'தேர்தலுக்கு பிறகு, அடுத்த நகர்வு குறித்து முடிவு எடுப்பீர்கள் என நம்பலாமா...' என, கிடுக்கி போடும் வகையில், பா.ஜ.,வில் இணைந்துள்ள நடிகை குஷ்பு: மூன்று கட்சிகள் மாறி விட்டீர்களே என பலரும் கேட்கின்றனர். 'எங்கு மரியாதை இல்லையோ, அங்கு இருக்காதே' என, என் அம்மா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தி.மு.க., மற்றும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளேன். பா.ஜ.,வில் நல்ல மரியாதை உள்ளது.
'தேர்தலுக்காக அறிவித்ததால், கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டு விடவா செய்தது...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி: காவிரி உபரி நீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று எதிர்ப்பதற்கு, கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எந்த தார்மிக உரிமையும் கிடையாது. எனினும், காவிரி - வைகை - குண்டாறு திட்டம், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது போல் உள்ளது.
'நீங்கள் போய் சந்தித்த, 'தியாகத் தலைவி'யிடம் கடனாக கேட்டு, நிதி நிர்வாகத்தை சரி செய்ய வேண்டியது தானே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிக்கை: தமிழகத்தின் கடன் தொகை அதிகரிப்பானது, எதிர்காலத்தில் தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் மீதும், கூடுதல் சுமையை, உண்டாக்கக் கூடும் என்பதால், தமிழக அரசு நிதி நிர்வாகத்தை கடன் நெருக்கடியின்றி, திறம்பட கையாள வேண்டும் என்ற அவசியத்தை உணர வேண்டும்
'உங்கள் ஆட்சியில், பெட்ரோல் விலையை குறைத்திருந்தால் தான் சாதனை; அதிகப்படுத்தியது சாதனையில்லை...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசியச் செயலர், எச்.ராஜா பேட்டி: மத்தியில் இதற்கு முன் காங்., ஆட்சி செய்த, பத்தாண்டுகளில், பெட்ரோல் விலை, 39 ரூபாய் உயர்ந்துள்ளது. எங்களின், ஏழாண்டு ஆட்சியில், 19 ரூபாய் தான் உயர்ந்துள்ளது. ஆக, பத்து ஆண்டுகளில், விலை உயர்வு அதிகமா; ஏழாண்டுகளில் விலை உயர்வு அதிகமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
.
'எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக் கொள்வான் என, மாநில அரசு நினைக்கிறதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழக இடைக்கால பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதுபோல, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் குறைவு.