என்ன நடக்குமோ?
'பள்ளிக்கூட வாத்தியார் போல், நடவடிக்கை எடுக்கிறாரே... பிரம்பையும் கையில் துாக்கி விடுவாரோ' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானைப் பார்த்து அலறுகின்றனர், அந்த மாநில அதிகாரிகள். மென்மையான குணத்துக்கு, பெயர் பெற்ற சிவ்ராஜ் சிங் சவுகான், இப்போது, கடுமையான அவதாரம் எடுத்துள்ளார்; இதையறிந்த, அதிகாரிகளும், பா.ஜ., மூத்த நிர்வாகிகளும், அவரிடம் உஷாராகவே காய் நகர்த்தி வருகின்றனர். ஆனாலும், அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு, சிவ்ராஜ் சிங் சவுகான், மிக கடுமையாக நபராக, தன்னை அடையாளப்படுத்துவதால், அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர். சமீபத்தில், போபாலில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்த சவுகான், தன் அறைக்குச் செல்வதற்காக, 'லிப்ட்'டில் ஏறினார்; கோளாறு காரணமாக, லிப்ட் இயங்கவில்லை. பாதியிலேயே நின்றுவிட்டது. அதிகாரிகள் பதறினர். சில நிமிடங்களுக்குப் பின், கோளாறு சரி செய்யப்பட்டது. கோபத்தின் உச்சிக்கே சென்ற சவுகான், முதல் வேலையாக, அந்த லிப்ட் பராமரிப்பு அதிகாரிகள் மூன்று பேரை, அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். அடுத்த நாள், முதல்வரின் முகாம் அலுவலகத்தில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஏராளமான கழிவு நீர் வெளியேறியது. அடுத்த நிமிடமே, சம்பந்தப்பட்ட அதிகாரியை, 'சஸ்பெண்ட்' செய்தார். முதல்வரின், இந்த அதிரடியைப் பார்த்த அதிகாரிகள், 'எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, யார் பதவி பறிபோகுமோ' என, அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அவர் வருவாரா?
' எங்களை எல்லாம், அவருக்கு ஞாபகம் இருக்குமா என்றே தெரியவில்லை. இனியாவது தொகுதி பக்கம் தலைகாட்டினால் சரி' என, உத்தர பிரதேச மாநிலம், மதுரா தொகுதியின், பா.ஜ., - எம்.பி., ஹேமமாலினி பற்றி, விரக்தியுடன் பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ஹேமமாலினி, முன்னாள் பாலிவுட் நடிகை. இவரது பூர்விகம், தமிழகத்தின் ஸ்ரீரங்கம் என்றாலும், இளம் வயதிலேயே மும்பைக்குச் சென்று, பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டினார். தர்மேந்திரா என்ற ஹிந்தி நடிகரை திருமணம் செய்து, குடும்பம், குழந்தை என, அங்கேயே, 'செட்டில்' ஆகி விட்டார். நடிப்பு போரடித்ததால், அரசியலில் குதித்த அவர், பா.ஜ., வில் இணைந்து, மதுரா தொகுதியின், எம்.பி.,யாக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார்.
'தொகுதி பக்கமும், பார்லிமென்ட் பக்கமும் தலைகாட்டுவது இல்லை' என, இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. ஒரு ஆண்டுக்கு முன், 'எங்கள் எம்.பி.,யைக் காணவில்லை' என, மதுரா தொகுதி மக்கள், ஹேமமாலினியின் புகைப்படம் அச்சிட்ட, 'போஸ்டர்களை' ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது, உ.பி., மாநில ஆன்மிக சுற்றுலா துாதர் என்ற பதவியை வழங்கியுள்ளது, மாநில அரசு. மாநிலத்தில் உள்ள முக்கியமான ஆன்மிக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதே, அவருக்கு வேலை.இதைக் கேள்விப்பட்ட மதுரா மக்கள், 'எங்கள் தொகுதியில் ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ளன. அதை பிரபலப்படுத்துவதற்காவது, ஹேமாலினி, இனி, இங்கு வர வாய்ப்புள்ளது. கடவுளையாவது பார்த்து விடலாம் போலிருக்கிறது. எங்கள் எம்.பி.,யைத் தான் பார்க்க
முடியவில்லை' என்கின்றனர்.