ஐ.டி., நிறுவன சி.இ.ஓ., தொழில்நுட்ப வல்லுனர், கிரியேட்டிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர் என, பல்முகம் கொண்டவர்!
சாப்ட்வேர் துறை அவ்வளவாக தமிழகத்திற்கு அறிமுகமில்லாத காலத்தில், அத்துறையில் தொழில் வாய்ப்புகளைத் தேடி களம் இறங்கியவர், 'காம்கேர்' நிறுவனத்தின் தலைவர் புவனேஸ்வரி. 23 ஆண்டுகால கடும் உழைப்பில், படிப்படியான வளர்ச்சியில், 'காம்கேர்' எனும் அவரின் நிறுவனத்தின் பெயரே அவரின் அடையாளமாகி போனது. இந்த வெற்றிக்கு பின், நிறைய விலை கொடுக்க நேர்ந்திருக்கும்; சவால்களை சந்திக்க வேண்டியிருந்திருக்கும்
அவர் கடந்து வந்த பாதையை, மகிழ்வுடன் திரும்பி பார்க்கிறார், 'காம்கேர்' புவனேஸ்வரி.
1 'காம்கேர்' என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்; அடிப்படை பணித் தன்மை என்ன?
'கம்ப்யூட்டர் கேர்' என்பதன் சுருக்கமே, 'காம்கேர்'. ஆங்கிலம் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் யுகத்தில், முதன்முதலில் தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து புராஜெக்ட்டுகளை தயார் செய்த பெருமை, காம்கேருக்கு உண்டு.
2 பிசினஸ் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எப்படி?
என் கற்பனைத் திறனும், படைப்பாற்றலுமே என்னை பிசினஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது என்று சொன்னால், அது ஆச்சரியமான விஷயம் தான். நல்ல தாய் - தந்தை என்பதையும் மீறி, நல்லத் தோழமையோடு பழகியதால், சிறிய வயதில் இருந்தே எனக்கு என் பெற்றோரைத் தவிர, என் வயதை ஒத்த நண்பர்கள் குறைவு. அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் மற்றும் வெளி உலகில் என்னை பாதிக்கும் விவரங்களை, காகிதத்தில் எழுத ஆரம்பித்தேன்.
பள்ளிப் பாடப் புத்தகங்களை படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி.வி.ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றோரின் கண்டுபிடிப்புகளும், ஆபிரகாம் லிங்கன், நேரு, இந்திரா போன்றோரின் சாதனைகளும், எனக்குள் இருந்த சாதனைத் தீ-க்கு, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல அமைந்தது. இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும், என் பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன். மேலும், என் அம்மாவின் படிக்கும் ஆர்வம், எங்களையும் தொற்றிக் கொள்ள, நிறைய படிக்க ஆரம்பித்தேன். அம்மா, படித்ததில் பிடித்தவற்றை, கத்தரித்து சேகரித்து வைத்ததை, பள்ளி விடுமுறை நாட்களில் நாங்களே, 'பைண்டிங்' செய்வது தான் எங்கள் முழுநேர வேலை. நாங்கள் படித்ததை,
நாங்களே பைண்டிங் செய்ததைப் பார்க்கும் போது, எங்களுக்குள் இருந்த படைப்பாற்றல் இன்னும் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
நான், 12 வயதில் எழுதிய, 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற கதை, 'கோகுலம்' இதழில் வெளியானது. அதன்பின், நிறைய எழுத ஆரம்பித்தேன். முன்னணி பத்திரிகைகளில் என் படைப்புகள் வெளிவந்ததோடு, விருதுகளையும் பெற்றுத் தந்தது.
நான், 1992-ம் ஆண்டு, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த பின்னர், 'அடுத்து என்ன செய்யலாம்?' என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், 'நாமே ஏன் சாப்ட்வேர் நிறுவனம் துவங்கக் கூடாது?' என்று, என் பெற்றோரின் முழு ஆதரவோடு, 1992ல், 'காம்கேர் சாப்ட்வேர்' என்ற பெயரில் என் நிறுவனம் பிறந்தது. என் தம்பி, தங்கையும் சாப்ட்வேர் துறையையே
பாடமாக எடுத்துப் படித்திருந்ததால், என் நிறுவன வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
3 பிசினஸ் என்பது ஆண் உலகம்;
அதுவும் சாப்ட்வேர் துறை பிசினஸ் என்பது ஆணுக்கானது... உங்களுக்கான சவால்கள் எப்படி இருந்தன?
உண்மை தான்; சாப்ட்வேர் துறை என்றல்ல, எல்லாத் துறைகளுமே ஆண்கள் வசம் இருந்த, 1992-களில் தான், நான் என் நிறுவனத்தை துவங்கினேன். என் பெற்றோர், தொலைபேசித் துறையில், 40 ஆண்டு காலம் கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அன்றே, 24 மணி நேர வேலை சுழற்சியில், இரவு - பகல் பாராமல் வேலைக்குச் சென்று, மிகவும் சின்சியராகப்
பணியாற்றியவர்கள். இவர்களின் வாழ்க்கை தான் எனக்கு முன் உதாரணம். அதனால் தான், என்னாலும் இரவு - பகல் பாராமல் என் நிறுவனத்துக்காக உழைக்க முடிந்தது.
என் பெயரை, 'காம்கேர் புவனேஸ்வரி' என்று மாற்றியமைத்தேன்; என்னையே நிறுவனமாக்கி உழைக்கத் துவங்கினேன். இன்று என்
படைப்புகள் அனைத்தும் என் பெயரிலும், என் நிறுவனம் பெயரிலும் தான் வருகின்றன.
என் கனவு பலித்தது; என் பெயரே என் நிறுவனத்துக்கு விளம்பரம் ஆனது. என் பெயர் ஒரு, 'பிராண்ட்' ஆக உருவெடுத்துள்ளது.
4 எத்தனையோ சாப்ட்வேர் நிறுவனங்கள் இருக்கின்றன; அவற்றில் இருந்து உங்கள் நிறுவனம் எப்படி வேறுபடுகிறது?
என் நிறுவனத்தின் சிறப்பம்சமே இந்தியன் தயாரிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகும்.
5 சாப்ட்வேர் துறை மாற்றங்கள் நிறைந்தது... எப்படி 'அப்டேட்' செய்ய முடிந்தது; முடிகிறது?
நொடிக்கொரு மாற்றம் நிகழ்ந்து வரும் சாப்ட்வேர் துறையில், அன்றாடம், 'அப்டேட்' செய்து கொண்டே வர வேண்டும்; இல்லையெனில், பின்தங்கி விடுவோம். மேலும், என் நிறுவனத்தில் சாப்ட்வேர், மல்டி மீடியா, குறும்படம் என்று ஒவ்வொரு பிரிவையும் உருவாக்கிய போது, அது சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விவரங்களையும் தெரிந்து கொண்ட பின் தான், அதில் நான் கால் பதிக்க ஆரம்பித்தேன்.
ஏதாவது புதிது புதிதாக செய்ய வேண்டும் என்ற என் கற்பனையும், கனவும், மாற்றங்கள் நிறைந்த இத்துறையில் உள்ள தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உதவி வருவதால், அப்டேட் செய்வது கடினமாக இல்லை.
தூக்கத்தை நிறைய தியாகம் செய்ய வேண்டிஇருக்கிறது. எல்லாரும் உறங்கும் நேரத்தில் நான் வேலை செய்வதால், பலரின் கண்களை திறக்கும் கல்விக்காக என்னால் நிறைய எழுத முடிகிறது. இதுவரை, 75-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப புத்தகங்களை தமிழில் எழுதி உள்ளேன்.
6 சவால்கள், வெற்றி - தோல்விகள், போட்டிகள்...
என் நிறுவனத்தில் பணிபுரிவோரின் குடும்பத்தை, என் குடும்பமாக பாவிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரையும் அன்போடும், தேவைப்படும் போது கண்டிப்போடும் நடத்திச் செல்கிறேன். கயிற்றின் மேல் நடக்கும் சிறுமியின் கவனம் முழுவதும் கயிற்றின் மீதும், பாதையின் மீதும் தான் இருக்க வேண்டும். அதை விட்டு, அந்த சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை ஒரு செகண்ட் பார்த்து விட்டாலோ அல்லது அவர்களது கை தட்டலுக்கு ஒரு நிமிடம் காது கொடுத்து கேட்டு பூரிப்படைந்து விட்டாலோ என்ன ஆகும் அவள் கதி? அது போல தான், நான் என் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். போட்டி போட நான்
என்றுமே விரும்பியதில்லை. என்னுடன் ஓடுவோரைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை; நான் எந்த
அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இது தான் என் வெற்றியின் ரகசியம்.
7 இளம் தலைமுறையினருக்கு சொல்ல விரும்பும் கருத்து?
பெண்கள் தங்கள் புற அழகால் கவரப்படுவதைவிட, தங்கள் திறமையால் மதிக்கப்பட வேண்டும். அழகுடன் திறமையும் இணைந்த பெண்கள் தான் வெகுஜன ஊடகங்களில் வெற்றி பெறுகின்றனர் என்பதை இளம் தலைமுறைப் பெண்கள் உணர வேண்டும்; நான் அப்படித்தான் வாழ்ந்து வருகிறேன்!
- ஆர். வைத்தீஸ்வரி