மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: கூட்டணிக் கட்சிகள், ஊழலுக்கு அப்பாற்பட்டதா என்று பார்க்கத் தேவையில்லை. நாட்டு நலனுக்கு அப்பாற்பட்டு நிற்பவர்கள் ஒருபுறமும், நாட்டு நலனுக்காக ஒன்றுபடுபவர்கள் ஒருபுறமும் உள்ளனர்.டவுட் தனபாலு: அடேங்கப்பா... எலும்பில்லாத நாக்கு தான்... அதுக்காக இப்படியாங்க... 'நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்கணும்னா, ஊழல் இருக்கக் கூடாது'ன்னு, நேற்று வரைக்கும் பேசிய உங்க வாய், இன்றைக்கு, 'அது ஒன்றும் பெரிய விஷயமல்ல'ன்னு, 'உல்டா'வாக பேசுவது சரியா என்பது தான், என்னோட, 'டவுட்!'பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: பா.ம.க.,வுடன் கூட்டணி என்பது, கொள்கை ரீதியிலானது; சந்தர்ப்ப கூட்டணி அல்ல.டவுட் தனபாலு: கட்சிக் கொள்கைகளை எல்லாம் விடுங்க... முதல்ல, 'எதுவா இருந்தாலும், அனைவரும் கலந்து ஆலோசித்து கருத்து சொல்லணும்'கற, ஒரு கொள்கை முடிவுக்கு வாங்க... 'கொள்கையைப் பார்த்தால் கூட்டணி அமைக்க முடியாது; தேர்தல் நேரத்தில், எண்ணிக்கை தான் கொள்கை'ன்னு, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தம்பிதுரை போன்றோர் விளக்கம் அளிக்குறாங்க... நீங்க, யாருக்கு சப்பைக்கட்டு கட்டுறீங்க என்பதுதான், மக்களின், 'டவுட்!'
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி: வெற்றி பெற வாய்ப்பே இல்லாத சூழலில், பீஹார், தமிழகம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், பா.ஜ., கூட்டணியை அமைத்துள்ளது, இது, பா.ஜ.,வின் பலவீனத்தை காட்டுகிறது.டவுட் தனபாலு: நீங்க குறிப்பிடும் மாநிலங்களில், பிரதான எதிரிகள் யாருடனும், பா.ஜ., கூட்டணி அமைக்கலை... மாநிலத்தில், எதிரும் புதிருமாக அரசியல் செய்து, ஆட்சியை தட்டிப் பறித்துக் கொண்ட நீங்க, சமாஜ்வாதியுடன் கைகோர்த்து இருக்கீங்களே... இதை விட பெரிய பலவீனம் ஏதும் இருக்கா என்பது தான், என்னோட, 'டவுட்!'