தமிழகம் முழுக்க வீட்டுத்தோட்டம் அமைத்து தருவது மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள வெற்று நிலத்தை, இயற்கை விவசாய தளமாக மாற்றி வரும் பெருமை, 'ஆரண்யா' அல்லிக்கு உண்டு. இயற்கை விவசாயம் தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு கூட்டம், புதிய விவசாயிகளுக்கு வழிகாட்டி மற்றும் பயிற்றுவிப்பதுமாக இவருடைய நாட்கள் ஆரோக்கியமாக செல்கின்றன.பூச்சிக்கொல்லியும், வேதிப் பொருட்களும், ஆரண்யா அல்லிக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம், வாசலில் வைத்திருந்த, பூச்சிக்கொல்லி தெளிப்பான் கருவியை வைத்து விளையாடிய அவருடைய இளைய மகன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான். அப்போது தான், வேதிப்பொருட்களின் மற்றொரு முகத்தை அறிந்தார்.சாதாரணமாக, அந்த கருவியோடு விளையாடியதற்கே இந்த நிலைமை என்றால், அதை உட்கொள்ளும் மக்களின் வாழ்வு என்னவாகும் என்று எண்ணிய
வினாடியே, அவருடைய வாழ்க்கை, இயற்கை விவசாயம் பக்கம் திரும்பியது.பச்சை தாவரங்கள் மீது விருப்பம் கொண்டிருந்த, ஆரண்யா அல்லி, தன் குடும்பத்துக்காக, வீட்டுத் தோட்டத்தை அமைத்தார். அக்கம்பக்கத்திற்கு தெரிய வர, அவர்களும் அதை விரும்பினர். அது, நல்ல விளைச்சலை கொடுக்க, மாவட்டம் முழுவதும் பரவியது. வீட்டுத் தோட்டத்தின் அடுத்தபடியாக, வெற்று நிலங்களை வாங்கி விவசாயம் செய்தார்.
விவசாயம் ஏன் தோல்விகளை சந்திக்கிறது என்பதை ஆராய்ந்த ஆரண்யா அல்லி, தன்னுடைய பணத்தை செலவு செய்து, விவசாயத்தில் உள்ள பிரச்னையை கண்டறிந்தார். பின், தன் நண்பர் குமார் அம்பாயிரத்துடன் இணைந்து புதிய உத்திகளை கையாண்டார். குமார் அம்பாயிரம், நம்மாழ்வாரின் நேரடி மாணவர். நம்மாழ்வாரின் குறிப்பிடத்தக்க உத்தியான உழவின்றி விவசாயத்தை, இவர்கள் நடைமுறைப்படுத்தி காட்டினர். இதனால், விளைச்சலின் அளவு அதிகரித்ததுடன், தொடர் விவசாயம் நடக்கும் வழிமுறைகளையும் காட்டியது.விவசாய தளமாக மாற்றிய வெற்று நிலங்களில், கீரை வகைகள் மட்டும் பல ஆயிரக்கணக்கான ரூபாயில் வியாபாரம் நடக்கிறது.'லாபம் வராததால் மட்டுமே, விவசாயத்திலிருந்து விலகுகின்றனர் விவசாயிகள். அதில் புதிய உத்திகளை கையாண்டு, இயற்கை முறையை பின்பற்றினால், பெரும் லாபம் கிடைக்கும். இது, அவர்களின் வாழ்வாதாரத்துக்குரியது. இயற்கை விவசாயம் செய்தால், நட்டமே மிஞ்சும் என்கிற பொய் பிரசாரம் தொடர்ந்து பரப்பப்படுகிறது. 10 ஆயிரம் சதுர அடிக்கு, 1 லட்சம் ரூபாய் நீங்கள் செலவழித்தால், அடுத்த ஆறு மாதங்களில் அதை எளிதில் எடுத்து விடலாம்...' என்று நம்பிக்கை ஊட்டுகிறார். விளைநிலங்களில் விவசாய உத்திகளை கற்றுத் தருவதற்கு, சிறிய சன்மானம் பெறுகிறார்.