'டவுட்' தனபாலு | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

'டவுட்' தனபாலு

பதிவு செய்த நாள் : மார் 31, 2020
Advertisement
'டவுட்' தனபாலு

காங்., முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரம்: அவசரமாக தேவைப்பட்டால், பணத்தை அச்சடிக்கும் உரிமை, மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; மாநில அரசுகளுக்கு கிடையாது. இது, அவசர, போர்க்கால சூழ்நிலை. எனவே, மாநில அரசுகளுக்கு, அவசரமாக தேவைப்படும் பணத்தை, மத்திய அரசு தாராளமாக தர வேண்டும். 'டவுட்' தனபாலு: இதைத் தான் கிராமங்களில், 'குறுக்குசால் ஓட்டுவது' என்பர். கொரோனா தாக்கத்திற்கு பின், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. அவற்றின் பணிகளை சீர்குலைக்கும் வகையில், இப்படியா, தவறான அறிவுரை வழங்குவது? பணத்தை அச்சிட்டால், ஜிம்பாப்வே நாட்டில் ஏற்பட்ட பயங்கர பணவீக்க நிலையல்லவா இங்கு ஏற்பட்டு விடும். இது கூட, உங்களுக்கு தெரியாமல் போயிற்றா என்ற, 'டவுட்' எழுகிறது!த.மா.கா., தலைவர், வாசன்: திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்ய வேண்டிய துணி, 'ஆர்டர்'களை, வெளிநாட்டினர் ரத்து செய்துள்ளனர். 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு முடிந்தவுடன், திருப்பூரில் இருந்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்ய, இப்போதே, வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு, உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'டவுட்' தனபாலு: தினமும் அறிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற, செய்ய முடியாத செயல்களைச் செய்ய, தமிழக அரசை துாண்டக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், கொரோனாவில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், தமிழக அரசு பேசினால், அந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா என்ற, 'டவுட்' உங்களுக்கு வர வேண்டாமா?தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: பல்வேறு கஷ்டங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் பாதிப்பு வித்தியாசமானது; கடுமையானது. அவர்கள் சந்திக்கிற இழப்பு குறித்து, ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சந்திக்கும், கடுமையான பாதிப்புகளுக்கு தீர்வு காண, எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.'டவுட்' தனபாலு: இப்படி பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சி என்பதற்காக, வாய்க்கு வந்தபடி பேசாமல் இருப்பது தான் நல்லது. மேலும், இந்த விவகாரத்தில் நீங்கள், 'அப்டேட்' ஆக இல்லையோ என்ற, 'டவுட்' எழுகிறது. ஏனெனில், விவசாய பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள, தமிழக அரசு தான் அனுமதித்துள்ளதே!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X