத்தியமான இலக்குகளை முன்வைத்து, பெருந்திரளான மக்களைப் பங்கெடுக்கச்செய்துதான் நிகழும். படிப்படியாக, வென்றெடுத்தவற்றைத் தக்கவைத்துக்கொண்டு புதியவற்றைக் கோரியபடி அது மேலே செல்லும். தொடர்ந்து பலகாலம் பிடிவாதமாக முன்னேறிச் செல்வதே காந்திய வழிமுறை. முதலில் ரௌலட் சட்டத்துக்கு எதிராகவே காந்தி போரிட்டிருக்கிறார். உடனடியாக வெள்ளையர் வெளியேற வேண்டும் என அதிரடியாக ஆரம்பிக்கவில்லை.
அண்ணா ஹசாரேயின் போராட்டம் ராலேகான் சித்தியின் வனத்துறை ஊழலுக்கு எதிராக ஆரம்பித்து தகவல் அறியும் சட்டம் வழியாக இன்று லோக்பால்வரை வந்துள்ளது. அது இன்னும் முன்னேறிச் செல்லும்.
4. காந்தியப் போராட்டம் என்றுமே குறியீட்டுச் செயல்பாடுகளையே முன்னிறுத்தும். காந்தியின் அன்னியத் துணி எரிப்பும் சரி, உப்புக் காய்ச்சுவதும் சரி, நேரடியாக பார்த்தால் உடனடியாகச் சுதந்தரத்தை வாங்கித்தரக்கூடிய செயல்களே அல்ல. ஆனால் அவை குறியீடுகள். எனக்கு வேண்டியதை நானே செய்வேன் என்றும் என்னைச் சுரண்ட உன்னை அனுமதிக்க மாட்டேன் என்றும் வெள்ளைய அரசுக்குச் சொல்பவை அவை. போராட்டம்மூலம் அந்தக் குறியீடுகளின் அர்த்தம் வெளிப்படையாக ஆகி, வளர்ந்து செல்கிறது. இந்தியாவின் பொருளியல் விடுதலைதான் அந்த அர்த்தம். அவற்றின் அந்த உண்மையான அர்த்தம் பிரிட்டிஷ் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
அண்ணா ஹசாரேயின் போராட்டங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் மசோதா போன்றவற்றுக்கானவை மட்டுமல்ல. அவை குறியீடுகளே. சுருக்கமாகச் சொன்னால் அவை ஊழல் மிகுந்த அரசின்மீது மக்களுக்கு வரவேண்டிய நேரடி அதிகாரத்தைப்பற்றிப் பேசுகின்றன. அரசை மக்களே கண்காணிக்க வகைசெய்கின்றன. அந்த உள் அர்த்தம் அரசுக்கு நன்றாகவே தெரியும்.

மக்கள் பங்கேற்பு:5. காந்தியப் போராட்டம் என்பது அனைத்து மக்களையும் கலந்துகொள்ளச் செய்வது. ஆகவே அது தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாது. கோரிக்கைகளில் ஆர்வம் கொண்ட அனைவருமே பங்குபெறலாம் என்றே அது சொல்லும். காந்தியின் போராட்டங்களில் வெறும் மதவாதிகளான முகமது அலி, சௌக்கத் அலி போன்றவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்து மதவாதிகளும் சாதியவாதிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். காந்தி அனைவரையுமே இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள் பலத்தை உருவாக்க முயன்றார்.
அண்ணா ஹசாரேயின் போராட்டம் இடதுசாரிகள், மிதவாதிகள், தீவிரப்போக்குள்ளவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிரான மக்கள் அதிகாரம் என்ற மையத்தை வலியுறுத்துகிறது.
6. காந்தியப் போராட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அது ஒட்டுமொத்தமாக மக்களிடையே உருவாக்கும் மனமாற்றத்தில்தான் உள்ளது. தொடர்ச்சியான போராட்டங்கள் வழியாக ஒரு கருத்து அனைத்து மக்களாலும் ஏதோ ஒரு வகையில் ஏற்கப்படுகிறது. அது ஓர் அரசியல் சக்தியாக ஆகிறது. காந்தியப் போராட்டம் உண்மையில் அதற்காகவே நிகழ்கிறது. அதாவது காந்தியப் போராட்டம் எவரையும் தோற்கடிப்பதற்கானதல்ல. போராடுபவர்கள் தம்மைத் தகுதிப்படுத்திக்கொள்வதற்கானது.
காந்தி வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இந்திய மக்களின் அச்சத்துக்கு எதிராகவே போராடினார். இரு நூற்றாண்டுக்கால அராஜகங்களால், பஞ்சங்களால் அஞ்சி ஒடுங்கிக் கிடந்த சாமானிய இந்திய மக்கள் எந்தப் போராட்டத்துக்கும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களையும் சாமானிய மக்கள் மிகச் சில நாட்களிலேயே கைவிட்டிருக்கிறார்கள். மருது பாண்டியர், பழசி ராஜா முதல் சிப்பாய்க் கலகம்வரை இதைக் காணலாம். பல போர்களில் போரிட பத்தோ, பதினைந்தோ வெள்ளைக்காரச் சிப்பாய்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களை பார்த்ததுமே நம்மவர்கள் அஞ்சி விழுந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை. அந்த அச்சத்தைக் களைந்ததே காந்தியின் சாதனை.

மனமாற்றம்:அண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் வெற்றி என்பது அது இந்தியச் சமூகத்தில் உருவாக்கும் மனமாற்றம்தான். இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக இன்று இருப்பது பொதுவாழ்க்கையில் ஊழல். அந்த ஊழலுக்கு நம் சாமானிய மக்கள் அளிக்கும் அங்கீகாரம்மூலமே அது நிலைநிற்கிறது என்பதே உண்மை. அண்ணா ஹசாரே போராடுவது அந்த அங்கீகாரத்தைப் படிப்படியாக இல்லாமல் ஆக்குவதற்காகவே. அதற்கு, ஊழல் உருவாக்கும் ஒட்டுமொத்த அழிவைப்பற்றிய சித்திரத்தை நம் மக்களுக்கு அளித்தாகவேண்டும். ஊழலை ஒரு முக்கியமான பிரச்னையாக நம் நாட்டையே பேசவைக்கவேண்டும். அவர் செய்வது அதைத்தான்.
அண்ணா ஹசாரே போராடிக்கொண்டிருப்பது இந்தியாவைப் பீடித்துள்ள அவநம்பிக்கையுடன். இலட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்து வெறும் நடைமுறைவாதிகளாக, அப்பட்டமான சுயநலவாதிகளாக ஆகிவிட்டிருக்கும் நம் மக்களை நோக்கி அவர் பேசுகிறார். அவரது போராட்டங்கள் இன்றைய அவநம்பிக்கையை அழிக்க முடிந்தால் அவர் வென்றார் என்றே பொருள்.
கோட்பாடு பேசும் அறிவுஜீவிகளால் ஒருபோதும் மக்களின் பேரியக்கமான காந்தியப் போராட்டத்தை உருவாக்கிவிட முடியாது. புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. ஆனால் அவர்களால் அவநம்பிக்கைகளை எளிதில் உருவாக்கிவிட முடியும். இன்று அண்ணா உருவாக்கும் நம்பிக்கைக்கு நேர் எதிரான சக்திகளாக இருப்பவர்கள் நம் சவடால் அறிவுஜீவிகள். வரலாற்றுநோக்கு இல்லாத அவர்களது வெட்டித் தர்க்கங்களுக்கு எதிராக ஒரு முழுமைநோக்கில் காந்தியிலிருந்து அண்ணா ஹசாரே வரையிலான மக்கள் போராட்டங்களைப் புரிந்துகொள்ளும்படியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

( அடுத்த பகுதி 08/ 07/ 2013 அன்று வெளிவரும்)


இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-688-9.html
போன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797
பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள: http://www.kizhakku.in

(நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை)வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X