விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: உள் ஒதுக்கீடு வழங்குவது, அரசின் அதிகாரம் தான். எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் யாராவது நீதிமன்றத்தில் முறையீடு செய்தால், அரசின் உள் ஒதுக்கீடுக்கு தடை விதிக்கப்பட்டு விடும்.
'டவுட்' தனபாலு: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில், பிற கட்சியினரை விட, உங்களுக்கு தான் காட்டம் அதிகம் போலிருக்கிறது... அது தவறு என்றால், நீதிமன்றத்தின் உதவியை நீங்களே நாட வேண்டியது தானே. மாறாக, பிரச்னையை ஏற்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்டோரை துாண்டி விடுகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!
பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: ஒரத்தநாட்டில், ஈ.வெ.ரா., சிலைக்கு காவி துண்டு போர்த்தபட்டுள்ளதை அறிந்த அரசியல்வாதிகள் பலர், தங்களின் கண்டனத்தை தெரிவித்து, பா.ஜ.,வை குற்றம்சாட்டி, பொங்கி எழுந்தனர். ஆனால், எந்த கட்சியையும் சாராத, மனநலம் பாதித்த ஒருவர் தான் இதை செய்ததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தில் மானாவாரியாக சிலைகளை வைத்து விடுவர்; அதை பராமரிக்க மாட்டார்கள். ஆனால், ஒவ்வொருவர் சிலைக்கும் எதிராளிகளையும் நிர்ணயம் செய்திருப்பர். சிலைக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், எதிராளி மீது பழி போடுவது காலம் காலமாக செய்து வரும் அரசியல் என்பதில், மக்களுக்கு எப்போதும், 'டவுட்' வரவே செய்யாது!
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் சண்முகம்: வன்னியர்களுக்கு தற்காலிகமாக உள் ஒதுக்கீடு வழங்கியது, தேர்தல் ஆதாயம் கருதி தானே தவிர, உண்மையான அக்கறையால் அல்ல. வன்னியர் வாழ்வில் உண்மையிலேயே மாற்றம் நிகழ வேண்டும் என்றால், அவர்களில் பெரும்பாலானோர் நிலமற்ற ஏழைகளாக உள்ளனர். அவர்களுக்கு நிலம் வழங்க, தமிழக அரசு முன்வருமா?
'டவுட்' தனபாலு: இப்போது நிலம் கேட்பீர்கள்; அதன்பின், மாதந்தோறும் வீடுகளுக்கு அரிசி, மசாலா, காய்கறிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்பீர்கள். அதனால் தான், இட ஒதுக்கீடே வேண்டாம் என்கின்றனர் நடுநிலையாளர்கள். உங்களைப் போன்றவர்கள் கோரிக்கையை பார்க்கும் போது, பிற நாடுகளின் அரசியல் நிலவரங்களை கவனித்திருக்க மாட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில், எந்த நாட்டிலும், இப்படி இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு, வெளி ஒதுக்கீடு எல்லாம் கிடையாது!