'மாஜி' அமைச்சர்களுக்கு பழனிசாமி வாய்ப்பூட்டு!
''பணம் கட்டினா, 'யெஸ்' இல்லன்னா, 'நோ' தெரியுமா ஓய்...'' என கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''ஒண்ணும் புரியலை வே...'' என்றார், அண்ணாச்சி.
''நாமக்கல் மாவட்டத்துல, 180 டாஸ்மாக் மது கடைகள் இருக்கு... இதுல, 150க்கும் அதிகமான கடைகள்ல அரசு அனுமதியோட பார் நடந்துது ஓய்...
''சில பார்கள்ல வியாபாரம், 'டல்' அடிச்சதால, ஆளுங்கட்சிக்காராளுக்கு கப்பம் கட்ட முடியாம, ஏலம் எடுத்தவா திணறிண்டு இருந்தா... இதனால அதிகாரிகள் துணையோட, பார்களை ஆளுங்கட்சிக்காரா ரெண்டு வகையா
பிரிச்சுட்டா ஓய்...
''அதாவது, அரசுக்கு பணம் கட்டி அனுமதியோட நடத்தற பார்களுக்கு, யெஸ் பார்னு பேரு... அரசு அனுமதி இல்லாம, ஆளுங்கட்சிக்காராளை மட்டும், 'கவனிச்சு' நடத்தற பார்களுக்கு நோ பார்னு பேரு... மாவட்டத்துல, 50க்கும் அதிகமான
நோ பார்கள் செயல்படறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''காங்கிரசார் ஒட்டிய போஸ்டரால, தி.மு.க., கூட்டணிக்குள்ள சலசலப்பாயிட்டுல்லா...'' என, அடுத்த தகவலுக்கு தாவிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சென்னை, சூளை பகுதி காங்கிரசாருக்கு, அந்த ஏரியா மின் வாரிய அதிகாரிகளோட ஏதோ தகராறு போலிருக்கு... உடனே, மின்வாரிய உதவி பொறியாளரை கண்டிச்சு, ஒரு போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாவ வே...
''அதுல, 'வன்மையாக கண்டிக்கிறோம்... மக்களின் முதல்வர் நல்லாட்சியில, அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் மின்வாரிய அதிகாரி மற்றும் உதவியாளர்கள் மீது மின்சார வாரியமே தக்க நடவடிக்கை எடு'ன்னு கொந்தளிச்சு
இருந்தாவ வே...
''இது தான், தி.மு.க.,வினரை, 'அப்செட்' ஆக்கிட்டு... 'அதிகாரி மேல புகார் சொல்லணும்னா, எங்ககிட்ட நேரடியா சொல்ல வேண்டியது தானே... மேலிடத்துல சொல்லி, பிரச்னையை பக்குவமா தீர்த்திருப்போம்...
''அதை விட்டு போஸ்டர் ஒட்டி மானத்தை வாங்கணுமா'ன்னு தி.மு.க., நிர்வாகிகள் பல்லை கடிச்சிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மாஜிக்கள் பலருக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., பொதுக்குழுவுல, தான் ஒப்புதல் அளிச்ச தீர்மானங்கள் தவிர வேற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாதுன்னு பன்னீர் செல்வம் கோர்ட்டுக்கு போனாரே...
''அப்ப, பழனிசாமி தரப்புல, கோர்ட் விவகாரங்களை கவனிக்கிற பொறுப்பை, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான வக்கீல்கள் குழு தான் கவனிச்சதுங்க...
''பரபரப்பான வாதங்களுக்கு பின், பன்னீர்செல்வம் கோரிக்கையை கோர்ட் ஏத்துக்கிட்டதுல பழனிசாமி, 'அப்செட்' ஆகிட்டாராம்... 'பொதுச் செயலரா முடிசூடலாம்னு பார்த்தா, இப்படி சொதப்பிட்டீங்களே'ன்னு சண்முகம் டீமை கூப்பிட்டு சத்தம் போட்டிருக்காருங்க...
''இது போதாதுன்னு, ஊருக்கு ஊர், சில முன்னாள் அமைச்சர்கள் குடுத்துட்டு இருந்த பேட்டிகளும்
சர்ச்சையாகிடுச்சு...
''அதனால, 'நான் சொல்ற நபர்கள் தவிர, மத்தவங்க கொஞ்ச நாளைக்கு, 'மீடியா'க்கள் முன்னாடி வாய் திறக்காம இருங்க'ன்னு பழனிசாமி கறார் உத்தரவு போட்டிருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் எழுந்தனர்.