உங்கள் வாரிசுகள் ஹிந்தி கற்கவில்லையா? | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

உங்கள் வாரிசுகள் ஹிந்தி கற்கவில்லையா?

பதிவு செய்த நாள் : ஆக 07, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 உங்கள் வாரிசுகள் ஹிந்தி கற்கவில்லையா?

எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எதிர்பார்த்ததை போல, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கும், தன் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார், தி.மு.க., தலைவர், ஸ்டாலின்.தமிழகத்தில் தமிழும், ஆங்கிலமும் அடங்கிய, இரு மொழிக் கொள்கை தான் இருக்க வேண்டுமாம்... மூன்றாவது மொழியாக, ஹிந்தியை பயிற்றுவிக்கக் கூடாதாம்... மூன்று மொழிகளைக் கற்க, பிஞ்சுக் குழந்தைகள் கஷ்டப்படுமாம். தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதியின் இந்த பேச்சைக் கேட்டு தான், நாங்கள் வீணாகிப் போனோம். எங்கள் சந்ததியாவது உருப்படட்டும் என, ஆசைப்படுகிறோம்; அந்த ஆசையில், மண் அள்ளிப் போட நினைக்கிறார், ஸ்டாலின்.எங்களை எல்லாம், ஹிந்தி படிக்க விடாமல் செய்த கருணாநிதி, தன் பிள்ளைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் மட்டும் ஹிந்தி கற்றுக் கொடுக்க செய்தது, துரோகம் தானே! மிஸ்டர், ஸ்டாலின்... உங்கள் செல்ல மகள், 'சன்ஷைன்' என்ற, சி.பி.எஸ்.இ., பள்ளியை, சென்னை, வேளச்சேரியில் நடத்திக் கொண்டிருக்கிறாரே... அங்கு, தமிழும், ஆங்கிலமும் மட்டும் தான் பயிற்றுவிக்கப்படுகிறதா?நீங்கள், உண்மையான தமிழ் பற்றாளராக இருந்தால், இரு மொழி கொள்கை தான் வேண்டும் என, உறுதியாக நிற்பவரானால், சன்ஷைன் பள்ளியில் இருந்து, தமிழ், ஆங்கிலத்தை தவிர, ஏனைய மொழிகளை, கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள்...அதன் பின், புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். அது முடியாதென்றால், வாயை மூடிக் கொள்ளுங்கள்.***


தொழிற்சங்கம் தேவையா?

எம்.குணசேகரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பல ஆண்டுகளுக்கு முன், சென்னையில், இருசக்கர வாகனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், மாத சம்பளம், 127 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தேன்.தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக, அந்நிறுவனம் மூடப்பட்டது. அதன் பின், இன்னொரு நிறுவனத்தில், இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன்; அங்கும், தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்ததால், என் வேலை பறிபோனது.நான், கால்பந்து விளையாட்டு வீரனாக இருந்ததால், வருமான வரித் துறையில், இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது. அங்கு, இரண்டு சங்கங்கள் இருந்தன. அதில், ஒரு சங்கத்தில், இணைந்தேன்.இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்றார், ராஜிவ். அரசு அலுவலகங்களில், கணினிகள் புகுத்தப்பட்டன. இதற்கு, எங்களின் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது; இன்னொரு சங்கம் ஆதரவு தெரிவித்தது. ஊழியர்கள் அனைவருக்கும், கணினி பயிற்சி அளிக்கப்பட்டது; எங்கள் சங்கத்தில் இருந்தோர், அதில் பங்கேற்கவில்லை.அரசுக்கு தேவைப்பட்ட ஊழியர்கள், நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டனர். 15 ஆண்டுகள் உருண்டோடின. நேரடியாக பணியில் சேர்ந்தோருக்கு, கணினி பரிச்சயம் இருந்ததால், பதவி உயர்வில் முன்னுரிமை கிடைத்தது; சங்கத்தில் இருந்த எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், எங்களுக்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு கீழே, நாங்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டது.மற்றொரு சங்கத்தின் உறுப்பினர் ஒருவர், 'உங்கள் தொழிற்சங்கத்தின் தலைவர், செயலர், பொருளாளரின் வாரிசுகள், வெளிநாடுகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக உள்ளனர்... உங்களை கற்றுக்கொள்ள வேண்டாம் என தடுத்தவர்களும், தங்களின் பிள்ளைகளை, கணினி படிக்க வைத்தனர்' என்றார்.அப்போது தான், தொழிற்சங்கத் தலைவர்கள், தாங்கள் பிரபலமாவதற்காகவும், வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளவும் தான், அரசுக்கு எதிராக போராடுகின்றனர் என்பது, எனக்கு உரைத்தது.தொழிற்சங்கங்களில் அரசியல் புகுந்ததால், அழிந்து போன நிறுவனங்கள் ஏராளம். வாழ்வாதாரம் இழந்தோர் எண்ணிக்கை, மிக அதிகம்.தொழிற்சங்கத்தில் இருந்து, பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், என் கேள்வி ஒன்று தான்... நம் நாட்டில், தொழிற்சங்கம் தேவையா?***


நம் சந்ததியின் முதுகில் சிலிண்டர்!

ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரஸ், சர்வதேச நகரங்களில், கொரோனா வைரஸ் பரவல் குறித்த கொள்கை அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், 'அந்நோய் தொற்றால், நகர்ப்புறங்களைச் சேர்ந்தோர் தான், 90 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதிக காற்று மாசு உள்ள பகுதியில் தான், இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கால், டில்லி போன்ற நகரங்களில், காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. இது, தற்காலிகமானது தான்; ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டால், மீண்டும் காற்று மாசு அதிகமாகும். எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில், உலக நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், ஐ.நா., சபை உருவாக்கியுள்ள, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழுவில், இந்தியாவைச் சேர்ந்த, தட்ப வெப்ப ஆய்வாளர், அர்ச்சனா சோரெங் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, மகிழ்ச்சி அளிக்கிறது.இவர் உட்பட, இளம் வல்லுனர்கள், ஆறு பேர் அடங்கிய சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு, மாசு பரவலைக் குறைத்து, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை, ஐ.நா., சபைக்கு வழங்கப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் மாசு விஷயத்தில், ஐ.நா., சபையின் ஆலோசனையை பின்பற்றி, நம் நாட்டில் செயல்படுத்த வேண்டும். நம் நாட்டில் காற்று மாசு குறைந்திருப்பதும், நதிகள் துாய்மையாக இருப்பதும், இந்த கொரோனா காலத்தில், சாத்தியமாகி இருக்கிறது. இதை பராமரித்து, தொடந்து பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறினால், துாய காற்றை சுவாசிக்க, நம் சந்ததியினர், ஒவ்வொருவர் முதுகிலும், ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X