''அரசு பணியில இருக்கறவருக்கு, கட்சி பதவி குடுத்திருக்கா ஓய்...'' என்றபடியே வந்தார், குப்பண்ணா.
''எந்தக் கட்சியில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவை தெற்கு மாவட்ட, தி.மு.க.,வுல, வரவா, போறவாளுக்கு எல்லாம் கட்சி பதவிகளை வாரி வழங்கறா... கட்சிக்காக கஷ்டப்பட்டு உழைச்சவாளை கண்டுக்கவே மாட்டேங்கறா ஓய்...
''சமீபத்துல, கட்சியின் நெசவாளர் அணிக்கு மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமனம் பண்ணியிருக்கா... இதுல, குள்ளக்காபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலரா, அரசு பணியில இருக்கறவருக்கு, தெற்கு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பொறுப்பு குடுத்திருக்கா ஓய்...
''இதனால, 'இந்த மாதிரி அநியாயம் எல்லாம் வேற எங்கயும் நடக்காது... எங்க கட்சியில தான் நடக்கறது'ன்னு, பதவி கிடைக்காதவா புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முப்பெரும் விழாவுல, அமைச்சரு பொங்கிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''இதுவும், தி.மு.க., தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஆமாம்... தி.மு.க.,வுல, தமிழகம் முழுக்க இருக்கிற நான்கு மண்டலங்கள்ல ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில், கட்சி பணியில் சிறப்பாக செயல்படும், 15 பேருக்கு நற்சான்றும், பணமுடிப்பும் குடுக்கிறாங்க பா...
''இதுல, ஏற்கனவே சிறந்த நிர்வாகின்னு, நற்சான்றும், பண முடிப்பும் வாங்கிட்ட விழுப்புரம் மாவட்ட நகர நிர்வாகி ஒருவருக்கு, அறிவாலயத்துல பணியாற்றும் நிர்வாகி ஒருத்தர் சிபாரிசுல, வேலுார்ல நடந்த முப்பெரும் விழாவுல மறுபடியும் பண முடிப்பு குடுத்துட்டாங்க...
''இதை, அந்த மாவட்ட அமைச்சர் பொன்முடி கண்டுபிடிச்சு, விழா மேடையிலயே அறிவாலய நிர்வாகியை காய்ச்சி எடுத்துட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஏமாற்றத்தில் இருக்காவ வே...'' என்றபடியே, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக மின் வாரியத்தில், மின் திட்டங்கள், மின் கொள்முதல் உட்பட பல பிரிவுகள் இருக்குல்லா... இவை, தலா ஒரு தலைமை பொறியாளரின் கட்டுப்பாட்டுல செயல்படுது வே...
''இவங்க ஓய்வு பெறும்போது, மேற்பார்வை பொறியாளராக இருப்பவர்கள்ல, 'சீனியாரிட்டி' பார்த்து, தலைமை பொறியாளர் பதவி உயர்வு தருவாவ... இப்ப, ஒன்பது பிரிவுகள்ல, தலைமை பொறியாளர் பதவி காலியா இருக்கு வே...
''இதுக்கு, சீனியாரிட்டி பட்டியல் தயாரிச்சும், இன்னும் யாரையும் நியமிக்கலை... இதனால், பதவி உயர்வை எதிர்பார்த்துட்டு இருந்த மேற்பார்வை பொறியாளர்கள் ஏமாற்றத்தில் இருக்காவ வே...
''பொதுவா, ஓராண்டு சர்வீஸ் மீதம் இருந்தா தான், தலைமை பொறியாளர் பதவி உயர்வு கிடைக்கும்... அதை விட குறைந்த காலம் இருந்தால், கூடுதல் தலைமை பொறியாளரா தான் பதவி உயர்வு தருவாவ வே...
''இப்ப, இந்த விதியை திருத்தி, 'ஓராண்டுக்கு குறைவா சர்வீஸ் இருந்தாலும், தலைமை பொறியாளரா பதவி உயர்வு வழங்கப்படும்'னு உத்தரவு போட்டிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.