அதிக பராமரிப்பு செலவின்றி, பழ பயிர்கள் மூலம் ஆண்டுக்கு 33 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வரும், விவசாயி ஞானசேகரன்:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகே திருச்செம்பொன்பள்ளி கிராமம் தான் என்னோட சொந்த ஊர். பழம் தரும் மரங்கள் வளர்ப்பில் எனக்கு எப்பவுமே ஈடுபாடு அதிகம்.
விவசாயிகளுக்கு எளிதாக வருமானம் கிடைப்தோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யுது. இதோட அவசியத்தை உணர்ந்ததால் தான், நம் முன்னோர்கள் மாந்தோப்பு, கொய்யாத் தோப்பு, நெல்லித்தோப்பு என, விதவிதமான பழத்தோட்டங்களை உருவாக்கினர்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சுட்டு விவசாயத்தில் இறங்கிட்டேன். எங்க தோட்டத்தோட மொத்த பரப்பு 22 ஏக்கர்.
இங்கு 520 மாமரங்கள், 150க்கும் அதிகமான வாழை, 20 தென்னை, 20 கொய்யா, 10 பலா, 10 எலுமிச்சை, 10 பப்பாளி மரங்கள் இருக்கின்றன.
இது தவிர நெல்லி, சாத்துக்குடி, நார்த்தை, சீத்தா, கறிப்பலா, புளிச்சங்காய் உள்ளிட்ட மரங்களும் நிறைய இருக்கின்றன.
இப்ப எனக்கு, 76 வயதாகிறது. இங்குள்ள மா மரங்களில் பெரும்பாலானவை, 100 ஆண்டுகளைக் கடந்த மரங்கள். இவ்வளவு ஆண்டுகளாகியும் கூட அமோகமாக விளைச்சல் கொடுத்துட்டு இருக்கு.
காடுகள், மலைகள், ஆற்றுப் படுகைகளில் உள்ள மரங்களுக்கு, யாரும் எந்த உரமும் போடுறதில்லை. ஆனாலும் அவை செழிப்பாக விளைகின்றன.
அந்த மாதிரி, எங்க தோட்டத்தில் உள்ள மரங்களும் இயல்பாகவே விளையணும்கிற நோக்கத்தோடு, எந்த விதமான இயற்கை இடுபொருட்களோ, செயற்கை உரங்களோ போடுறதில்லை.
மண் வளமாக இருந்தால், தானாகவே செழிப்பாக விளைஞ்சு, நல்ல மகசூல் கொடுக்கும் என்பது எங்களோட நேரடி அனுபவம்.
என் தாத்தா, மழைநீரை வைத்து பாசனம் செய்வதற்காக, ஒரு குளத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த குளம் இப்போதும் உள்ளது. எங்கள் தோட்டத்து மண் இயல்பாகவே வளமானது. நிறைய இலைதழைகள் உதிர்ந்து, உரமாகி நிலம் மேலும் வளமாகி உள்ளது.
இந்த 22 ஏக்கரில் உள்ள தென்னை, தேக்கு, பாக்கு, பலா, கொய்யா, வாழை, சாத்துக்குடி உள்ளிட்ட மரங்கள், காய்கறிச் செடி, கொடிகள் மூலம் ஆண்டுக்கு, 44 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதில் காவல் செலவு, உழவு, கோடை காலத்தில் நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட செலவுகள், 11 லட்சம் ரூபாய் போக, மீதி, 33 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.
தொடர்புக்கு:
94437 78444.