தோழியா, காதலியா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2012
00:00

""எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல... வா தீபிகா... வெல்கம். இன்னும் பத்து நாள்ல, நான் தாலி கட்டப் போற தேவதை, சொல்லாமக் கொள்ளாம முன்னால வந்து நிற்கும் போது, கையும் ஓடல, காலும் ஓடல... வெல்கம்.''
""சாரி அசோக்... இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு. வர்றதுக்கு முன்னால, உங்களுக்கு ஒரு போன் செய்திருக்கணும். நீங்க எங்கேயோ வெளிய கிளம்பிட்டு இருக்கீங்க போலிருக்கே?''
""இன்னும், நம்ம கல்யாண பத்திரிகை கொடுத்து முடியல... அதை இன்னிக்கு முடிச்சிரலாம்ன்னு நினைச்சேன்... அதுக்காகத் தான் இன்னிக்கு ஆபீசுக்கு லீவ் போட்டிருக்கேன்... இப்ப ஆரம்பிக்கறத, இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு ஆரம்பிச்சா ஒண்ணும் தப்பில்ல... உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லேன்னா, நீயும் என் கூட வரலாம். என் ப்ரண்ட்ஸ் எல்லாம் அசந்து போயிருவாங்க... பின்ன, கல்யாணப் பொண்ணும், மாப்பிள்ளையுமே நேர்ல வந்து கூப்பிட்டா?''
""நல்ல ஐடியா தான்... ஆனா, அதப்பத்தி பின்னால பேசுவோம். இப்ப உங்கக்கிட்ட வேற ஒரு விஷயம் பேசறதுக்காக வந்துருக்கேன்... பேசலாமா?''
""கட்டாயம்... ஆனா, அதுக்கு முன்னால, நீ என்ன சாப்பிடற சொல்லு... என் கையாலேயே தயாரிச்ச, ஒரிஜினல் தஞ்சாவூர் பில்டர் காபி வேணுமா... இல்லே ரிஸ்க் எடுக்க வேண்டாம்ன்னா, ரெடிமேட் கூல்ட்ரிங்க் கொண்டு வரட்டுமா?''
""எதுன்னாலும் ஓ.கே.,''
தூக்கலான வாசனையுடன், இரண்டு கப் காபியை, ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தான் அசோக். காபியை சுவைத்தவுடன், தனக்கு மனைவியாக வரப் போகிறவள், "வாவ்... சூப்பர் காபி...' என, பாராட்டப் போகிறாள் என்று நினைத்தான். ஆனால், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால், காபியை ரசிக்கும் மனநிலையில் இல்லை, தீபிகா.
""தீபிகா... நீ இன்னும் கல்யாண ஷாப்பிங்கை முடிக்கல போலிருக்கே... உங்கம்மா சொன்னாங்க. போற போக்கைப் பாத்தா, தாலி கட்டற அந்த நிமிஷம் வரைக்கும், உனக்கு ஷாப்பிங் வேலை இருக்கும் போலிருக்கே?''
""என்ன பண்றது அசோக்... நான் ஒரே பொண்ணு. இந்த ஊர்ல, சொந்த பந்தம்ன்னு அதிகம் கிடையாது. அதனால, எல்லா வேலையும் நான்தான் செய்ய வேண்டியதிருக்கு... அப்பா இதய நோயாளி, அம்மாவுக்கு ஆஸ்த்மா. அவங்கள அலைக்கழிக்க வேண்டாம்ன்னு, எல்லாத்தையும் நானே, என் தலைல போட்டு செய்துகிட்டு இருக்கேன்... அது போகட்டும், நீங்க, ஷாப்பிங்கை முடிச்சிட்டீங் களா?''
""ஓ... போன மாசமே முடிச்சிட்டேன். உன்னை மாதிரி, நானும் தனி மரம் தான். ஆனா, எனக்கு ப்ரண்ட்ஸ் நிறைய உதவினாங்க. அதான், சீக்கிரமா முடிக்க முடிஞ்சது.''
""உங்களுக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்களா?''
""நிறையன்னு இல்ல... ஆனா, இருக்கற கொஞ்சப் பேரு, எனக்காக எதுவும் செய்வாங்க!''
""அந்த மாதிரி ஒரு ப்ரண்டு தான், கல்யாணப் பொண்ணுக்கு புடவை தேர்ந்தெடுத்தாங்க போல இருக்கு... அவங்க தான், மாப்பிள்ளை டிரஸ்சையும் செலக்ட் பண்ணாங்க போல இருக்கே...''
தீபிகாவின் குரலில் தெரிந்தது, எகத்தாளமா, விரக்தியா என, அசோக்கால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
""நீ... பிரேமாவை சொல்றியா... ஆமாம்... அவ தான், இந்தக் கல்யாண வேலைய இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யறா... இன்னிக்குக் கூட, அவ எனக்காகத்தான் லீவு போட்டிருக்கா... நாங்க ரெண்டு பேரும் சேந்து போய், மிச்சம் இருக்கற பத்திரிகைய கொடுக்கலாம்ன்னு இருக்கோம். அது சரி, பிரேமாதான், உ<ன் புடவையை, "செலக்ட் ' செஞ்சான்னு உனக்கு எப்படி தெரியும்?''
""நீங்க அந்தப் புடவைய வாங்கினது, என்னோட பெரியப்பா பையனோட கடை... அவன் சொன்னான்.''
அதன் பின், எப்படி பேச்சைத் தொடருவது என, இருவருக்குமே தெரியவில்லை.
தீபிகா நிமிர்ந்து உட்கார்ந்து, தொண்டையை கனைத்துக் கொண்டது... அவள் ஏதோ, நெருடலான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறாள் என்பதை, அசோக்குக்கு உணர்த்தியது. அவனும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
""அசோக்... நான் எதையும் வெளிப்படையாப் பேசிப் பழக்கப்பட்டவ... நீங்க பொண்ணு பாக்க வந்தபோதே, உங்கக்கிட்ட நான் என்ன எதிர்பாக்கறேன்னு பட்டியல் போட்டுச் சொன்னேன்.
என்னோட கேள்வி, உங்கள காயப்படுத்தினா, என்னை மன்னிச்சிருங்க... ஆனா, பதில் சொல்லாம இருந்துறாதீங்க. இப்பவே சில விஷயங்கள்ல தெளிவா இருக்கறது, ரெண்டு பேருக்குமே நல்லது. பிரேமாவுக்கும், உங்களுக்கும் உள்ள உறவு என்ன?''
""தீபிகா... நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நாங்க ஒரே ஆபீசில் வேலை பாக்கறோம்... அதுவும் அடுத்தடுத்த சீட்ல... எனக்கு, அவள அஞ்சு வருஷமாத் தெரியும். அவளுக்கும் என்னை மாதிரி அரட்டை அடிக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். நாங்க நண்பர்கள்; அவ்வளவுதான்.''
அசோக்கின் குரலில் தென்பட்ட எரிச்சல், தீபிகாவைப் பாதிக்கவில்லை.
""நீங்க எதைப்பத்திப் பேசுவீங்கன்னு, நான் தெரிஞ்சிக்கலாமா?''
""பாரதியார் கவிதைகள், சாமர்சாட் மர்ம நாவல்கள், அல்டாஸ் ஹக்ஸ்லியோட எழுத்து, தீபா மேத்தாவோட படங்கள், ஷேர் மார்க்கெட், கிரிக்கெட் மேட்ச், ஆபீஸ்ல நடக்கற பாலியல் குற்றங்கள், "டிவி' யோட கேடுகள், இப்படி... எதப்பத்தி வேணும்ன்னாலும் பேசுவோம்.''
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவனையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் தீபிகா. அசோக்கிற்கு எரிச்சல் அதிகமாகியது.
""நீ, எதைத் தெரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கறியோ, அதைச் சொல்றேன்... பிரேமாவுக்கு கல்யாணம் ஆயிருச்சி... அவ என்னை விட அஞ்சு வயசு பெரியவ; அவளுக்கு ஆர்த்தின்னு, ஒரு பெண் குழந்தை இருக்கு; அதுக்கு பத்து வயசாகுது... ஆர்த்தியும் என்னோட ப்ரண்டு தான்.''
தீபிகாவின் வெறித்த பார்வை தொடரவே, அசோக்குக்கு கோபம் தலைக்கேறியது.
""இப்ப உனக்கு என்ன வேணும்... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல உடலுறவு இருக்கான்னு தெரிஞ்சிக்கணும்; அவ்வளவுதானே... எங்கம்மா மேல சத்தியமா சொல்றேன்... அந்த மாதிரி எதுவும் கிடையாது. எங்களுக்குள்ள இருக்கறது, ஒரு தூய்மையான நட்பு; ப்ளேட்டானிக் லவ்... பிரேமா மாதிரி, ஒரு தோழி கிடைக்கறது அபூர்வம். தீபு... நீ அவளோட பேசிப் பாறேன். நீயும் அவளோட ப்ரண்டாயிருவ. பாவம் பிரேமா... அவ புருஷன் ஏதோ பிசினஸ் செய்றாராம். அவனுக்கு பணம் ஒண்ணுதான் குறி. அவன் பிரேமாகிட்ட சரியாப் பேசுறதே கிடையாதாம்... பொண்டாட்டி, குழந்தைய வெளிய எங்கேயும் கூட்டிக்கிட்டுப் போறதில்லையாம்... அவங்களுக்குள்ள எந்த உறவும் இல்லையாம்... ஒரு நாள் பிரேமா, இதெல்லாம் சொல்லி அழுதா... நான் ஆறுதலாப் பேசினேன். அப்படியே... எங்க நட்பு ஆரம்பிச்சது. நீ எங்க உறவை சந்தேகப்படறியா
தீபிகா?''
இப்போது, தொலைவில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீபிகா . பின், அசோக்கின் முகத்தை பார்த்தாள்.
""இந்த நட்பு, நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் தொடருமா?''
""நிச்சயமா... வொய் நாட்... அது ஒண்ணும் தப்பான உறவு இல்லையே... அப்புறம், எதுக்கு அதை விடணும்?''
""அசோக்... எனக்கு சுத்தி வளைச்சி பேசத் தெரியாது... என்னால, உங்களுக்கும் பிரேமாவுக்கும் இருக்கற உறவை ஜீரணிக்க முடியல; அவ்வளவுதான்.''
""என்ன தீபிகா... ஒரு பெரிய கம்பெனில ஆபீசரா இருக்கற... நீ இப்படி படிப்பறிவில்லாத கிராமத்து பொம்பளை மாதிரி பேசலாமா... கம்ப்யூட்டர், இன்டர்நெட் காலத்துல, இப்படி ஆபீஸ்ல கூட வேலை பாக்கற பொம்பளை கூட, புருஷன் பேசக் கூடாதுன்னு சொன்னா, கேட்க நல்லாவா இருக்கு?''
""அசோக்... தயவு செஞ்சி என்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க... கூட வேலை பாக்கறவங்க கூட, பேசக் கூடாதுன்னா சொன்னேன்... என் கூடயும் ஆம்பளைங்க வேலை பாக்கறாங்க. நம்ம ரிசப்ஷன்ல எவ்வளவு ஆம்பளைங்க வர்றாங்கன்னு பாருங்களேன்...
""ஆனா, அது வேற... உங்க கூட வேலை பாக்கறவளோட நீங்க எதைப் பத்தி வேணாலும் பேசலாம்... எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம். ஆனா, அந்தப் பேச்சு, ஆபீஸ் நேரத்துக்கு, அப்பறமும் தொடர்ந்துச்சின்னா... அந்தப் பேச்சு, அவளோட செக்ஸ் லைப்பைப் பத்தி இருந்துச்சின்னா... நண்பருக்கு உதவி பண்றதுங்கறது, அவருக்கு மனைவியா வரப்போறவளுக்கு, கல்யாணப் புடவை எடுக்கறது வரைக்கும் வந்துச்சின்னா... அது பிரச்னைல கொண்டு போய் விட்டுரும்
அசோக்!
""நீங்க... அதை உண்மையான நட்பு, ப்ளேட்டானிக் லவ் அப்படின்னு சொல்லிக்கலாம். நீங்க ரெண்டு பேரும், ஊர் பூரா ஜோடியா சுத்தறதப் பாக்கற எங்க சொந்தக்காரங்க, என் ப்ரண்ட்சுக்குப் பதில் சொல்லி முடியல...
""நீங்க ரெண்டு பேரும் நடுராத்திரி வரைக்கும் பீச் மணல்ல உட்காந்துட்டு சாமர்செட் மர்ம கதையப் பத்தி ஆராய்ச்சி செய்றீங்கன்னு நான் நம்பறேன். ஆனா... மத்தவங்க நம்ப மாட்டேங்கறாங்களே... ஊரைப்பத்தி நான் கவலைப்பட மாட்டேன்னு விட்டேத்தியா இருக்க முடியாது அசோக்... நாளைக்கு நாமும் குடும்பம், குழந்தைன்னு... இதே ஊர்ல வாழணும் இல்லையா?''
""தீபிகா... வார்த்தையக் கொஞ்சம் அளந்து பேசு... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தப்பான உறவு இல்லைன்னு, அம்மா மேல அடிச்சி சத்தியம் செய்ததற்கு அப்புறமும், நீ இப்படிப் பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல.''
""ஒரு பொம்பளையோட மனசைப் புரிஞ்சிக்கற அளவுக்கு, ஆம்பளைங்களுக்கு எப்போ பரிணாம வளர்ச்சி ஏற்படப் போகுதுன்னு தெரியல அசோக்... நானும் வெளிப்படையாவே சொல்லிடறேன். ஒரு வேளை நீங்களும், பிரேமாவும் ஆபீஸ் விஷயமா, வெளியூர் போக வேண்டி வந்து... ஒரே ரூம்ல தங்கற சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமா, உங்களுக்குள்ள உறவு ஏற்பட்டுச்சின்னா... அதைக் கூட நான் பெரிசா நினைக்க மாட்டேன்... அது, உடம்புகளுக்குள்ள ஏற்படற சாதாரண உறவுதான்.
""ஆனா... நீங்க சொல்றதப் பாத்தா, நீங்களும், அவளும் உணர்வு பூர்வமா ரொம்ப நெருங்கிட்டீங்கன்னுதான் எனக்குத் தோணுது... உங்களால, ஒரு நாள் கூட, அவளைப் பாக்காம இருக்க முடியாது. அவளுக்கும் உங்கக்கிட்ட, ஒரு மணிநேரமாவது பேசாட்டி தூக்கம் வராது போல இருக்கே...
""உங்களுக்குள்ள இருக்கற நெருக்கத்துல, மூணாவது மனுஷியான எனக்கு, கொஞ்சம்கூட இடம் இல்லைன்னுதான் தோணுது... உங்க மனசுல, நீங்க எனக்குத் தர வேண்டிய முக்கியமான இடத்துல, அவ இருக்கா... உங்களுக்கு நடுவுல, என்னோட இடத்துக்கு முண்டியடிச்சி சண்டை போட்டுக்கிட்டு இருக்க எனக்குப் பிடிக்கல அசோக்...''
""தீபிகா... உன்னோட நாகரிகமான உடையையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும் பார்த்து, உனக்கு பரந்த மனசு இருக்கும்ன்னு எடை போட்டது என்னோட தப்புத்தான்... உன்னை விட, பிரேமாவோட புருஷன் எவ்வளவோ மேல். ஒரு நாள் நைட், 11 மணிக்கு நானும், பிரேமாவும் ஒரு ஓட்டல்ல உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோது, பிரேமாவோட புருஷன், அதே ஓட்டலுக்கு வந்துட்டான். நாங்க ரெண்டு பேரும் இருக்கறதப் பாத்துட்டு, "ஹாய்...'ன்னு சொல்லிட்டு, அவன் ப்ரண்டோட சாப்பிட போய்ட்டான். அவன் பக்கா ஜென்டில்மேன். நீயும் இருக்கியே...''
""இப்போ தேவையில்லாம, எதுக்கு பிரேமாவோட புருஷனை வம்புக்கிழுக்கறீங்க... நீங்கதானே சொன்னீங்க, அந்தாளுக்கு சம்பாதிக்கறது ஒண்ணுதான் குறின்னு. அப்படிப்பட்ட ஆளு, பொண்டாட்டிய தண்ணி தெளிச்சி விட்டிருக்கலாம். ஆனா, அந்த மாதிரி ஆளுகூட, உங்க ரெண்டு பேரோட உண்மையான நெருக்கத்தைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டா, சும்மா இருப்பாரான்னு சொல்ல முடியாது...
""வேணா ஒரு டெஸ்ட் பண்ணிப் பாப்போமா... பிரேமாகிட்ட சொல்லி, உங்களுக்குள்ள நடந்த அன்யோன்யமான சம்பாஷனைய, அவ புருஷன்கிட்ட சொல்லச் சொல்லுங்க... "தன்னோட தாம்பத்திய வாழ்க்கையப் பத்திக்கூட பேசினான்னு...' சொன்னீங்கல்ல அதை அப்படியே, அவளோட புருஷன்கிட்ட சொல்லச் சொல்லுங்க... அதை அவளால சொல்ல முடியும்ன்னா, உங்க நட்பு சாதாரண நட்புத்தான்... ஒத்துக்கறேன்.
""அசோக்... நான் திரும்பத் திரும்ப சொல்றேன். உங்களுக்குள்ள உடலுறவு இருக்குன்னு நான் சொல்ல வரல... ஆனா, இப்படி மனசளவுல ஒரு நெருக்கமான உறவு இருக்கும்போது, <உங்களால என்னை மனைவியா ஏத்துக்கிட்டு, எனக்குன்னு உரிய இடத்தக் கொடுக்க முடியுமான்னு தான் தெரியல...
"" நான் இன்னும், ஒரு படி மேல போயே சொல்றன்... பிரேமா அளவுக்கு நெருக்கமான, ஒரு ஆண் நண்பர் உங்களுக்கு இருந்தாலும் சரி... அதாவது, தினமும் ஒருத்தர ஒருத்தர் பாக்காம, பேசாம இருக்க முடியாதுங்கிற மாதிரி... அது கூட நம்ம மண வாழ்க்கையை நிச்சயமாய் பாதிக்கும். பிரேமாவோட புருஷன், இதை சாதாரணம்ன்னு நெனச்சு, அலட்சியம் பண்ணலாம். ஆனால், எனக்கு பயமா இருக்கு அசோக்... ரொம்பவே பயமா இருக்கு.''
""சரி தீபிகா... நீ முடிவா என்ன தான் சொல்ற?''
""ரொம்ப சிம்பிள். உங்களுக்கு தேவை நானா, இல்லை பிரேமாவோட நட்பான்னு, நீங்க தான் முடிவு செய்யணும்.''
இப்போது தான் நிஜமாகவே சிந்திக்க துவங்கினான் அசோக். பிரேமாவுடனான நட்பை குறித்து, அவன் இதுவரை தன் அம்மாவிடம் கூட பேசியது இல்லை. தீபிகாவின் கூர்மையான வாதங்கள், அவன் போட்டிருந்த வேஷங்களையும், மேலோட்டமான எண்ணங்களையும், தவிடுபொடியாக்கி, உண்மையை தோலுரித்து காட்டி
விட்டது.
பிரேமாவின் மேல், அவனது நகத்தின் நுனி கூட பட்டதில்லை என்பது உண்மை தான். அதனால் மட்டுமே, அது தெய்வீக நட்பு, தூய நட்பு என்று சொல்லிவிட முடியுமா? சரி... பிரேமாவை பார்க்காமல், அவளோடு அரை மணி நேரமாவது பேசாமல், ஒரு நாளாவது இருந்துவிட முடியுமா?
அப்படி இருக்கும் போது, இந்த மாதிரி நேர்மையான சிந்தனையும், கூர்மையான அறிவும் கொண்ட ஒரு பெண்ணைக் கைப் பிடித்தால், இன்னும் குழப்பம் தான் அதிகமாகும்... தொண்டையைக் கனைத்துக் கொண்டு, உணர்ச்சியற்ற, ஆனால், உறுதியான குரலில் பேச ஆரம்பித்தான்...
""என்னை மன்னிச்சிரு தீபிகா... பிரேமா ஜஸ்ட் ஒரு ப்ரண்டுதான்னு இதுவரைக்கும், என்னை நானே ஏமாத்திக்கிட்டு இருந்தேன். நீ, இப்போ வெளிப்படையா. "நானா, பிரேமாவா'ன்னு, கேட்கும் போது தான், பிரேமா இல்லாம நான் வாழ முடியாதுன்னு தெரியுது... அந்த பிரச்னையை எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல...
""ஆனா, அது என்னோட தலைவலி. இப்போதைக்கு நம்ம கல்யாணம் நடக்கறது சரியில்லைன்னுதான் எனக்கும் படுது. நான், எங்க சைடு ஆளுங்ககிட்ட சொல்லி சமாளிச்சிக்கறேன். நீ எப்படியாவது உங்கப்பா, அம்மா கிட்ட சொல்லி, இந்த கல்யாணத்த நிறுத்திரு. என்னை மன்னிச்சிரு தீபிகா... எனக்குள்ளேயே புதஞ்சி கிடந்த விஷயங்கள, நான் பாக்க வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்!''
இப்போது, அவனை உற்றுப் பார்த்தாள் தீபிகா. அவளது கண்களில் நீர் நிறைந்து விட்டது என்றாலும், குரல் கரகரக்காமல் தெளிவாகப் பேசினாள்...
""அசோக்... நான் உங்கள எவ்வளவு தூரம் காதலிச்சேன்னு என்னால உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நீங்க பொண்ணு பாத்துட்டு போனதுலேர்ந்து, <உங்களையே நினைச்சி, கற்பனையா <உங்க கூட வாழ ஆரம்பிச்சிட்டேன்.
""நமக்குப் பொறக்கப்போற குழந்தைக்கு, பேர் கூட தேர்ந்தெடுத்துட்டேன். இப்படி கல்யாணம் நின்னு போனது, தலைல இடி விழுந்த மாதிரி இருக்கு. ஆனா... ஒரு வேளை நமக்கு கல்யாணம் நடந்திருந்தா, என் நிலைமை இன்னும் மோசமா போயிருக்கும். எது எப்படியோ, உண்மைய தயக்கமில்லாம ஒத்துக்கிட்டதுக்கு
தேங்க்ஸ்.''
தீபிகாவின் உருவம், கண்ணில் இருந்து மறையும் வரை, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அசோக். காற்றில் சலசலத்துக் கொண்டிருந்த, தன் கல்யாண பத்திரிகை கவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டான். வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தான்.
""ஹாய் அசோக்... இன்விடேஷன் கொடுக்கக் கிளம்பலாமா?'' என்று கேட்டபடியே, வீட்டிற்குள்ளே நுழைந்தாள் பிரேமா.
***

வரலொட்டி ரங்கசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
asha - coimbatore,இந்தியா
19-மே-201214:51:55 IST Report Abuse
asha good story
Rate this:
Share this comment
Cancel
Sampath - Glasgow,இந்தியா
17-மே-201223:01:15 IST Report Abuse
Sampath I didn't have father. Before marriage (arranged), I told clearly that my mother is going to be with me only. that was my only condition and she agreed it. I didn't asked any dowry - simple marriage. After marriage, my wife d so many problems, ruined my life and career and finally made me mad person.
Rate this:
Share this comment
Cancel
nanban - nellai,இந்தியா
17-மே-201214:38:34 IST Report Abuse
nanban எனக்கும் ஒரு பொண்டாட்டி உண்டு.அவள் அம்மா வீடுதான் அவள் கதி. என் அம்மாவை நான் பார்த்தே கொஞ்ச வருஷம் ஆகிறது.மங்கை நீங்கள் சொல்வது அந்த காலம் அல்லது ரொம்ப rare. இப்போது எல்லாம் கணவன்தான் அம்மா வீட்டுக்கு போக முடியாது. போனால் நீங்கள் சொல்வது போல் நீ கல்யாணத்திற்கு சரியில்லை. அதனால் நான் கொஞ்சம் வேறு ரூட்டில் போகிறேன் என்று சொல்லும் சுதந்திர மங்கைகள்தான் அதிகம். உங்களை மாதிரி சுய சம்பாத்தியத்தில் வாழ்பவர்கள் இப்படி பேச எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் வீட்டில் இருந்து தின்று கொண்டு மனதுக்குள் அஜித்தையும் சூர்யாவையும் நினைத்து கொண்டு வாழும் நல்ல பெண்களுக்கு இப்படி கணவனுடைய உரிமையில் தலை இடும் உரிமை கிடையாது. அன்பு என்பது இரு புறமும் இருக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் கொடுத்து கொண்டே இருப்பது கேன தனம்.எப்போது பெட்டியை தூக்கி கொண்டு அனல் பறக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கிளம்புகிறானோ அப்போதே அவன் தன அன்பை காட்டி விட்டான்.இனி அவளுக்கு தேவை அன்பு அல்ல வேறு சில தொடுதல்கள். நீங்கள் சொல்வது அதுதான் எல்லா பெண்களுக்குமே இன்று தெரிகிறது தங்கள் நன்றாக ஈமாற்றுகிறோம் என்று.உங்களுக்கு ஓன்று தெர்யுமா அவ்வளவு இலஞ்சத்திற்கும் காரணம் அன்புதான். குடும்பத்தின் மீது வைத்த அன்புதான். அதனால் உங்களை போல் குடும்பங்களை உடைக்கும் மனிதர்கள் இருக்கும் வரை அன்புக்கு பொருள் காமம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X