சரியான பேருந்து வசதி கூட இல்லாத குக்கிராமத்தில், வேப்ப மரத்தடியில் படித்துக் கொண்டிருந்த, அரசு பள்ளி மாணவர்கள் இன்று, 'வெப் கேமரா' வழியாக, இங்கிலாந்து ஆசிரியரிடம் பாடம் கற்கின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா! அதை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார், சேலம் மாவட்டம், கந்தம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியை, ஸ்ரீ பார்வதி. சாதாரண ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, 'ஸ்மார்ட் பள்ளியாக' மாற்றிய பெருமை இவரையே சேரும்.
ஊரிலேயே அடையாளம் இல்லாமல் இருந்த அந்தப் பள்ளி, மாவட்டத்தின் அடையாளமாக இன்று மாறியிருக்கிறது. தங்களின் பள்ளி, அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதை கண்ட இவர், முகநுாலில் அது குறித்து பதிவிட்டார். அதை பார்த்த நண்பர்கள் சிலர், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர்.பின், பல்வேறு அமைப்புகள் மூலம், 8 லட்சம் ரூபாய் அளவில் நிதி பெற்று, தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்புடன், பள்ளியின் கட்டமைப்பை மாற்றினார். மின் விசிறி, மேசை, நாற்காலிகள், ஆங்கில அகராதிகள், ஆகியவற்றால் வகுப்பறைகளை மெருகூட்டினார்.
ஸ்மார்ட் வகுப்பறைஅடிப்படை வசதிகள் பூர்த்தியானவுடன், இன்றைய நவீன உலகில், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களோடு போட்டிப் போடும் அளவுக்கு, முன்னேற்ற வேண்டும் என்று எண்ணினார். அதன் முதல்படி, 'ஸ்மார்ட் வகுப்பறை' உருவாக்குவது. அங்குள்ள ரோட்டரி கிளப் மற்றும் ஊர் மக்கள் வழங்கிய உதவியில், 'ஸ்மார்ட் வகுப்பறை'க்கான உபகரணங்களை வாங்கினார். தன் தோழி ராஜேஸ்வரி சுப்புராஜ் மூலம் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு பள்ளிக்குக் கிடைத்தது. இப்போது, இப்பள்ளியில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட, கணினியை இயக்கும் திறன் பெற்றுள்ளனர். அதில் சிலருக்கு, 'இ - மெயில் ஐடி' கூட உள்ளது என்பது கூடுதல் தகவல்.விக்கிபீடியாவில், 700 புகைப்படங்கள், 12 ஆயிரம் தொகுப்புகள், 600 கட்டுரைகள் எழுதியிருக்கும் அவர், 2013ல், ஹாங்காங்கில், விக்கிப்பீடியா நடத்திய உலகளாவிய கருத்தரங்கில், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட இருவரில் ஒருவர். இணைய உலகில், இன்றைய மாணவர்கள் பங்களிப்பு செய்யும் விதமாக, விக்கிபீடியாவில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் கட்டுரை எழுதப் பயிற்சி அளித்தார். இவரிடம் பயிற்சி பெற்ற, 12 மாணவர்கள், தற்போது, விக்கிபீடியாவில் பயனராகி பயனடைந்து உள்ளனர்.
பள்ளி நேரம் போக, லண்டன், ஆக்ஸ்போர்டு நகர தமிழ் மாணவர்களுக்கு, 'ஸ்கில்பீடியா.நெட்' என்ற இணையதளம் வழியாக, தமிழ் கற்பிக்கும் பணியில்
ஈடுபட்டு வருகிறார், ஸ்ரீ பார்வதி.
இதில், இங்கிருந்தே அங்குள்ள மாணவர்களுக்கு எளிதாக வகுப்பெடுக்க முடியும். கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள கேமரா மூலம், அங்குள்ள மாணவர்கள் அதை நேரடியாக பார்க்க முடியும்; கலந்துரையாட முடியும். 'பவர் பாயின்ட்' மூலம் வகுப்பெடுப்பதால், மாணவர்களுக்கும் எளிதில் புரியும்.
தன்னுடைய இங்கிலாந்து தோழி மூலம், அங்கு தமிழ் வகுப்பெடுக்கும் இவர், தங்கள் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவு அதிகரிக்க முயற்சி எடுத்திருக்கிறார்.சரியான பாதையில்'பத்துக்கும் மேற்பட்ட கணிப்பொறி கொண்ட சிறப்பு வகுப்பறையை உருவாக்க வேண்டும் என்பதே, என் அடுத்த திட்டம். தகவல்களை திரட்டும் உத்தியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டால், அவர்கள் வாழ்வின் அடுத்தகட்டத்துக்கு எளிதில் சென்று விடுவர்.
'ஏனெனில், எப்போதும் கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்கும் வயது இது. இந்த பருவத்தில் அவர்களுக்கு சரியான தீனி கொடுத்து விட்டால், அவர்களின் நோக்கம் சரியான பாதையில் செல்லும்' என்கிறார், ஸ்ரீ பார்வதி.
அவரின் கனவு நிஜமாக, உங்கள் அனைவரின் சார்பாகவும் நாயகி வாழ்த்துகிறாள்!