உங்களுடைய கம்ப்யூட்டரின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! அல்லது உங்களிடம் இருக்கும் டிவி, டிவிடி பிளேயர் போன்ற டிஜிட்டல் சாதனங்களின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! இல்லை என்றால் கவனியுங்கள். இந்த சீரியல் நம்பர்கள் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஸ்டாக் நிலையை அறியப் பயன்படுகிறது என்றாலும் பல வேளைகளில் அதனைப் பயன்படுத்துவோருக்கும் தயாரித்தவருக்கும் சில பிரச்னைகளைத் தெளிவாக அறிய அது பயன்படுகிறது. தொழில் நுட்ப ரீதியாக உங்களுக்கு நிறுவனம் உதவிட இந்த சீரியல் நம்பர் பயன்படும். உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதேனும் ஒரு உதிரி பாகம் புதியதாகத் தேவைப்படுகிறது என்றால் அதன் தன்மையை அறிய இந்த சீரியல் நம்பர் உதவிடும். இந்த நம்பர் எங்கிருக்கும்? கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் பிரிண்டர் போன்ற சாதனங்களில் பின்புறம் அல்லது அடிப்பாகத்தில் இருக்கும்.
இதனை முழுமையாகக் குறித்து வைத்துத் தேவைப்படும்போது அதனை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். இதே போல பல சாப்ட்வேர் தொகுப்புகளும் அவை தரப்படும் சிடி அல்லது சிடிக்களின் கவரில் இந்த சீரியல் நம்பரைத் தந்திருக்கும். நாம் வெகு விரைவில் இந்த சிடி கவர்களை மாற்றிப் பயன்படுத்துவோம் என்பதால் வாங்கியவுடனேயே இதனைப் பார்த்து எழுதிப் பத்திரப்படுத்த வேண்டும். வரப்போகும் காலத்தில் மனிதர்களுக்கும் இது போல சீரியல் நம்பர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போது ஒவ்வொருவரும் பயன்படுத்தும் செல் போனின் எண்ணையே கூட மனிதரின் சீரியல் எண்ணாகப் பயன்படுத்தலாமே!