nsimg3436108nsimg |
கர்நாடக மாநிலம் தண்ணீர் இல்லை என்று கைவிரித்துவிட்ட நிலையில், நாகை மாவட்டத்தின் கடை மடை பகுதி விவசாயம் பாழ்பட்டு பாலைவனமாகி வருகிறது.
விவசாயிகள் கருகும் பயிர்களைப் பார்த்து தண்ணீர் விடமுடியாமல் கண்ணீர்விட்டு வருகின்றனர்.
ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ள அரசியல்வாதிகளுக்கு விவசாயிகளின் கண்ணீர் பற்றியும் கவலையில்லை,விவசாயம் பற்றியும் புரிதலில்லை.
nsmimg1172196nsmimg |
இதை வைத்து அரசியில் செய்வார்களே தவிர மனசாட்சிப்படி செயல்பட்டு தீர்வு காணமாட்டார்கள்.
இருப்பதைவிற்று அதுவும் போதாமல் கடன் வாங்கி விதை விதைத்து உரமிட்டு வளர்த்த பயிர்கள் விளைந்தால் மட்டுமே மீளமுடியும் என்ற நிலையிலுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் கர்நாடக மாநிலம் விளையாடுகிறது.
இன்னும் பத்து நாள் தண்ணீர்விட்டால் கூட பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் தண்ணீரை நிறுத்தியது மிகப்பெரிய இழப்பை தரும் என்கின்றனர். பயிர்களோடு சேர்ந்து நாங்களும் கருக வேண்டியதுதான் என்று கண்ணீர்விட்டு உருகுகின்றனர்.
nsmimg1172197nsmimg |
விதை தெளித்து இருமுறை உரமிட்டு, களையெடுத்து தற்போது 60 நாட்களாகி விட்டது. ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்தேன். குறுவை 70 நாட்களில் சூல் பருவம். கதிர்கள் வெளியில் வரும்.60 நாட்களாகி விட்ட நிலையில் இதற்கு மேல் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வந்தால் மட்டுமே முடியும் என்று நா தழுதழுக்கிறார், கண்ணன் என்ற விவசாயி.எல்லா விவசாயிகளின் நிலமையும் இப்படித்தான்.
கடைமடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், கர்நாடகம் மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல், வெள்ள நீரை வெளியேற்றும் வடிகாலாகவே தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது. கருகும் பயிர்களை காப்பாற்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் திறக்க வேண்டிய காவிரியின் உரிமை பங்கு நீரை தினந்தோறும் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அடிப்படையில் பகிர்ந்து அன்றே தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த பாவப்பட்ட மக்களுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்கச் செய்திடவேண்டும் இல்லாவிட்டால் விவசாயமும்,விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் அது நம்மிடம்தான் எதிரொலிக்கும்.
படங்கள்:கருணாகரன்
-எல்.முருகராஜ்