கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள படுக்கை வரிசைக்கான எண்களை பிரிண்ட் செய்திட முடியுமா? எனக்கு வெட்டு வரிசைக்கான எழுத்துக்கள் தேவை இல்லை.
- சி.இஸ்மாயில், காரைக்குடி.
பதில்: சுருக்கமாக இதற்கு விடை அளிப்பதென்றால், முடியாது. படுக்கை வரிசை (Row) எண்களை மட்டுமே அச்சடிக்க முடியாது. எக்ஸெல், நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைக்கான எண்களையும் எழுத்துக்களையும் சேர்த்தே அச்சடிக்கும் வசதியைத் தருகிறது. எண்களை மட்டும் அல்ல. ஆனால், ஒரு சுற்று வழியில் இதனை மட்டும் அச்சடிக்கும்படி செய்திட லாம். உங்கள் ஒர்க் ஷீட்டில் உள்ள column A க்கு முன்னால், ஒரு நெட்டு வரிசையை இணைக்கவும். அதன் பின்னர், அதற்கான் செல் ஒவ்வொன்றிலும், =ROW() என்ற பார்முலாவினைப் பயன்படுத்தவும். இந்த பார்முலா, படுக்கை வரிசைக்கான எண்ணை இந்த நெட்டு வரிசையில் அமைக்கும். பின்னர், அச்சடிக்கையில், இதனை எப்படி சேர்க்க வேண்டுமோ அதன் படி சேர்த்து அச்சில் எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: போல்டர் ஒன்றில், சில பைல்களை மட்டும் விடுத்து, அதிகமான எண்ணிக்கையில் மற்றவற்றைக் காப்பி செய்கையில், கண்ட்ரோல் கீ அழுத்தி பைல் தேர்ந்தெடுத்தாலும், முயற்சி வீணாகிறது. இதற்கு வேறு வழி உள்ளதா?
- என். சண்முகம், செங்கல்பட்டு.
பதில்: இந்த பிரச்னை பலருக்கு ஏற்படு வது உண்டு. சில பைல்களை மட்டும் விடுத்து, மற்ற அனைத்தையும் ஒரு சிடி அல்லது வேறு ஒரு போல்டரில் காப்பி செய்திட முயற்சிப்போம். அப்போது, தேவையான பைல்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில், கண்ட்ரோல் கீயினைப் பயன் படுத்தி செயல்படுத்தும் போது, சிறிய தவறு செய்தாலும், தேர்ந்தெடுத்த பைல்கள் விடுபட்டுப் போகும். பின்னர், மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். இதற்கு வேறு இரு வழிகள் உள்ளன.
விண்டோஸ் எக்ஸ்புளோரரில் முதலில் சம்பந்தப்பட்ட போல்டர் செல்லவும். ஒதுக்கப்பட வேண்டிய பைல்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பின், அவற்றை முதலில் கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு தேர்ந்தெடுக்கவும். பின்னர், Edit மெனு செல்லவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Invert Selection என்ற பிரிவில் கிளிக் செய்தால், நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த, வேண்டாத பைல்கள் இல்லாமல், மற்ற பைல்கள் தேர்ந்தெடுக்கப்படும். இப்போது நீங்கள் விரும்பிய வகையில் அவற்றைக் கையாளலாம்.
இன்னொரு வழியும் உண்டு. போல்டர் திறந்தவுடன், Ctrl+A (கண்ட்ரோல் +ஏ) அழுத்தி அனைத்து பைல்களையும் தேர்ந் தெடுக்கவும். அனைத்தும் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையில், கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு, தேவையற்ற பைல்கள் மீது ஒவ்வொன்றாக கிளிக் செய்திடவும். இந்த பைல்கள் தேர்வு நீக்கப்பட்டு, உங்களுக்குத் தேவையான பைல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.
கேள்வி: அண்மையில் 32 ஜிபி அளவிலான யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்று வாங்கினேன். என் விண்டோஸ் 7 சிஸ்டம் கம்ப்யூட்டரில் போட்டு அதன் அளவைப் பார்த்த போது, 32,027,770,880 பைட்ஸ் எனப்போட்டு, தொடர்ந்து 29.8 ஜிபி எனக் காட்டியது. அப்படியானால் நான் ஏமாற்றப்பட்டு விட்டேனா? பிளாஷ் ட்ரைவ் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தினுடையது.
- ஆ.ஹேமா தினகரன், திருநெல்வேலி.
பதில்: யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், ஹார்ட் ட்ரைவ் மற்றும் பிற ஸ்டோரேஜ் ட்ரைவ் ஆகிய அனைத்தும் பைட்ஸ்களில் (Bytes) அளவிடப்படுகின்றன. இதில் பிரச்னை என்னவென்றால், மெகாபிட்ஸ், கிகா பிட்ஸ் போன்ற அளவுகள் எல்லாம், கம்ப்யூட்டர் மற்றும் ஸ்டோரேஜ் ட்ரைவ் தயாரிப்பாளர் களுக்கிடையே ஒரே மாதிரியாக இல்லை. கம்ப்யூட்டர் ஒரு மெகா பைட் 1024 கிலோ பைட்ஸ் என்கிறது. எனவே 1 மெகா பைட் என்பதைச் (பத்து லட்சம் பைட்ஸ்) சரியாகச் சொல்வது என்றால், 1,084,576 பைட்ஸ் ஆகும். எனவே 32 கிகா பைட்ஸ் பெற, நீங்கள் 1024 (பைட்ஸ்) #1024 (கிலா பைட்ஸ்) #32 (கிகா பைட்ஸ்) எனப் பெருக்கிப் பார்க்க வேண்டும். இது 34,359,738,268 பைட்ஸ் என்பதைக் கொடுக்கும். இருப்பினும், கம்ப்யூட்டருக்கான ஸ்டோரேஜ் ட்ரைவ்களைத் தயாரிப்பவர்கள் சாதுர்யமாக, ஒரு கிகா பைட் என்பதனை “billion” பைட்ஸ் எனக் கூறி விடுகின்றனர். எனவே, எதற்கு நீங்கள் கொடுத்த பணத்திற்கு மேலாக பைட்ஸ் தர வேண்டும் என்ற இலக்குடன், அவர்கள் சொல்வதன் அடிப்படையில் பைட்ஸ் கணக்கிட்டு ஸ்டோரேஜ் டிவைஸ் தருகின்றனர். இந்த இண்டஸ்ட்ரியைப் பொறுத்த வரை, இந்த பைட்ஸ் அளவினை இரட்டைப் படை எண்களில் தருவதே வழக்கம். ஆனால், கம்ப்யூட்டர்கள் துல்லியமாகக் கணக்கிடுகையில், இது கூறப்பட்ட அளவினைக் காட்டிலும் குறைவாகவே காட்டுகிறது. எனவே, நீங்கள் 32 ஜிபி ஸ்டோரேஜ் டிவைஸ் ஒன்றை வாங்குகையில், அதனைத் தயாரித்தவர் உங்களுக்கு, அவர் கணக் கின்படி 32,000,000,000 பைட்ஸ் தந்துவிடு கிறார். கம்ப்யூட்டர் அதன் கணக்கின்படி குறைவான ஜிபியாகக் காட்டுகிறது. இரண்டுமே சரிதான். நாம் தான் இந்தக் கணக்குகளைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம்.
கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். என் டாஸ்க் பாரில், வால்யூம் செட் செய்வதற்கான ஐகான் மறைந்துள்ளது. இல்லை. இதனை மீண்டும் கொண்டு வருவது?
- என்.டி. அனீத் குமார், மதுரை.
பதில்: மிக எளிதாகக் கொண்டு வந்துவிடலாம். ஸ்டார்ட் அழுத்தி, மேலாக உள்ள சிறிய கட்டத்தில் Systems Icon என டைப் செய்திடவும். இப்போது அனைத்து ஐகான்களும் பட்டியலிடப்படும். இப்போது, Customize Icons on the Taskbar என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில், Turn System Icons on or off என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த கடைசி விண்டோவில், வால்யூம் என்பதற்கு அருகே உள்ள, கீழ்விரி மெனு கட்டம் On என்பதில் இருப்பதை உறுதி செய்திடவும்.
இதனை முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இப்போது நீங்கள் கேட்ட வால்யூம் ஐகான் டாஸ்க் பாரில் இருப்பதைக் காணலாம்.
கேள்வி: ஹார்ட் டிஸ்க் டிபிராக் செய்வது அவசியமா? சிலர் தேவை இல்லை என்றும், ஒரு சிலர் தாங்கள் இதுவரை டிபிராக் செய்திடவே இல்லை என்றும் ஹார்ட் டிஸ்க் அந்த நிலையிலும் நன்றாகவே செயல்படுகிறது என்றும் கூறுகின்றனர். இதில் எது சரி?
-கே.தீனதயாளன், சென்னை.
பதில்: இதற்குப் பதில் கூறும் முன், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எப்படி எழுதப் பட்டு ஸ்டோர் செய்யப்படுகின்றன என்ப தனைச் சுருக்கமாக விளக்குகிறேன். உங்கள் ஹார்ட் ட்ரைவ் சில பிரிவுகளால் (செக்டார் மற்றும் பிளாக்குகளால்) ஆனது. அலுவலகம் ஒன்றில் நாம் பயன்படுத்தும் போல்டர்கள், கேபினட்டுகள் போன்றவை இவை. இதில் பைல் ஒன்றைப் பதிந்து சேவ் செய்திட நாம் கட்டளை தருகையில், கம்ப்யூட்டர், ஹார்ட் ட்ரைவில் இடம் தேடுகிறது. மிகத் திறமையாக இருக்கும் இடத்தைப் பயன்படுத்தவும், பின் ஒரு முறை அதே பைலை நீங்கள் தேடுகையில் எளிதாகக் கண்டறியவும், அந்த பைலைப் பல பாகங்களாகப் பிரித்து, எங்கெல்லாம் இடம் உள்ளதோ, அங்கெல்லாம் பதிந்து வைக்கிறது. இதனால், ஒரு பொருளாக இருந்த ஒரு பைல், ஹார்ட் ட்ரைவின் பல பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவு களாக எழுதப்படுகிறது. இந்த பைலை நீங்கள் மீண்டும் பார்க்க எண்ணுகையில், கம்ப்யூட்டர் அதனை எத்தனை இடத்தில் தேடிப் பார்த்து இணைத்துத் தர வேண்டும் என்பதனையும் ஓர் இடத்தில் எழுதி வைத்து, அவ்வாறே இயங்குகிறது. சரி, ஹார்ட் ட்ரைவிற்குத்தான் பைல் எப்படி எங்கெல் லாம் உள்ளது என்று தெரியுமே? பின் ஏன் டிபிராக் செய்திட வேண்டும் என எண்ணு கிறீர்களா? இரண்டு முதன்மைக் காரணங் கள் உள்ளன. முதலாவதாக வேகம்; இரண்டாவதாக தேய்மானம். ஓரிடத்தில் பைல் ஒட்டுக் கோப்பாக இருந்தால், ஒரே முயற்சியில் எடுக்கலாம். பல இடங்களில் தேடி எடுக்கையில், அதற்கான நேரம் அதிகம். வேகம் தடை படுகிறது. இரண்டா வது தேய்மானம். ஹார்ட் டிஸ்க்கின் படிக்கும் ஹெட் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று தேடுவதால், அதன் தேய்மானம் அதிகமாகிறது. டிபிராக் செய்கையில், பைல்கள் படிக்கப்பட்டு, கூடுமானவரை ஒரே இடத்தில் வரிசையாகப் படிக்கப் படுகின்றன. எனவே வேகம் மட்டுப்படு வதில்லை; தேய்மானமும் குறைகிறது.
டிபிராக் செய்வதற்கு விண்டோஸ் சிஸ்டத்திலேயே வசதி இருந்தாலும், என் அனுபவத்தில் http://www.piriform.com/defraggler என்ற முகவரியில் கிடைக்கும் இலவச புரோகிராமான டிபிராக்ளர் (defraggler) பயன்படுத்துவது எளிதாக உள்ளது.
கேள்வி: கீ போர்டின் மெயின் பகுதியிலிருந்து கைகளை எடுக்காமல், ஆரோ கீகளைப் பயன்படுத்தாமல், எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல்களுக்கிடையே செல்ல முடியுமா?
- அழ. நாச்சியப்பன், பள்ளத்தூர்.
பதில்: தாராளமாகச் செல்லலாம். ஒரு சிலர் கீ போர்டில் உள்ள கீகளைப் பயன்படுத்தியே அனைத்து வேலைகளையும் முடிக்க விரும்புவார்கள். அவர்களுக்கான உதவித் தகவல் இது.
என்டர் (Enter) அழுத்த, கர்சர் ஒரு செல் கீழாக இறங்குகிறது
ஷிப்ட் + என்டர் (Shift + Enter) அழுத்த ஒரு செல் மேலாகச் செல்லும்
டேப் (Tab) அழுத்த வலது பக்கம் ஒரு செல்லுக்கு கர்சரை நகர்த்தலாம்
ஷிப்ட் + டேப் (Shift + Tab) அழுத்தினால் கர்சர் இடது பக்கம் ஒரு செல்லுக்கு நகரும்.
கேள்வி: வேர்டில் ஒரு பெரிய டேபிள் ஒன்று உருவாக்கிய பின்னர், அதனை முழுமையாகத் தேர்ந்தெடுக்க எளிய வழி என்ன?
-டி. சுகன்யா, விருதுநகர்.
பதில்: கர்சரை டேபிளின் உள்ளே வைத்து பின் Alt கீயை அழுத்திக் கொண்டு numeric keypad–ல் 5 என்ற கீயை அழுத்தவும். இவ்வாறு அழுத்தும்போது Num Lock கீ அழுத்தப்பட்டு அணைக்கப்பட்டிருக்க வேண்டும். மவுஸால் டேபிளை செலக்ட் செய்திட விரும்பினால் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு டேபிளில் எங்காவது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும்.