தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
எனக்கு சொந்த ஊர் கோவில்பட்டி; கணவருக்கு விளாத்திகுளம். பிழைக்கிறதுக்காக சென்னை வந்து 25 ஆண்டுகள் ஆயிருச்சு. சாலையோர காய்கறி கடை, டீ வியாபாரம், தள்ளுவண்டி இட்லி கடைன்னு உழைச்ச என் கணவர், வலது கை, கால் முடங்கி பேச்சு வராம ஒரு வருஷமா படுக்கையில கிடக்குறாரு!
டிசம்பர் 2020; வலிப்பு நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கிட்டார்; அப்புறம், சர்க்கரை நோயால வலதுகால் பெருவிரலை எடுத்தாச்சு. இப்போ, படுக்கைதான் அவருக்கு உலகம். அவரை பராமரிக்கிறதுலேயே என் பொழுது கரைஞ்சிடுது; இதனால, நான் பார்த்த கூலி வேலையையும் விட்டுட்டேன்!
தொடர் சிகிச்சையினால கையிருப்பு கரைஞ்சிருச்சு. அயப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் தர்ற மாத்திரைகள், ரேஷன் அரிசியில நாட்கள் நகருது. மாற்றுத்திறனாளி சான்றிதழ் கிடைச்சா உதவித்தொகை கிடைக்குமேன்னு, அவர் சிகிச்சை எடுத்துக்கிட்ட சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில மருத்துவ சான்றிதழ் கேட்டேன்; கிடைக்கலை!
இந்தமாதிரியான நோயாளிகளை அலைக்கழிக்காம மருத்துவ சான்றிதழையும், உதவித் தொகையையும் வீடு தேடி வந்து கொடுங்க; அதுதான் உண்மையான மக்களைத்தேடி மருத்துவம்.
- பக்கவாதம் பாதித்த கணவர் செல்வராஜிற்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்கும் மனைவி குருவம்மாள், அயப்பாக்கம், திருவள்ளூர்.