நாள் முழுவதும், 'டிவி' தொடர்களில் மூழ்கி, அழுது கொண்டிருக்கும் சூழ்நிலை பாவைகளாக ஒருபுறமும், குடும்ப பொறுப்புகளை சுமந்தபடி, வாழ்க்கை களத்தில் ஓடிக் கொண்டிருக்கும், வீராங்கனைகளாக மறுபுறமும், பெண்களின் இரு நிலைகளை, காண்கிறோம்.
வாழ்க்கையை விதி என்று ஏற்றும், சதி என்று சபித்தும் வாழும் பெண்களிடையே, வாழ்க்கையை தன் வசமாக்கி மகிழ்பவர்கள் சுயதொழில் முனைவோர் தான். அவர்களில் ஒருவர் தான், சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாரதி, 40.
இவரின் தையலை நம்பும் தையலாய், பலரும் வலம் வருகின்றனர். ஆம்... இவர், தையல் தொழில் மூலம், தன் குடும்ப வருமானத்தை பெருக்குவதோடு, மற்ற பெண்களுக்கும் அதை கற்றுக் கொடுத்து, அவர்களின் வருமானம் பெருகவும், வழி வகுத்து வருகிறார்.
அவர் கூறியதாவது:
எனக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. என் கணவர், பங்குச் சந்தையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென, பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, எங்கள் குடும்பத்தை மிகவும் உலுக்கியது. நானும் குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்தேன்.
பின், 10 ஆண்டுகளுக்கு முன், செய்யாறில் உள்ள ஒரு தையலகத்தில், தையல் கற்றுக் கொண்டேன். ஆர்வம், இடைவிடாத பயிற்சி, புதிய முயற்சிகள் மூலம், பெண்களுக்கான உடைகளை தைக்க துவங்கினேன். சிறிது சிறிதாக, எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் திருப்தி அடையும் வகையில், அவர்களுக்கான உடைகளை தைத்து கொடுத்தேன்.
பலர் என் வாடிக்கையாளர் ஆயினர். அவர்கள் சொல்லும் குறிப்புகளும், அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களும், என் மீதான நம்பிக்கையை எனக்கு உணர்த்தின. அவர்களின் பாராட்டுகள், அடுத்தடுத்து இயங்குவதற்கான உத்வேகத்தை கொடுத்தன.
இதனால், குடியிருப்பு பகுதியிலும், குடும்பத்திலும் நல்ல பெயரை ஏற்படுத்தியதோடு, குடும்ப வறுமையை போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்தது. எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்களின் தொடர் வற்புறுத்தலால், ஏழு ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கான தையல் பயிற்சியை துவங்கினேன்.
படிக்காதவர்களுக்கும், அவர்களுக்கு புரியும் வகையில், அளவெடுக்கும் முறைகள், துணிகளின் வகைகள், தையல் வகைகள், பெண்களின் ரசனைகள், புதிய உத்திகள் குறித்து கற்றுக்கொடுத்து வந்தேன். இதுவரை, 250க்கும் மேற்பட்ட பெண்கள் என்னிடம் தையல் கற்றுள்ளனர். அவர்களில், 70க்கும் மேலானோர் தையல் தொழிலில் ஈடுபட்டு, சம்பாதிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள், 'டிவி' சீரியல்களில் மூழ்கி விடாமல், தையல் போன்ற ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக் கொண்டால், நிச்சயம் தன்னம்பிக்கை கூடும்; தன்னையும், வீட்டையும் காப்பாற்ற முடியும். இதற்கு, பாரதி சரியான உதாரணம்.