பேராசிரியர் எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலை முன் வைத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்க, அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்படத் துவங்கி விட்டன. தனித்துப் போட்டியிட்டால் எண்ணம் ஈடேறாது என்பதால், கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலும் அக்கறை காட்டுகின்றன.
மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 28 எதிர்க்கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியையும் உருவாக்கியுள்ளன. அதே நேரம், தேர்தல் நெருங்க, நெருங்க இரு கூட்டணிகளிலும், நெருக்கம் அதிகரிப்பதற்கு பதிலாக, தினந்தோறும் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டணியில், விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க காங்கிரஸ் கருதினாலும், 'நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், தொகுதி பங்கீடு பற்றி பேசிக் கொள்ளலாம்' என, பெரும்பாலான மாநில கட்சிகள் கருதுகின்றன.
மேலும், 'இண்டியா' கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி, 'கேரளா, மேற்கு வங்கத்தில் கூட்டணியில் இடம்பெற மாட்டோம். மற்ற மாநிலங்களில் மட்டுமே கூட்டணி' என, அதிரடியாக அறிவித்துள்ளது.
மறுபக்கம், தே.ஜ., கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., 'இனி, பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை, பா.ஜ., மேலிடத் தலைவர்கள் உத்தரவுப்படி, மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து அ.தி.மு.க.,வை விமர்சித்து வருகிறார்' என குற்றம் சாட்டியுள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியின்றி தோல்வி அடைந்தாலும் கவலை இல்லை' என்றும் அதிரடி காட்டியுள்ளார். அது, ஓரளவுக்கு உண்மையே. அ.தி.மு.க.,வுக்கு லோக்சபா தேர்தல் முக்கியமில்லை, சட்டசபை தேர்தல் தான் முக்கியம். எனவே, மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றால், பா.ஜ.,வினர் அ.தி.மு.க.,வை அரவணைத்து செல்வது தான் புத்திசாலித்தனம்.
அதேபோல, 'இண்டியா' கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரசும், மாநில கட்சிகளை அனுசரித்து சென்றால் தான், லோக்சபா தேர்தலில் அதன் எண்ணம் ஈடேறும். எல்லாவற்றுக்கும் மேலாக, இரண்டு கூட்டணியும் வலுவுடன் களத்தில் இருப்பதே, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும் வழிவகுக்கும்.
கருப்பு ஆடுகள் அடக்கி வாசிக்கும்!
கு.அருண்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக, நம் நாட்டில்
எல்லா விசாரணை அமைப்புகளும், ஆளுங்கட்சியின் தலையாட்டி பொம்மைகளாக
செயல்படும் என்ற குற்றச்சாட்டு உண்டு. மத்திய அரசுகள், தங்கள்
கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை
போன்றவற்றை பயன்படுத்தி, தங்களது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதாக
எதிர்க்கட்சிகள் புகார் வாசிக்கும்.
அதுபோல மாநில அரசின் காவல் துறையில், பல்வேறு பிரிவுகளும் ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் வரும்.
கடந்த,
2006 - 20-11 தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு,
மனைவி மணிமேகலை ஆகியோர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக,
அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, 2012ல் வழக்குப்பதிவு செய்தது.
இதேபோல,
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த சாத்துார் ராமச்சந்திரன், மனைவி
ஆதிலட்சுமி மீதும், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ், 2012ல் சொத்து குவிப்பு
வழக்கு பதிவு செய்தது. இந்த இரு வழக்குகளிலும், 2013, 2014ல்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி இரு முன்னாள்
அமைச்சர்களும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க தாக்கல் செய்த மனு, பல
ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. தற்போது, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு
வந்ததும், சிறப்பு நீதிமன்றத்தால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதை
எதிர்த்து, தானாக வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்
வெங்கடேஷ் கருத்துப்படி, இரு வழக்குகளிலும், குற்றம்சாட்டப்பட்டோர், லஞ்ச
ஒழிப்புத் துறை மற்றும் சிறப்பு நீதிமன்றம் என மூவரும், நீதி பரிபாலன
நிர்வாக முறையை கேலிக்கூத்தாக்கி விட்டனர் என்பது உண்மையே!
தற்போது,
செந்தில் பாலாஜி மீதான மூன்று லஞ்ச வழக்குகளையும், தமிழக காவல் துறை
செப்., 30க்குள் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், அதை விசாரிக்கும் காவல்
துறையினர் தவறாக முடிவெடுக்க அஞ்சுவர்!
எது எப்படியோ, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியால், சில காலங்கள் இந்த கருப்பு ஆடுகள் அடக்கி வாசிக்கும்!
குற்றங்கள் குறைய என்ன வழி?
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மதுரையைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் குருசாமி என்பவரை தமிழக கொலைகார
கும்பல், கர்நாடக தலைநகர் பெங்களூரில் வைத்து கொடூரமாக தாக்கி உள்ளனர்.
அடுத்து பல்லடத்தில் ஒருவரின் தோட்டத்தில், கூட்டாக மது அருந்தியோரை
தட்டிக் கேட்டவர், அவரது உறவினர்கள் என, நால்வரை கொடூரமாக வெட்டி
கொன்றுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகி
விட்டன. ரவுடிகள் எப்போதும் ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர்; பொதுமக்கள்,
எப்போதும் பயத்துடனே இருக்கின்றனர். அரசியலில் செல்வாக்கு உள்ளவர்கள்,
கூலிப் படைகளை கையில் வைத்தபடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறிப்பது,
வட்டித் தொழில், பணத்திற்காக கொலை செய்வது மாதிரியான வேலைகளில்
ஈடுபடுகின்றனர்.
இவர்கள் சிறை சென்றாலும், தங்களது அரசியல்
செல்வாக்கு மற்றும் பணத்தை வைத்து, திறமையான வக்கீல்களை பிடித்து ஜாமினில்
வந்து, மீண்டும், 'தொழிலில்' இறங்கி விடுகின்றனர். அதையும் மீறி,
சிறைக்குள் தள்ளி விட்டாலும்,அங்கும் அனைத்து வசதி, வாய்ப்புகளையும் பெற்று
விடுகின்றனர்.
இதனால், கூலிப்படையினர் கொலைகள் செய்யவோ, சிறை
செல்லவோ துளியும் பயப்படுவதில்லை. உடனே ஜாமின் கிடைப்பதும் மற்றும்
விசாரணையை பல ஆண்டுகள் இழுத்து தண்டனை தாமதிப்பதும் தான் இதற்கு காரணம்.
குற்றங்கள் குறைய, குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்காமல், விசாரணையை காலம் தாழ்த்தாமல் விரைவாக நடத்தி, தண்டனை வழங்க வேண்டும்.
சிறைகளில்,
குற்றவாளிகளுக்கு தரப்படும் சவுகரியங்கள் தடுக்கப்பட வேண்டும். ஆங்கிலேயர்
காலத்தில் இருந்தது போல, சிறைக் கூடங்கள், கொசுக்கடி, மூத்திர வாடையுடன்
கூடிய இருட்டறையாக இருக்க வேண்டும்.
'இனி இங்கு வந்து விடவே கூடாது'
என்ற உணர்வை, குற்றவாளிகள் மனதில் விதைக்க வேண்டும். அப்போது தான், கொலை,
கொள்ளைகள் குறையும்; தமிழகமும் அமைதிப் பூங்காவாக திகழும்!