மின்வாரிய 'கேங்மேன்' தேர்வில் முறைகேடா?
''எத்தனை கோடி வேணும்னாலும், அள்ளிவிட தயார்னு சொல்றாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''எந்தக் கட்சியில ஓய்...'' என, பட்டென கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணி... சேலம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்... நெடுஞ்சாலை ஒப்பந்ததாரராகவும் இருக்காருங்க..
''முதல்வர் தொகுதியான இடைப்பாடியிலயே, நிறைய கான்ட்ராக்டர் பணிகளை செய்துட்டு இருக்காருங்க... இதனால, முதல்வருக்கு நெருக்கமா இருக்காரான்னு, தி.மு.க., புள்ளிகள் மத்தியில சந்தேகம் எழுந்திருக்குதுங்க...
''இதை போக்குற விதமா, 'இடைப்பாடியில, 'சீட்' தந்தா, முதல்வரை எதிர்த்து, எத்தனை கோடி செலவு பண்ணவும் தயாரா இருக்கேன்'னு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளிடம் சொல்லிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பக்கத்து மாவட்ட தி.மு.க., செயலர் பிளானையும் கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரா இருக்கிறவர் ராஜேஷ்குமார்... ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான், இந்தப் பதவிக்கு வந்தாரு வே...
''தேர்தல்ல போட்டியிடணும்கிற திட்டத்துல இருக்கிற இவர், இந்த ஒரு வருஷத்துல, 424 தொண்டர்களின் இல்ல திருணமத்திற்கு போய், தங்க நாணயத்தை மொய்யா வச்சிருக்கார்... 612 துக்க நிகழ்ச்சிக்கு போய், தலா, 5,000 ரூபாய் நிதியுதவி குடுத்திருக்காரு வே...
''இவரது கிழக்கு மாவட்டத்துல, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம்னு மூணு தொகுதிகள் இருக்குது... இதுல, சேந்தமங்கலம் மலைவாழ் மக்களுக்கும், ராசிபுரம் எஸ்.சி., சமூகத்துக்கும் போயிடும்... நாமக்கல் ஒண்ணு தான் இவருக்கு ஒரே சாய்ஸ்...
''ஆனா, நாமக்கல், 'சிட்டிங்' எம்.பி.,யை வச்சிருக்கிற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, நாமக்கல் தொகுதியை கேட்க இருக்காம்... இதனால, ராஜேஷ்குமார், நாமக்கல் தவிர, திருச்செங்கோடு தொகுதியிலும் போட்டியிட மனு குடுத்திருக்கார்... நாமக்கல் தப்பிட்டாலும், திருச்செங்கோட்டை பிடிச்சுரணும்னு, காய் நகர்த்திட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''கேங்மேன் தேர்வுல முறைகேடு நடந்திருக்கலாம்னு சந்தேகப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மின்வாரியத்துல தானேங்க...''எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஆமாம்... தமிழக மின் வாரியம், கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' வேலைக்கு, உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலமா, 10 ஆயிரம் பேரை தேர்வு செய்திருக்கு... தேர்வானவர்களுக்கு, பணி நியமன ஒதுக்கீட்டு ஆணைகளை, சமீபத்துல, இ - மெயில்ல அனுப்பினாங்க பா...
''தேர்வு எழுதி வேலை கிடைக்காத, 100க்கும் மேற்பட்டோர் மறுநாளே, மின்வாரிய அலுவலகத்துல குவிஞ்சிட்டாங்க... 'நாங்க நல்ல மார்க் எடுத்தும் வேலை கிடைக்கலை... பணி நியமன பட்டியலை எந்த அடிப்படையில வெளியிட்டீங்க'ன்னு அதிகாரிகளிடம் கேட்டாங்க பா...
''அப்ப, மின் துறை அமைச்சர் தங்கமணி, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த அலுவலகம் வந்தாரு... அவர் காரை பார்த்ததும், இளைஞர்கள் ஓடிப் போய், 'ஐயா எங்களுக்கு வேலை கொடுங்க'ன்னு முற்றுகையிட்டாங்க பா... அமைச்சரும், அவங்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனாருங்க...
''இப்ப, தேர்தல் அறிவிச்சிட்டதால, இனி எதுவும் செய்ய முடியாதுங்கிறதால, வேலை கிடைக்காதவங்க சோகத்துல இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.