ஆரம்பிச்சிட்டாங்களா... | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

கண்ணீர் வடிக்கும் சவுகான்!

பதிவு செய்த நாள் : ஜன 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கண்ணீர் வடிக்கும் சவுகான்!

'தொடர்ந்து, மூன்று சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று என்ன பிரயோஜனம்... ஒரு தேர்தலில் தோற்றதற்கு, இப்படி பழி வாங்குகின்றனரே...' என, புலம்புகிறார், மத்திய பிரதேச மாநில, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சிவ்ராஜ் சிங் சவுகான்.கடந்த, 2005 லிருந்து, 14 ஆண்டுகளாக, மத்திய பிரதேசத்தின் முதல்வர் நாற்காலியில் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தவர், சவுகான். அப்போது, மாநிலத்தின் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தார்.இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை பார்த்து, கடந்த லோக்சபா தேர்தலின் போது, 'பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, சவுகானை அறிவிக்க வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், குரல் கொடுத்த வரலாறும் உண்டு.இப்படிப்பட்ட சவுகான் தான், இப்போது புலம்புகிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால், அவரது அரசியல் செல்வாக்கும், வீழ்ச்சி அடைந்து விட்டது.'மத்திய பிரதேச மாநில, பா.ஜ., தலைவராக செயல்படுகிறேன்' என, கட்சி மேலிடத்துக்கு, சமீபத்தில் துாது அனுப்பினார், சவுகான். ஆனால், 'அதற்கெல்லாம், ஆள் இருக்கிறது. லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், டில்லிக்கு வந்து விடுங்கள். உங்களை கட்சியின் துணை தலைவராக நியமித்துள்ளோம்' என, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.நொந்து போன சவுகான், 'மாநிலத்திலேயே இருந்தால், தனிக்காட்டு ராஜாவாக இருக்கலாம். டில்லிக்கு சென்றால், கூட்டத்தோடு கூட்டமாக, காணாமல் போய் விடுவோமே...' என, கண்ணீர் வடிக்கிறார்.


'வச்ச குறி தப்பாது!'

'எப்போது, என்ன முடிவு எடுப்பார் என தெரியாது; ஆனால், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார். அப்போது அரசியல் களமே அதிரும்' என, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி, பொடி வைத்து பேசுகின்றனர், மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர்கள்.
இந்த மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தற்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும், பெரும் தலைவலியாக இருப்பது, மம்தா தான்.தினமும், மத்திய அரசுக்கு எதிராக, கண்டனம், போராட்டம் என, நெருக்கடி கொடுத்து வருகிறார், மம்தா. விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக, பிரமாண்ட கூட்டணி அமைக்கவும் முயற்சித்து வருகிறார்.
இவரை கட்டுப்படுத்த முடியாமல், பா.ஜ., தலைவர்கள் திணறி வந்தனர். இந்த பரபரப்பான சூழலில் தான், சமீபத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஒடிசா மாநிலத்துக்கு சென்றார், பிரதமர் மோடி. பயணத்தை முடித்து, டில்லி திரும்பும் வழியில், பிரதமரின் விமானம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள, கலைக்குன்டா விமான தளத்தில், சிறிது நேரம் நின்றது.
அப்போது, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர்களை அழைத்த பிரதமர், உள்ளூர் அரசியல், அதில் உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். பின், 'கவலை வேண்டாம். எல்லா பிரச்னையும் சரியாகி விடும்' என, அவர்களை தைரியப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வுக்கு பின், மேற்கு வங்க மாநில, பா.ஜ., வினரிடையே உற்சாகம் கரை புரண்டோடுகிறது. 'பிரதமர், மேற்கு வங்கத்துக்கு குறி வைத்து விட்டார்... அவர் வைத்த குறி, எப்போதும் தப்பியது இல்லை' என, மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X