மிக அவசரம் என்ற நிலையில், தலைகவசம் அணியாமல் வண்டி ஓட்டிச் சென்ற தன்னை, போலீஸ்காரர் நிறுத்தி, காலவிரயம் ஏற்படுத்தி விட்டார் எனப் புலம்பிய என் நண்பரிடம், 'தலைகவசம் என்பது உயிர் கவசம்; அது போடவில்லை என்பது குற்றம். அதற்கான தண்டனையாக எதையும் ஏற்று தான் ஆக வேண்டும்' என்று, 'மொக்கை' போட்டேன். பிறகு தான் புரிந்தது, 'மொக்கை' போட்டதும் அல்லாமல், நான் அதை பின்பற்றுவதும் இல்லை என்று!
சட்டங்கள், நமக்காக வகுத்து வைத்திருக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளவே விரும்பாத, சமூகத்திடம், அது தொடர்பான அறிவுரைகளை நாம் வழங்குவது மிகக் கொடுமையான விஷயம். சட்ட அறியாமையை சட்டம் ஏற்காது என்ற சட்டத்தையே மதிக்க முனையாத மக்களிடம், அதை அறிவுறுத்துவது எப்படி நடக்கும்?
அந்த சட்டங்களை வகுக்கும் இடத்திலும், பின்பற்றியே ஆக வேண்டிய இடத்திலும், அதை மீறுபவர்களை தண்டிக்கும் இடத்திலும்
இருப்பவர்கள், முதலில் அதை பின்பற்ற வேண்டும். நம் சமூகத்தின் சாபக்கேடு, எவன் ஒருவன் சமூகத்தை வழி நடத்த வேண்டுமோ அவன் சரியான முறையில் வழி நடத்துவதில்லை. தலைகவசம் போடாமல் வண்டி ஓட்டக்கூடாது என்று சட்டம் போட்ட, அந்த சட்டம் தெரிந்த காவல்துறையினரே அதை பின்பற்றுவதில்லை என்பது தான் வேதனை. முதலில் பிறர் எவ்வாறு நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வாறே நீங்களும் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், சிலருக்கு வார்த்தைகளால் பதில்
சொல்லலாம்; பலருக்கு வாழ்க்கையால் தான் பதில் சொல்ல வேண்டும். வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட, வாழ்க்கையால் சொல்லும்
பதில்களே மிக வலிமையானதாக இருக்கும். காரணம், நீங்கள் சொல்வதைக் கேட்பவர்கள், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க மாட்டார்கள். அடுத்தவருக்கு அறிவுரை கூறும்போது மட்டும் ஞானியாகி விடாமல், பேசுவதற்கு முன் நாம் அதையெல்லாம் பின்பற்றுகிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எவன் ஒருவன் குற்றமற்றவனோ அவன் மீது மட்டுமே கல் எறியுங்கள்
இது ஒரு பிரிவினருக்கு மட்டும் சொன்ன வார்த்தைகள் இல்லை. எப்போதுமே பிறர் குறை கண்டு குற்றம் சொல்பவனுக்காக கூறப்பட்டது. நாம் வரையறுக்கப்பட்ட கொள்கை ஒன்றை பின்பற்றி வருகிறோம். 'இந்த காரியத்தை உடனடியாக, இப்படி மாற்றி செய்தால் தான் ஜெயிக்க முடியும்; ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்' என்ற அனுபவ அறிவுரையாகவும், 'இந்த காரியத்தை நான் மட்டும் மாற்றி இப்படி செய்திருந்தால் இந்நேரம் ஜெயித்திருப்பேன் தெரியுமா! என் முட்டாள் தனத்தால் தவற விட்டுவிட்டேன்' என்ற கேள்வி அறிவுரையாகவும் பின்பற்றுகிறோம். காலம், மாற்றத்தை உணர்ந்த அறிவுரை பிறருக்கு நாம் சொல்லும் அறிவுரையிலும் இரண்டு வகை உள்ளது. காலம், மாற்றத்தை உணர்ந்த அறிவுரை. இது, நாம் யாருக்கு அறிவுரை சொல்கிறோமோ, அவர் இடத்தில் இருந்தும் யோசித்து சொல்லப்படுகிற அறிவுரை. இது சரியா, சாத்தியப்படுமா, சொல்வது எப்படி எளிதோ, அதுபோல் செயலும் எளிதா, நாம் இதை பின்பற்றுகிறோமா என, பலவற்றையும் யோசித்து பிறகு சொல்லும் அறிவுரை. மற்றொன்று, காலம் மாறியதையோ, சந்ததிகள் மாறியதையோ கவனத்தில் எடுத்துக் கொள்ளாத அறிவுரை. நம்மாலேயே பின்பற்ற இயலாத
அறிவுரை. மிகச் சிறந்த பேச்சாளர் ஒருவரை, 'ஏன் இப்படி, 'லொட லொட'ன்னு பேசிக்கிட்டேயிருக்கீங்க?'ன்னு கேட்பது மாதிரியான அறிவுரை தான் இது. ஏனெனில் கால மாற்றத்தை உணராமல், நின்ற இடத்திலேயே நின்றபடி, நம் சந்ததிகளுக்கு கொடுக்கும் அறிவுரை, தேங்கிய காட்சியாக ஒரு அசைவும் இல்லாமல் இருக்கும். அதே சமயம் கால மாற்றத்தை கவனத்தில் கொண்டு நடந்து கொண்டேயிருக்கும் அசையும் சம்பவங்களின் அடிப்படையில் நாம் சொல்லும் அறிவுரை, கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். மொத்தத்தில் அறிவுரை என்பதே, நம் அச்சத்தை, 'ஐய்யோ... அப்படி பண்ணாதே. இப்படி ஆகிவிடும்' என அறிவுரையாக மாற்றி, பிறர் மீது திணிக்கிறோம் என்றே எல்லாரும் நினைக்கின்றனர். ஒரு நல்ல வியாபாரி தன் மகனிடம், 'இந்த வியாபாரத்தை, இப்படி செய்; அப்படி செய்தால் நஷ்டம் வந்துவிடும்' என்று சொல்லும் போது, கண்டிப்பாய் அது எடுபடாது. அவர், ஒரு இடத்தில் நின்றபடி, கால மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல், தேங்கிய காட்சியை பார்த்து கூறுவதாய் ஆகி விடும். நடந்தபடியே, கால மாற்றத்தை ஏற்றுக் கொண்ட அவரின் மகன், இதை பயனற்ற அறிவுரையாக தான் பார்ப்பான். போலி முகங்கள்
'காலம் மாறிவிட்டது. இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள், 100 ரூபாய் லாபமாக சம்பாதிப்பதை, நான் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே, இரண்டு பொத்தான்களை தட்டி, 1,000 ரூபாயாக சம்பாதித்து விடுவேன்' எனக் கூறும் போது தான், நம் அறிவுரை இங்கு எடுபடாதது தெரியும்.
'நான் அப்படியாக்கும்; இப்படியாக்கும்...' என முழங்குபவர்களின் போலி முகங்களுக்கு தரும் மதிப்பை, உண்மையான அனுபவ அறிவுரை வார்த்தைகளுக்குத் தருவதில்லை.
மாறி வரும் உலகத்தில், பல சவால்களை நாம் எதிர்நோக்கி உள்ள இந்த சூழ்நிலையில், சிறந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் நாம் அக்கறை காட்ட வேண்டும். அதற்கு அறிவுரை சொல்வதனால் மட்டும் மாற்றம் வந்துவிடாது. நமக்கு நாமே அறிவுறுத்திக் கொண்டு, அதை ஏற்று நடந்து காட்டியிருக்க வேண்டும். 'முடியும், முடியாது' என்று இலக்குகளை வடிவமைப்பவர்கள் நாமே. முடியாதவற்றைச் செய்வதற்கு, திறமை மட்டும் போதாது. கொஞ்சம் தைரியமும் வேண்டும். மேலே சொன்ன கருத்துகளையெல்லாம், அறிவுரையாக நாயகியருக்கு சொல்வதற்கு முன் நானும் அதை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன்.