நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசையில் வர இருக்கும் ஆஷா 306 குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனுடன் சேர்த்து ஆஷா பெயரில் பத்து மாடல்களை நோக்கியா கொண்டு வந்துள்ளது. ஆஷா 306 ஏறத்தாழ மாடல் 305ல் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இரண்டு சிம் இயக்கத்திற்குப் பதிலாக ஒரு சிம் இணைப்பு மட்டுமே இதில் தரப்படுகிறது. ஆனால் 305ல் இல்லாத வைபி இணைப்பு இதில் கிடைக்கிறது. புதியதாக மாற்றி வடிவமைக்கப்பட்ட தொடு திரை இடைமுகம், ஏறத்தாழ ஒரு ஸ்மார்ட் போன் அனுபவத்தினைத் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கட்டுபடியான விலையில், குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் அனுபவத்தினைத் தரும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நோக்கியா செயல் இயக்குனர் நீல் மாஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போனின் சில சிறப்பான அம்சங்கள்:
3 அங்குல WQVGA ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், ஆஷா டச் இடைமுகம், 2 மெகாபிக்ஸெல் கேமரா, GPRS/ EDGE, WiFi நெட்வொர்க் தொழில் நுட்பம், மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, தெளிவாக ஒலி தரும் இணைந்த ஸ்பீக்கர், நோக்கியா லைப் டூல்ஸ், 10 எம்.பி. உள் நினைவகம், 32 ஜிபி அளவிற்கு நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 2 ஜிபி மைக்ரோ எஸ்.டி.கார்ட், 3.5 மிமீ ஹெட் செட் ஸ்லாட் மற்றும் 25 நாட்கள் தொடர்ந்து மின் சக்தியினைத் தக்க வைத்து, 14 மணி நேரம் தொடர்ந்து பேசிட, 1110 mAh திறன் கொண்ட பேட்டரி.
சில்வர் வெள்ளை, சிகப்பு, மத்திமமான நீலம் மற்றும் டார்க் கிரே என நான்கு வகை வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும். இதன் பரிமாணம் 110.3 x 53.8 x 12.8 மிமீ. எடை 96.3 கிராம். அறிமுகச் சலுகையாக 40 கேம்களை இலவசமாக டவுண்லோட் செய்திடும் வசதியை நோக்கியா அளிக்கிறது. இதன் விலை உத்தேசமாக ரூ.4,700 ஆக இருக்கலாம்.