முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்த காங்., தங்கபாலு! | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்த காங்., தங்கபாலு!

பதிவு செய்த நாள் : நவ 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்த காங்., தங்கபாலு!

''கட்சிக்காரங்களை கசக்கி பிழியுறாங்களேன்னு, வருத்தப்படுறாங்களாம் பா...'' என்றபடியே, டீயை உறிஞ்சினார், அன்வர்பாய்.''என்ன ஏதுன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தி.மு.க., கட்சி பத்திரிகைக்கு, ஆயுள் சந்தாவாக, ஒன்றிய நிர்வாகிகளிடம், 3 லட்சம்; நகர நிர்வாகிகளிடம், 2 லட்சம் ரூபாய்ன்னு, கட்சிக்காரங்களிடம் வசூலிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம் பா... ''லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்னு செலவு செஞ்சி, ஓஞ்சுருக்குற நிலையில, மீண்டும் சந்தா கேட்டு நச்சரிக்கிறாங்களேன்னு, கட்சி நிர்வாகிகௌல்லாம், வருத்தப்படுறாங்க... ''இதுல, உள்ளாட்சி தேர்தல் வேற வருது... என்ன பண்ணுறதுன்னே தெரியலைன்னு புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''தலைமை செயலர் உத்தரவுக்கே, மரியாதை இல்லையா வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''பாருடா... அவருக்கே அந்த கதியா...'' என, 'கமென்ட்' அடித்தார், அந்தோணிசாமி.''சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள்ல, மழை முன்னெச்சரிக்கை பணிக்கு, 7.60 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கிச்சு... இந்த நிதியில, நீர்வழித்தடங்களை துார் வார்ற பணிகள் நடக்கணும் வே... ''பொதுப்பணித் துறை தேர்ந்தெடுத்த ஒப்பந்தக்காரர்கள், நிறைய லாபம் பார்க்கணுமுன்னு, வேலையை முறையா செய்யலை... ஆய்வுக்குப் போன தலைமை செயலர் சண்முகம், சென்னையில் பல இடங்களை பார்வையிட்டார்... பணிகளை வேகப்படுத்தணும்னு உத்தரவும் போட்டார்... திரும்ப வந்து பார்வையிடுவேன்னும், அதிகாரிகளை எச்சரிச்சார் வே... ''ஆனா இன்னும் பணிகளை முடிக்காம, ஒப்பந்தக்காரங்க, அரசை ஏமாத்திட்டு இருக்காவ... மக்களோட வரிப் பணத்தை ஆட்டைய போட நினைக்காவ... யாரு தடுக்குததுன்னு தெரியலை வே...'' எனக் கூறி முடித்தார், அண்ணாச்சி.''சம்பந்தமே இல்லாம, முதல்வரிடம் கோரிக்கை வச்சுட்டு வந்திருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.''யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''சேலம் வீட்டில் தங்கியிருந்த, முதல்வர் இ.பி.எஸ்.,சை, காங்., மூத்த தலைவர் தங்கபாலு, சமீபத்தில் சந்திச்சு பேசினார்... முதல்வரோட மாமனார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்தேன்னு, அவர் பேட்டி கொடுத்தார் ஓய்... ''ஆனா, முதல்வர்கிட்ட வித்தியாசமான கோரிக்கை வைக்கத் தான் போனார்ன்னு, அரசியல் வட்டாரத்துல பேசிக்கறா ஓய்... ''அதாவது, உள்ளாட்சி தேர்தல்ல, தன் மனைவியை, சேலம் மேயர் வேட்பாளராக்க, தங்கபாலு விரும்பறார்... அ.தி.மு.க., வேட்பாளரை, அங்கே நிறுத்தினா சிக்கல் ஏற்படும்...'உங்க கூட்டணியில, பா.ம.க.,காரா, சேலம் மாநகராட்சியை கேட்டுண்டு இருக்கா... அதனால நீங்க, சேலம் மாநகராட்சியை அவாளுக்கு கொடுத்தா, நாங்க, 'ஈசி'யா ஜெயிச்சிடுவோம்'னு, தங்கபாலு சொல்லி இருக்கார்... இதுக்கு முதல்வர், சிரிச்சுண்டே நழுவிட்டாராம் ஓய்...'' எனக் கூறி முடித்தார், குப்பண்ணா.நண்பர்கள், சிரித்தபடியே நடையை கட்டினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X