'எங்க அம்மா இரும்பு மனுஷி!' | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

'எங்க அம்மா இரும்பு மனுஷி!'

பதிவு செய்த நாள் : மே 30, 2020
Advertisement
'எங்க அம்மா  இரும்பு மனுஷி!'

நடிகர் தனுஷின் சகோதரி, டாக்டர் கார்த்திகா: என் குழந்தைகளைத் துாக்கிக் கொஞ்சி, முத்தம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகின்றன. கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவம் பார்ப்பதில் இருக்கும் சிரமத்தை விட, மனதளவில் தான் நாங்கள் அதிகம் துவண்டு போகிறோம்.ஒவ்வொரு நாளும் பணிமுடிந்து வீடு திரும்பும்போது, ஒருவிதமான பதற்றத்தையே எதிர்கொள்கிறது மனது.
மருத்துவராக நாங்கள் பாதுகாப்பாக இருந்தால் தான், எங்களிடமிருந்து எங்களைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கோ, அவர்களிடமிருந்து எங்களுக்கோ, நோய் பரவாமல் தடுக்க முடியும்.இப்போதைய சூழ்நிலையில், முடிந்தளவுக்கு, 'பாசிட்டிவ்'வான விஷயங்களையே செய்கிறேன். திரைப்படங்கள் முதல், புத்தகங்கள் வரை, அனைத்திலும் நம்பிக்கை சுமக்கும் கருவையே தேர்ந்தெடுக்கிறேன். முன்பு நான், அதிகம் சமைக்க மாட்டேன். இப்போது வேறு வழியில்லாததால் என் குழந்தைகளுக்குச் சமைத்துக் கொடுக்கிறேன். குழந்தைகளைத் தொடாமல், நீண்ட இடைவெளிவிட்டு அவர்களோடு விளையாடுகிறேன். எளிய உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்கிறேன்.
ஒவ்வொரு முறையும் பிரசவம் பார்ப்பதற்கு முன், தாய் வயிற்றின் மீது கைவைத்து பிரார்த்தனை செய்த பிறகு தான், என் வேலையைத் துவங்குவேன். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதில், அதிக நம்பிக்கை எனக்கு உண்டு.அதனால் தான், வீட்டில் நடமாடும் தெய்வங்களான குழந்தைகளிடம், மற்றவர் களுக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்வேன். தன்னலமற்ற பிரார்த்தனை என்பது, குழந்தைகளால் மட்டுமே சாத்தியம். இந்த பாசிட்டிவ் எனர்ஜி, நிச்சயம் மாற்றங்களைக் கொண்டு வரும்
என்பதை நம்புகிறேன்.பத்து வயது மகள், இரண்டரை வயது மகன், இருவருக்குமே, நானும், என் கணவரும், நெருங்கிய நண்பர்கள். அடம் பிடித்தாலோ, அழுதாலோ எல்லாம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தை உடைத்து, 'இல்லை என்றால் இல்லை தான்' என்ற விஷயத்தை, அவர்களுக்கு மிகவும் அழுத்தமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். சிறிய குக்கிராமத்திலிருந்து வந்தவர் தான் என் அம்மா. வீட்டிலிருந்தாலும், வேலைக்குப் போனாலும் அர்த்தமுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதை, அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், போராடுவதை இன்று வரை நிறுத்தவில்லை அவர்.நாங்கள் நால்வரும் வளர்ந்த பிறகு, எங்களிடமிருந்து அவர் கேட்பது, எங்களுடைய நேரத்தை மட்டும் தான்.நான் மருத்துவரானது, அண்ணா செல்வராகவன் இயக்குனரானது, தம்பி வெற்றி பெற்ற நடிகரானது என, அனைத்துக்குமே பின்னணியிலுள்ள பலம், அம்மாவின் வைராக்கியம் தான்.
எத்தனையோ பேர் ஏளனமாகப் பேசியபோதும், வைராக்கியத்தோடு எங்களைத் தட்டிக் கொடுப்பவர். அவர் ஒரு, இரும்பு மனுஷி!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X